‘இந்தோ - ஐரோப்பியன்’ என்ற சொல், ஒரு இனமொழிகளுக்கு உரிய பெயராக பொ.ஆ.18-ம் நூற்றாண்டில் சூட்டப்பட்டது. இச்சொல், இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைத்துள்ளதால், இவ்விரு இடங்களிலும் பெருவாரியாகப் பேசப்படும் மொழிகளைச் சுட்டி நிற்கிறது. இது ஐஸ்லாண்டிக் மொழி பேசப்படும் ஐஸ்லாந்து முதல் அனைத்து ஐரோப்பா - ஆசியா உள்பட இந்தியாவின் கிழக்கெல்லையான அசாமி மொழி பேசப்படும் அசாம் மாநிலம் வரையும், தெற்கே இலங்கை, மாலத்தீவுகள் உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பில் பேசப்படும் ஒரு இனமொழிகளைக் குறிப்பதாகும். துவக்கத்தில், இம்மொழிக் குடும்பத்தை ஜெர்மானிய அறிஞர்கள் ‘இந்தோ - ஜெர்மானிய மொழிகள்’ என்றும் குறிப்பிட்டனர். மாக்ஸ் முல்லர் இதனை ‘ஆரியன் மொழிகள்’ எனக் குறிப்பிட்டார். யூரல் மக்கள் ஆசியா மைனர் பகுதியில் குடியேறிய பிறகு ஹிட்டடைட் மொழி உருவானது கொண்டும், அண்மைக் காலங்களில் ஹிட்டடைட் மொழி பற்றிய அறிவு வளர்ந்துவரும் நிலையில், ‘இந்தோ - ஹிட்டடைட் மொழிகள்’ என்றும் அழைக்கத் தலைப்பட்டுள்ளனர். உலகளவில் ‘இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்’ என்பதே பரவலாகக் கையாளப்படுகிறது. ஒரு மொழியாகத் தொடங்கிய இம்மொழி, இன்று 11 பெரும் பிரிவுகளாகவும், 140-க்கும் அதிகமான மொழிகளாகவும் கிளை பிரிந்து வளர்ந்து காட்சியளிக்கிறது. கிரீக், லத்தீன், லத்தீனின் பேச்சு வழக்கில் இருந்து உருவான ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ருமேனியன், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யன், ஸ்லாவிக், பால்டோ, சிலாவிக், அல்பேனியன், ஆர்மீனியன், இந்தியாவின் வடமொழி மற்றும் இவற்றின் கிளைமொழிகள் இம்மொழிக் குடும்பத்தில் அடங்கும்.