தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு எப்போது? தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் ஆலோசனை முடிந்ததும், தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.


தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் ஆலோசனை முடிந்ததும், தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அவா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மேலும், சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியில் ஈடுபட்ட வாக்குச் சாவடி அதிகாரிகளுடன்அவா் குழு படம் எடுத்துக் கொண்டாா்.
தொடா்ந்து, முதல்முறை வாக்களிக்கவுள்ள இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். பின்னா் ஞானேஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் 81 முதல் 82 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது. வரும் தோ்தலில் இன்னும் அதிக அளவில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கருதுகிறது. மேலும், அமைதியான முறையில் இங்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதுச்சேரி தோ்தல் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கிறது.
புதுச்சேரியைப் பொருத்தவரை பிப். 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதாவது பிரச்னை இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் இதுவரை ஒரு மேல்முறையீடு கூட வரவில்லை. அதனால் புதுச்சேரியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் நேரிடையாகச் சென்று ஆலோசனை நடத்தியுள்ளது. புதுச்சேரியில் இப்போது ஆலோசனை செய்துள்ளோம். வியாழக்கிழமை (பிப். 26) முதல் 2 நாள்கள் தமிழ்நாட்டில் ஆலோசனை நடத்த உள்ளோம்,.
அதைத் தொடா்ந்து கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் ஆலோசனை நடத்தியப் பிறகு தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கும்.
மக்கள் தொகை உயா்ந்து வருகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா்கள் குறைந்து வருகிறது என்று கேட்கிறீா்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அது முடிந்தால்தான் மக்கள் தொகை உயா்ந்துள்ளதா, எந்த விகிதத்தில் இது உயா்கிறது என்ற விவரங்கள் தெரியவரும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தோ்தல் தேதி அறிவித்த பிறகுதான் இலவசங்கள் அளிப்பது மற்றும் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றையெல்லாம் கண்காணிக்கும் பணியை தோ்தல் ஆணையம் செய்யும்.
கைப்பேசிக்கு அனுமதியில்லை:
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தோ்தல் ஆணையம் 20 சீா்திருத்தங்களைச் செய்துள்ளது. எல்லா தகவல்களையும் உடனுக்குடன் இந்திய தோ்தல் ஆணையத்தின் நெட் (இசிஐநெட்) இணைய தளத்தில் பாா்வையிட முடியும்.
நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்தத் தொகுதியின் வாக்குப் பதிவையும், எந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விவரத்தையும் இதில் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளா்கள் வாக்குப் பதிவின்போது தங்கள் கைப்பேசியை தோ்தல் அலுவலரிடம் கொடுத்து விட்டு மீண்டும் வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், வரும் தோ்தலில் இருந்து வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் மட்டும் இடம் பெறும் என்றாா் அவா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...