தாமதித்தால் பெரும் பாதிப்பு
மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நிகழ்த்திய எட்டு நிமிட உரை இப்போது இணையதளத்தில் விரைவாகப் பலராலும் பார்த்து பகிரப்படுகிறது.


மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நிகழ்த்திய எட்டு நிமிட உரை இப்போது இணையதளத்தில் விரைவாகப் பலராலும் பார்த்து பகிரப்படுகிறது. இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுங்கோல் ஆட்சி புரிந்த பிரிட்டன், தான் இழைத்த கொடுமைகளுக்கு எந்த அளவுக்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும், நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்பதைப் பற்றிய விவாதம்.
பிரிட்டிஷ் அரசை வழிநடத்திய கிளாட்ஸ்டோன், சர்ச்சில் போன்ற முந்தைய தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து மறுக்க முடியாத நடந்த நிகழ்வுகளை வைத்தும், புள்ளிவிவரங்கள் மூலமும் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தி கூடியிருந்தவரின் கரகோஷத்தைப் பெற்றது இந்தியர் என்ற வகையில் நம் எல்லோருக்கும் பெருமை.
பிரிட்டன் ஆட்சியைக் கைப்பற்றியபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 23 சதவீதம் உயர்ந்து இருந்தது. மோசமான அடக்குமுறையால் உற்பத்தி சரிந்து ஏழை நாடானது என்பதை ஆதாரங்களோடு விளக்கினார்.
நெசவுத் தொழில் நலிந்தது, விவசாயம் சரிந்தது, பஞ்சம் தாண்டவமாடியது. இங்கிருந்து மூலப்பொருளை ஏற்றுமதி செய்து அவர்களது தொழிற்சாலைகளை வளர்ச்சியடையச் செய்து தயாரிக்கப்பட்ட பொருள்களை இந்தியர்கள் மீது திணித்து ஆங்கிலேயர் லாபம் பார்த்தனர்.
அந்தக் காலகட்டத்தில்தான் விளைநிலத்தை சுருங்கச் செய்யும் கொடிய தாவரமான சீமைக் கருவேலம், வேலிக்காத்தான் என்ற போர்வையில் நிலங்களில் பரவியது. நில வளத்தை அழிக்கும் இந்தச் செடியின் பூர்வீகம் ஐரோப்பிய நாடான ஸ்பெயின். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஐரோப்பியர்கள் காலனி நிறுவியபோது இந்தச் செடியும் புலம் பெயர்ந்தது.
இந்தியாவில் விவசாயத்தை நசுக்க வேண்டுமென்றே ஆங்கிலேயர் இதைப் பயிரிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும், ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இது நாடெங்கிலும் பரவியது. வட நாட்டில் விதேசி பாபுல் என்றும், கர்நாடகத்தில் பல்லாரி ஜாலி என்றும், ஆந்திரத்தில் முள்ள தும்மா என்றும் கருவேலம் அழைக்கப்படுகிறது. விதேசி என்றாலே வெளிநாடு. அதை அப்படியே மொழி பெயர்த்து சீமைக் கருவேலம் என்கிறோம்.
சீமைக் கருவேலம் அதிவேகமாக பரவக் கூடியது. பூமியில் இருக்கக் கூடிய நீரை அப்படியே உறிஞ்சி விடும். பூமியில் நீர் கிடைக்காவிட்டாலும் காற்றில் உள்ள ஈரப் பதத்தை வைத்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.
கருவேலம் தாவர வகையில் புரோசோபிஸ் ஜீலிப்ளோரா இனத்தைச் சேர்ந்தது. நிலத்தை வேறு பயிருக்கு லாயக்கில்லாமல் ஆக்குவதற்கே இந்த நச்சு செடி பரப்பப்பட்டது என்பது ஒரு புறம் இருக்க, வெப்ப நிலையிலும் வளரக் கூடிய கருவேலம் எரிபொருளாகவாவது மக்கள் துயர் துடைக்கப் பயன்படும் என்று பயிரிடப்பட்டது என்ற தகவலும் உண்டு.
மிகுந்த வெப்ப நிலையிலும் பச்சை பசேலென்று காணப்படும் கருவேலம், தண்ணீர் பதம் எங்கு இருந்தாலும் அதை உறிஞ்சக் கூடிய சக்தி இந்தச் செடிக்கு உண்டு. இதன் வேர் எழுபது, எண்பது அடி வரை ஊன்றிக் கொள்ளும் தன்மையால் பூமிக்கடியில் உள்ள நீரை உறிஞ்சி விடும்.
ஒரு முப்பது அடி பரப்பில் விரிந்து படரக் கூடியது. மொத்தத்தில் கொஞ்ச நஞ்ச தண்ணீர் எங்கு இருந்தாலும் அதை உள்கொண்டு நிலத்தடி தண்ணீருக்கு சமாதி கட்டி விடும். இது காலப்போக்கில் நிலத்தைக் காயடித்து விவசாயத்தை பாதிக்கும். எங்கு தண்ணீர் பதம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் கருவேலம் படர்ந்திருப்பதைக் காணலாம்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மழை குறைவாக பெறும் மாவட்டங்களில்தான் அதிகமாகக் கருவேலம் பரவலாக உள்ளது. சட்டம் - ஒழுங்குப் பிரச்னை எப்போது தலை தூக்கும் என்றால் மக்களின் பொருளாதாரம் நிலைகுலைந்தால் என்பது அனுபவ உண்மை.
அதுவும் ஜாதி பிரச்னைகள் பரவ காத்திருக்கும் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, இளையான்குடி, உசிலம்பட்டி, சேத்தூர், பதினெட்டுப்பட்டி போன்ற இடங்களில் விவசாயத்தையே நம்பியிருக்கும் மக்களின் நிலம் உலர்ந்தால் வன்முறை என்ற பயிர்தான் விளையும்.
நிலத்தை உலர வைத்து தனக்குத் தண்ணீரை அபகரித்துக் கொள்ளும் கொடிய செடி கருவேலம். முதுகுளத்தூர் வட்டம், கருமல் என்ற இடத்தில் மட்டும் 35 ஏக்கர் பரப்பில் கருவேலம் உள்ளது. கீழ்மதுரை கண்மாய், கரிசல்குளம் ஏரிக்கரைகளில் மூவாயித்துக்கும் மேற்பட்ட கருவேலம் மரங்கள் உள்ளன.
அந்தனேரி, விளாங்குடி, கொடிக்குளம், செல்லூர், அனுப்பானடி உள்ளிட்டவை கருவேலத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட கிராமங்கள். இப்பகுதிகளில் மட்டும் நாற்பதாயிரம் ஹெக்டேர் நிலம் கருவேலத்தின் பிடியில் பாழடைந்துள்ளன.
சீமைக் கருவேலம் நிலத்தடி தண்ணீரை விரைவாக உள்கொள்வது மட்டுமன்றி, ஒரு கிலோ பயோ (bio) பொருண்மைக்கு நான்கு லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்கிறது.
வெகு விரைவில் காளான் போல் பரவிவிடுகிறது. உயிரகமான பிராண வாயுவை குறைவாகவும், நச்சு வேதிப் பொருளான கரியமில வாயுவை அதிகமாகவும் வெளிவிடுவதால் பறவைகள் கருவேல மரத்தை நாடுவதில்லை. அது மட்டுமன்றி பூமியில் உள்ள சத்துக்களை முழுமையாக அழித்துவிடுகிறது.
காற்றின் ஈரப் பதத்தையும் விட்டுவைக்காததால், வரக்கூடிய சொற்ப மழையும் பொய்த்துவிடும். இந்த மரத்தை வெட்டி கரித் தூளாக்கலாம். ஆனால், விளைநிலம் கரிக்காடாகி விடுவது எந்தவிதத்தில் நல்லது?
மொத்தத்தில் தன்னலம் காத்து பொதுநலம் பழித்து சமுதாயத்தில் வளைய வரும் சுயநலவாதிகள் போல் தாவர உலகில் சீமைக் கருவேலம் தழைக்கிறது! அதை வேரோடு வெட்டி அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
பார்த்தீனியம் இன்னொரு கொடிய தாவர வகை. இதை வேரோடு களைய வேண்டும் என்று 2011-இல் அரசு ஆணையிட்டது. மெக்சிகோவிலிருந்து தருவிக்கப்பட்ட பீட்டில் பக் என்ற காளான் கொல்லி விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டம் வகுக்கப்பட்டது. உப்பு நீரை பரவலாகத் தெளித்தாலும் இது அழிந்து விடும், இது இன்னொரு எளிய முறை.
இது பயிர் விரோதி மட்டுமல்ல, சொறி, சிரங்கு, மூச்சிரைத்தல், ஆஸ்துமா போன்ற நோய்கள் பீடிக்க காரணமாகிறது. விவசாயிகள் நலனுக்காக அரசு தீட்டிய ஒருங்கிணைந்த விளை நிலம் அபிவிருத்தி திட்டங்களை களப் பணியாளர்கள் சிரத்தையோடு செயல்படுத்த வேண்டும்.
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களோடு தோள் கொடுத்து களத்தில் உதவுகின்றன.
சீமைக் கருவேலம் ஒழிப்பு இயக்கம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசுத் துறைகளோடு இணைந்து நிலங்களைக் குலைக்கும் காட்டுச் செடிகளை ஒழிக்கும் அரும் பணியாற்றுகிறது. ஏனாதி பூங்கதிர்வேல் என்பவர் ஒருங்கிணைப்பாளர். அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு போர்க்கால அடிப்படையில் இவர்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமை, உள்ளூர் பெரும்புள்ளிகளின் குறுக்கீடு, புறம்போக்கு நிலத்தில் கருவேலத்தைக் கரியாக்கி காசு பார்க்கும் இடைத்தரகர்கள் என்ற பல்வேறு இடையூறுகளை சமாளித்து இந்த அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் மூன்று லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது நிலங்களில் கருவேலம் ஒழிப்பும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது இந்த இயக்கத்தின் வெற்றி.
கிராமங்களில் உள்ள குளம், குட்டை, கால்வாய்கள் சீரமைப்பு, தூர்வாருதலோடு கரைகளில் படர்ந்துள்ள சீமைக் கருவேலம் களையப்பட வேண்டும். பல இடங்களில் கரையோர ஆக்கிரமிப்புகளைக் காணலாம்.
அடர்ந்த காட்டுப் பகுதி போல் பல ஆற்றுப்படுகைகள் கருவேலம் பிடியில் உள்ளன. இது ஒரு வகையில் மணல் திருடும் முதலைகளுக்கு வசதியாகிறது. உள்ளே நடக்கும் கொள்ளை சாலையிலிருந்து தெரியாது. மணல் தாதாக்களின் ஆளுகையை மீறி கருவேலம் அழிப்பு ஒரு சவாலாகவே உள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் காலனிகளுக்கிடையிலும் சீமைக் கருவேலத்தைக் காணலாம். பள்ளிக்கரணை சதுப்பு நில கரையிலும் கருவேலம் படர்ந்துள்ளது.
சீமைக் கருவேலம் அழிக்கப்பட வேண்டும் என்று பொது நல வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஆணையிட்டுள்ளது. கருவேலம் நடுவதை உள்ளாட்சி அமைப்புகள் தடை செய்துள்ளன. ஆயினும், இது முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
எல்லா அரசுத் திட்டங்களுக்கும் மக்களின் உழைப்பும், ஒத்துழைப்பும் தேவை. இதற்கு உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வறண்ட பூமியைத் தத்தெடுத்து தரிசு நிலத்தை செழுமையாக்கி சாதனை படைத்துள்ளனர் பஞ்சாபிலிருந்து வந்த நான்கு விவசாயக் குடும்பங்கள்.
பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங், தர்ஷன் சிங் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் 2007-இல் சுமார் 300 ஏக்கர் நிலத்தை வாங்கி கடின உழைப்பால் லாபகரமான பழத் தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். முதலில் பல பிரச்னைகள், உள்ளூர்வாசிகளின் கேலிப் பேச்சு, இங்கு ஒன்றும் விளையாது, கரிசல் காடு என்ற எதிர்மறை கருத்துகளால் துவளாது வெற்றி கண்டுள்ளனர்.
1.30 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தமிழ்நாட்டில் விளைநிலங்களின் பரப்பளவு 63 லட்சம் ஹெக்டேர். அரசு ஒருங்கிணைந்த கூட்டு விவசாயம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டல் போன்ற நல்ல பல திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்துவதற்கு மாவட்டம்தோறும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர் தேர்வாணையம் மூலம் 450 வேளாண் அதிகாரிகள் 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வளவு முதல் நிலை அதிகாரிகள் ஒருசேர தேர்வு செய்யப்பட்டது ஒரு சாதனை!
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நவீன உத்திகளைத் தெளிவுபடுத்துதல், மழை நீர் சேகரிப்பு என்று எவ்வளவோ நன்மைகள் செய்யலாம். மாநிலத்தில் சுமார் நாற்பதாயிரம் நீர் நிலைகள் உள்ளன. அவற்றைத் தூர் வாரி மழைநீர் சேகரித்தாலே 350 டி.எம்.சி.க்கும் மேற்பட்ட தண்ணீர் கிடைக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் 33 சதவீதம் மழை நீர்தான் சேமிக்கப்படுகிறது. மீதி மக்கள் குடலில் கலக்காமல் கடலில் கலந்து வீணாகிறது. சொற்ப நீர்ப் பதத்தையும் கருவேலம் கரைத்துவிடுகிறது.
கேரளத்தில் கருவேலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. கேரளத்தின் குளுமைக்கு அதுவும் ஒரு காரணம். சீமைக் கருவேலம் களையெடுப்பைத் தாமதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...