நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

நல்லகண்ணு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி...

News image
நல்லகண்ணு- Photo: X / MK Stalin
Updated On :25 பிப்ரவரி 2026, 9:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நல்லகண்ணு இன்று பகல் 1.55 மணிக்கு காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று கருணாநிதியால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் -

“சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்

தூக்கினில் ஏற்றினாலும்

விட்டுப்பிரியாது – செங்கொடி

வீரம் குறையாது”

என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.

கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!

கருணாநிதியுடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.

பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.

கருணாநிதி தமது ஆட்சிக் காலத்தில் தோழர் நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் நல்லகண்ணுவுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!

எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். நல்லகண்ணுவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.

தோழர் நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!

“தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.

தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.