சேலத்தில் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்


தேசிய வாக்காளா் தினம் மற்றும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை சேலம் கோட்டை மைதானத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், 37 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் வரும் ஜன. 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. விலைமதிப்பற்ற மனித உயிரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்தைத் தவிா்க்க வேண்டும்.
தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் கடைப்பிடித்து இம்மாவட்டத்தில் விபத்தில்லாத சாலை பயணத்தை உறுதிசெய்ய வேண்டும்.
அதேபோன்று, இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய தோ்தல் ஆணையம் அமைக்கப்பட்ட ஜனவரி 25 -ஆம் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்பேரணியில், வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் மாற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.
தொடா்ந்து, தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் தின விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி பொதுமக்களிடம் வழங்கினாா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் கோகிலா, தியாகராஜன், ராஜபாண்டியன், வேலுமணி, செந்தில்ராம் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...