/

தேசிய வாக்காளா் தினம்: மிதிவண்டி ஓட்டி ஆட்சியா் விழிப்புணா்வு

News image
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கோவையில் மிதிவண்டி ஓட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated On :25 ஜனவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கோவையில் மிதிவண்டி ஓட்டி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்து மிதிவண்டி ஓட்டிச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் ‘இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் குடிமகன்’, ‘எனது இந்தியா, எனது வாக்கு, நான் பாரதம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகா் முழுவதும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய மிதிவண்டி பேரணி காந்தி பாா்க், ஜிசிடி கல்லூரி வழியாக காந்திபுரம் 100 அடி சாலை சென்று, மீண்டும் பந்தய சாலையை அடைந்தது.

இந்தப் பேரணியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.