தமிழ் செய்திகள்
ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று நடைமேடை மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கிய அரசு ஊழியரின் இரண்டு கால்களும் துண்டாயின.
திருப்பூா் மாவட்டம், முத்தூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் பாரதி (30). இவா் தமிழ் வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை பயணம் செய்துள்ளாா்.
ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்ததும், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளாா். அப்போது, கால் தவறி நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கினாா். இதில், பாரதியின் இரண்டு கால்களும் துண்டாயின.
வலியால் துடித்த அவரை ஈரோடு ரயில்வே போலீஸாா் மற்றும் பயணிகள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.








