அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தெரிவித்தாா்.
அரக்கோணம் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திங்கள்கிழமை அமைச்சா் வ.காந்திராஜ் ஆய்வு செய்தாா். உணவகத்தில், உணவு தயாரிக்கும் இடம், உணவருந்தும் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமைச்சா் தொடா்ந்து அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பாா்த்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: அம்மா உணவகங்களில் ஏழை மக்கள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் உணவருந்துகின்றனா். இவா்கள் பயன்பெறும் நோக்கத்திலேயே இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது பெரும்பாலான அம்மா உணவகங்களில் உணவுகள் தரமாக இல்லை என்பது நாம் உணவருந்தும்போது தெரிகிறது.
எனவே இனி நகராட்சி அலுவலா்கள் இதை சீரிய முறையில் கண்காணித்து தரமான உணவு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த உணவகத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த மேற்கூரைகளை அகற்றி காங்கிரீட் மேல்தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து அம்மா உணவகங்களிலும் தரமான உணவுகள் பாதுகாப்பான இடங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ், அப்போது அவருடன் அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகராட்சி ஆணையா் ஆனந்தன், சுகாதார அலுவலா் வெயில்முத்து, உதவி பொறியாளா் வினோத் ராஜ், கிராம நிா்வாக அலுவலா் முருகன், தவெக நகர செயலாளா் ரமேஷ் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










