வெற்றிக்குப் பின்னால்...
நகைச்சுவை மட்டுமின்றி, பெண்கள் பிரச்னை, சமூகப்பிரச்னை, குடும்ப உறவுகள் போன்ற தலைப்புகளில் ஆழமான கருத்துகளை முன் வைப்பவர் முனைவர் குருஞானாம்பிகா.


நகைச்சுவை மட்டுமின்றி, பெண்கள் பிரச்னை, சமூகப்பிரச்னை, குடும்ப உறவுகள் போன்ற தலைப்புகளில் ஆழமான கருத்துகளை முன் வைப்பவர் முனைவர் குருஞானாம்பிகா. சாலமன் பாப்பையா, கு.ஞானசம்பந்தன், ராஜா, ராமசந்திரன் போன்றவர்களின் பட்டிமன்றம் என்றால் தவறாமல் இடம் பெறுபவர். நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேடை பேச்சு, இலக்கியம், தமிழ் குறித்தான பல கேள்விகளை முன் வைத்த போது பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
பேச்சு என்பது மக்களை மகிழ்விக்கும் கலை. மைக்கைப் பிடித்து நினைத்ததைப் பேசுவது பேச்சு ஆகிவிடாது. நாம் பேச ஆரம்பித்த முதல் இரண்டு விநாடிகளில் கூடியிருக்கும் சபையின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும். அந்த இரண்டு விநாடிகள் தவறி விட்டால் சபை நம் பேச்சைக் கேட்காது. பார்வையாளர்களை வார்த்தையால் கட்டிப்போடும் நம்முடைய பேச்சு என்பது சாதாரணமாக இருக்கக்கூடாது. என்னுடைய முதல் மேடையிலிருந்து இன்று வரை ஆயிரம் மேடை கடந்திருந்தாலும் எனது அலுவலகப்பணி, வீட்டுப்பணி அனைத்தையும் நிறைவேற்றிய பின் இரவு-பகல் பார்க்காமல் எனது பேச்சுக் குறிப்புகளைத் தயார் செய்வேன். எந்தத் தலைப்பில் பேசினாலும் கருத்துகளைத் தரமாகவும், எளிமையாகச் சொல்வதில் கவனம் செலுத்துவேன். அப்போது தான் நடுவர்கள், விழா அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பேச்சினைக் கொண்டு செல்ல முடியும்.
பொதுவாக மேடைப்பேச்சுக்குத் தயங்குபவர்களிடம் ஒன்று சொல்வார்கள். முன்னால் உட்கார்ந்து கேட்பவர்களை எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணிப் பேச வேண்டும் என்று. ஆனால் நான் அப்படி எண்ணுவதில்லை. கணவன்-மனைவி, தாய்- மகன், மாமியார்-மருமகள் உறவுகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் பற்றியும் பட்டிமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றன. அதனால் நாம் சொல்லும் கருத்துகள் பலருடைய மனதின் பிரதிபலிப்பாக இருக்கும். அதனால் சொல்ல விரும்பும் விஷயங்கள் தெளிவாக, சுருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். என்னைப் போன்று வளர்ந்து வரும் பேச்சாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டி சாலமன் பாப்பையா. முனைவர் கு.ஞானசம்பந்தன். துன்பம் வரும் போது சிரிக்கக் கற்றுக் கொடுத்தவர் வாழ்வின் ஒவ்வொரு படியாக ஏறும்போதும் ஆசிரியராக நின்று அறிவுரை தந்தவர்.
முதல் மேடை ஏறிய அனுபவம் குறித்து....
எனக்கு எழுத்துதான் உயிர். மு.மேத்தாவின் "ஊர்வலம்', "கண்ணீர்பூக்கள்',
அப்துல்ரகுமானின் "நேயர்விருப்பம்', "பால்வீதி' போன்ற நூல்களைப் பள்ளி பருவத்திலேயே பல முறை வாசித்து இருக்கிறேன். அப்போதே எழுத்து தான் நம்முடைய எதிர்காலம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
அதற்கு முன்னோட்டமாகச் சின்னச் சின்னச் சம்பவங்களை எல்லாம் கவிதைகளாக எழுதி பலமுறை படித்துப் பார்த்து மகிழ்ச்சியடைவேன். ஒரு முறை தமிழாசிரியர் சமூகத் தலைப்பில் ஏதாவது ஒரு கட்டுரை எழுதி வரச் சொன்னார்.
"பதின்பருவ இனக்கவர்ச்சி' என்ற தலைப்பில் எனக்குத் தெரிந்தவற்றை எழுதிக் கொடுத்தேன். இரண்டு நாள்கள் கழித்து என் பெயரைச் சொல்லி எழுந்து நிற்கச் சொல்லிப் பாராட்டினார். தொடர்ந்து கட்டுரை, கவிதை எழுதுவதில் தான் மிகுந்த ஆர்வம். கல்லூரிக் காலத்தில் என்னுடைய ஆசிரியர்கள் எனது மொழிநடை, குரல்வளம், ஆகியவற்றை எடுத்துச் சொல்லி என்னையே எனக்கு அடையாளப்படுத்தினார்கள்.
பள்ளி, கல்லூரி நாட்கள் பன்முகத் தளங்களில் பாதை வகுத்துத் தந்தது. எழுத்தாளராவதே நெடுநாள் ஆசையாக இருந்தாலும் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்த 2001-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் முதன்முதலாக இளசை சுந்தரம் தலைமையில் பட்டிமன்றத்த்தில் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இன்று வரை அந்த இனிய பயணம் தொடர்கிறது.
பட்டிமன்றங்களில் பெண் பேச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
நிச்சயம். பெண்கள் இல்லாத பேச்சு மேடைகளே இல்லை. இன்று பட்டிமன்ற மேடைகளைத் தாண்டி பேச்சரங்கம், கருத்தரங்கம், பாட்டரங்கம் என்று பல்வேறு களங்கள் பேச்சுத்துறையில் வளர்ந்திருக்கின்றன.அவை எல்லாவற்றிலும் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். தொடக்கக் காலத்தில் ஆண் நடுவர்களும், ஆண் பேச்சாளர்களும் மட்டுமே மேடைகளில் பங்கேற்று இருக்கிறார்கள். தொடர்ந்து வந்த காலங்களில் காந்திமதி, சாரதா நம்பி ஆரூரன், இராம செளந்தர வள்ளி, சுதா சேஷய்யன் போன்றவர்கள் தங்களுடைய ஆழமான கருத்துகளை அழுத்தமாகப் பேசிய மேடைகள் உண்டு. இன்றைக்குப் பெண்கள் பரவலாக நடுவர் பொறுப்பையும் ஏற்றுச் சிறப்பாகப் பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருப்பது வரவேற்புக்குரியது.
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நூல்களை எழுதியிருக்கிறீர்களாமே?
என்னைப் பொருத்தவரை கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்த தொடக்க நாளிலிருந்து இன்று வரை மாணவ, மாணவிகள் தான் என் உலகம். மாணவர்களின் எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதற்கும், சாதனையாளர்களாக மாறுவதற்கும் ஆசிரியரின் வழிகாட்டுதலே முதல்படி.. அந்த வகையில் என்னுடைய தமிழ் இலக்கிய வகைமை மற்றும் வினா-விடை நூலானது போட்டித் தேர்வுகளில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குத் தொகுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கிறது.
" இன்னா நாற்பது', "இனியவை நாற்பது', "ஆசாரக் கோவை' போன்ற நூல்களை மாணவர்கள் படித்தவுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையான சொற்களைக் கொண்டு உரையாக எழுதியிருக்கிறேன். அறிவியல், தமிழ் எழுத்தாக்க முயற்சியில் நடைமுறை வாழ்வியலில் பயன்படும பலதுறை கலைச்சொற்கள் நூலும், தமிழ்க்கடவுள் முருகனைப் பற்றிய ஆன்மிகத் துளிகளோடு அறுபடை அழகன் நூலையும் எழுதியிருக்கிறேன்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கத்திற்காக இக்கால இலக்கிய பாடத்திற்கான நூலையும் எழுதியிருக்கிறேன்.
இளைய தலைமுறையினர் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகிறார்களா?
இன்றைய இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பைப் பற்றி மட்டும் யோசிக்கிறார்கள். பெரியவர்களின் எண்ணம் தமிழ் படித்தால் வேலை எதுவும் கிடைக்காது என்று நினைக்கிறார்கள். தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் மதிப்பெண் குறைந்தவர்களாகவும், வேறு எந்தப் பாடப்பிரிவும் கிடைக்காதவர்கள் தான் தமிழ் இலக்கியம் படிக்க வருகிறார்கள். தமிழ் ஆர்வம் மிக்கவர்கள் தமிழ் படித்தால் தமிழ்த்துறை நன்கு வளர்ச்சி பெறும். தற்போதைய ஆறுதலான விஷயம் என்னவென்றால் தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால் இப்போதுள்ள இளையதலைமுறை தமிழ் படிக்க முன்வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் இன்றைய இளைய சமுதாயம் நிச்சயம் முன்னேற்றம் பெறும்.
இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் பற்றி.....
இதுவரை 150 ஆய்வு கட்டுரைகளையும், 11 நூல்களையும் எழுதியுள்ளேன். ஆய்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. கீழடி ஆராய்ச்சி என்றால் அதன் மூலமாக நமது தமிழ் மரபு, பண்பாடு போன்றவற்றைத் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும்,தாய்மொழியைத் தமிழாகக் கொண்டவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முழுமையாகத் தகவல்களுடன் சேர்க்க வேண்டும். மறைந்து போன புராதன சின்னங்கள், மறைந்து போன நகரங்கள் பற்றி தொல் பொருள் ஆராய்ச்சிகள் உள்ளன. அவற்றைத் தமிழ் இலக்கியத்துடன் கலந்து ஆய்வு செய்யும் முயற்சி இறங்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் திருக்குறளையும் கிரந்தாவளி வழியையும் ஓப்பீட்டு ஆய்வு செய்தேன். திருக்குறளில் தனி மனித அறங்கள் சொல்கிறதே, அது போன்று வடமொழியில் சொல்லப்பட்ட கிரந்தாவளி என்ன சொல்கிறது என்பதை ஆய்வில் எடுத்துச் சொன்னேன். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் உதவியோடு கலைச்சொற்கள் பற்றிய குறுந்திட்ட ஆய்வையும் நிறைவு செய்துள்ளேன்.
பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் இருக்கிறார்களா?
கண்டிப்பாக. ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பது போன்று பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் இருக்கிறார்கள். பள்ளி காலத்தில் இருந்து தோழமையுடன் வழி நடத்திய என் தந்தை சங்கரலிங்கம், கணவர் பாலசுப்பிரமணியம், இன்று என்னுடைய மகன், நண்பர்கள், தோழமைகள் என பலர் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...