சில ஆசிரியர்கள் குறிப்பிடுவதுபோல், இவை சாதாரண மக்களின் நம்பிக்கை சார்ந்த துதிகள் என்பதாலும், உயர்தர (குருமார்) மக்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக இருப்பதும், இதன் புறக்கணித்த இகழ்ந்த நிலைக்கு ஒரு புறக்காரணமாகவும் இருக்கலாம். ரிக் துதிகளிலும், காலத்தால் பிற்பட்ட 1, 9, 10-ஆம் மண்டலத்தின் பாடல்களும், கிலங்கலான பிற்சேர்க்கைப் பாடல்களுமே பிற்காலத்தில் போற்றப்படுகின்றன. குறிப்பாக வழிபாடு, யாக - வேள்வி குறித்தவை இவற்றில் இருந்தே பெறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. காலத்தால் மூத்த 6, 7, 8, 5, 4, 3, 2 மண்டலத் துதிகள் பெரும்பான்மையும், அக்கினி, இந்திர, வருண, அசுவினி தேவர்கள் மற்றும் வேத கடவுளர்களையும், சோமத்தையும் வேண்டும் துதிகளின் பயன்பாடாக மட்டும் உள்ளது.