இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 26 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 19

உருவ வழிபாட்டைக் கொண்டிராத ரிக் வேதப் பண்பாடு, இக்கால இடைவெளி நிரவலுக்கு மிகக்குறைவான வாய்ப்பையே அளிக்கிறது. உண்மையில், சிந்துப்பகுதி பண்பாட்டின், குறிப்பாக கட்டடக் கலை வெளிப்பாட்டிலும், சுடுமண் / சிற்பக் கலை வெளிப்பாட்டிலும், தொடர்ச்சியான ஒரு மரபை தென்னிந்தியாவே மிகுதியாக அளித்து வருகிறது, கங்கைச் சமவெளியை விடவும்.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:17 am

த. பார்த்திபன்

குடைவறைப் பெருங் கற்படைச் சின்னங்கள்

பண்டைய தமிழகத்தின் சேரநாட்டுப் பரப்பில் (இன்றைய கேரளம்) கொச்சி, மலபார் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காணக்கிடைக்கும் பெருங் கற்படைச் சின்னங்களின் வகையினத்தில் ஒன்று, குடைவரைப் பெருங் கற்படைச் சின்னமாகும்.

இவ்வகையினம் குறித்து யுத்தபூமி அத்தியாயம் 18-ல் முன்னரே குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவம் கிடைக்குமாறு குடையப்பட்டுள்ள இவ்வகை குடைவரைகளின் பொதுக்குணம் வருமாறு -

“இவை பாறைகளைத் தாழ்வாகக் குடைந்து அறைகள் போன்று உருவாக்கப்பட்டவை. இக்குடைவரைத் தாழ்வறைகள் குடைவதற்கு எளிதாக இருக்கும் லேட்டரைட் வகைப்பாறைகளில் குடையப்பட்டுள்ளன.

பாறைகளில் தாழ்வறைகளை உருவாக்க, முதலில்  சதுரமான குழி மேலிருந்து ஆழமாகத் தோண்டப்படும். இக்குழியில் கீழே இறங்குவதற்குப் படிக்கட்டுகளும் ஒருபுறத்தில் அமைக்கப்படும். அடுத்ததாக, இந்தக் குழியின் அடிமட்டத்துக்குச் சற்று மேலாக, குழியின் ஏதாவது ஒரு பக்கத்தில், ஒரு ஆள் படுக்கைவசமாக நுழைவதற்குத் தக்கவாறு குடைந்து, அதனுள் சென்று மேலும் ஒரு அறை குடையப்படும். இந்த அறையின் தரை, முதலில் தோண்டப்பட்ட சதுரக்குழியின் தரைக்கும் சற்று கீழாக இருக்கும்படி அமைக்கப்படும். இவ்வறையின் மேல்பகுதியான கூரை, குவிந்த முகட்டை உடையதாகக் குடையப்படும். மேலும், இந்தக் குவிந்த முகட்டின் நடுப்பகுதியைத் தாங்கும் வகையில், அறையின் தரையில் இருந்து ஒரு கல்தூண் நிற்குமாறு குடையப்படும். இந்த முகட்டின் உச்சியில், வானத்தை நோக்கி ஒரு துளை குடையப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இத்துளை பெரும்பாலும், முகட்டைத் தாங்கும் தூண் குடையப்படாத குடைவரைகளில் காணமுடிவதாகக் கருத்து உள்ளது. இத்துளை குடையப்பட்டதன் நோக்கம் இன்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. இத்துளை கல்திட்டை, கல்பதுக்கைகளில் இடம்பெறும் இடுதுளையின் நோக்கத்தை போன்றது என உறுதிசெய்யமுடியாது. ஏனெனில் பாறையின் மேலே, துளையின் மேல்திறப்பை ஒரு மூடுகல்லால் மூடியுள்ளதையும் காணமுடிகிறது. இந்த மூடுகல், குடைக்கல் வடிவில் இருப்பதும் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. துளைகள் இடம்பெறாத குடைவறைகளும் வட்டமான மூடுகல் கொண்டவற்றையும் காணமுடிகிறது.

(இங்கு கல்திட்டை, கல்பதுக்கை வகை ஈமச்சின்னங்களில் காணப்படும் இடுதுளைகளும் மூடுகல் கொண்டு மூடப்படுவதுண்டு என்பதும் நினைவுகொள்ளத்தக்கதாக உள்ளது. இடுதுளை அமைக்கப்படுவதன் நோக்கமும், பயன்பாடு இதுவே என திட்டமான முடிவுக்கு வரும்வரை, இவை இடம்பெற்றுள்ளதற்கான விளக்கங்கள் கருத்து முரணுக்கு உட்பட்டவையே).   

இந்தத் தாழ்வறைக்குள் விசிப்பலகை அல்லது திண்ணை, முக்காலி போன்ற இருக்கை அமைப்புகளும், ஒரு சுவரின் பக்கத்தில் வருமாறு குடையப்பட்டுள்ளன. இந்த விசிப்பலகை அல்லது திண்ணை மற்றும் முக்காலி போன்ற அமைப்புகள், ஈமப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களும் வைக்க பயன்படுத்தப்பட்டன. சில குடைவரைத் தாழ்வறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தாழ்வறைகள் கொண்டதாகவும் குடையப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.  

ஈமக்கிரியை முடிந்த பிறகு, தாழ்வறைக்கும் சதுரமான குழிக்கும் இணைப்பாக குடையப்பட்ட, படுக்கைவசமாக நுழையும் பக்கவழி ஒரு பலகைக்கல்லால் மூடி வைக்கப்படும்.

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் முகப்பு - 1

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் முகப்பு - 2

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் முகப்பு - 3

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தில் தூண் அமைப்பு

Story image

பல தாழ்வறைகள் கொண்ட குடைவரைப் பெருங் கற்படைச் சின்னம்

Story image
Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் பொதுத் தோற்றம்

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தில், தாழ்வறையில் விசிப்பலகை என்ற திண்ணை அமைப்பு

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் விசிப்பலகை என்ற திண்ணை அமைப்பு மூன்று கால்களுடன்

Story image

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னத்தின் படிக்கட்டுகள்

இவ்வாறு காட்சியளிக்கும் குடைவரைகள், அதன் அதன் வடிவமைப்பில் முழு வடிவம் பெற்றவை எனக் குறிப்பிடலாம்.

இக்குடைவரைத் தாழ்வறைகள், குறிப்பிட்ட திசை பார்த்தவை என்று இல்லாமல், முகப்பின் திசை நான்கு திசைகளைப் பார்த்தவாறும் குடையப்பட்டுள்ளன. இவற்றின் அளவும் பலவேறாக இருப்பதை அறியமுடிகிறது. முகப்பு குழியறைக்கும் உள் தாழ்வறைக்கும் இடையே இடைவெளியுடன் அமைக்கப்பட்ட குடைவுகளையும் அறியமுடிகிறது. (உம். Ummichaipoyil, Kasarkod, Kerala).

ஒன்றுக்கும் மேற்பட்ட தாழ்வறைகளைக் கொண்டதாக அமைக்கும்போது, முக்கிய அறை அளவில் பெரியதாகவும் உயரம் கூடியதாகவும் குடையப்பட்டுள்ளன. முக்கியப் பெரிய அறையிலும், சிறிய அறையிலும் விசிப்பலகை என்ற திண்ணை அமைப்பு வரும்படி குடையப்பட்டுள்ள அமைப்பையும் காணமுடிகிறது. (உம். Eyyal, South of Charamanangad, Kerala). போலவே, இரு அறைகளாகப் பகுக்கப்பட்ட தோற்றத்தைத் தரும் தாழ்வறை அமைப்பு, தாழ்வறையின் தரையில் செவ்வகமாக நடுநரம்பு ஓடுவதுபோல் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதையும், அரைக்கோள வடிவத்தில் கூரையின் உட்புறமும், நீள்வட்ட வளைவான தரையும் கொண்டவாறும் குடைவரைகள் குடையப்பட்டுள்ளன (உம். Kandanassery). இவ்வாறு, பல்வேறு விதமாக வடிவமைப்பு முயற்சிகள் குடைவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் காலம் தோராயமாக மு.பொ.ஆ. 500 முதல் பொ.ஆ. 500 வரை என கணிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில், இவ்வடிவத்தின் துவக்கத்தை மு.பொ.ஆ.1000 முற்பட்டது எனக்கொள்ள, துணைச் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன.            

இதே காலகட்டத்தில், பயன்பாட்டுக்குத் தக்கவாறு பாறைகளைக் குடைதல் என்பது உடன் நடந்த நிகழ்வாக உள்ளது. லாங்ஹாஸ்ட் அவர்கள், கோவை மாவட்டத்தில் சிறுமுகையில் கண்டதாகக் குறிப்பிடும் பாறைக் குடைவு அறை (Rock Cut Chamber) என்பது, ஈமப்பேழை வைக்க பாறையில் குடையப்பட்ட குழியே (Rock Cut Pit) என்கிறார் கா. ராஜன். (K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur, 1999, p.27).

அண்மையில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், போதுமலையில் அறியப்பட்ட உருளைவடிவ ஈமச்சின்னங்களும், ஒருவகையில் பாறையில் குடையப்பட்ட குழியின் மீது எழுப்பப்பட்ட ஈமச்சின்னமே. (த. பார்த்திபன், தினமணி, 25.12.2015, தினமணி.காம் சிறப்புக் கட்டுரை - போடுமலை பெருங் கற்படைச் சின்னங்கள், 25.12.2015).

Story image

போடுமலை உருளை வடிவ ஈமச்சின்னம் - 1

Story image

போடுமலை உருளை வடிவ ஈமச்சின்னம் - 2

இந்த வகையில், குடைவறைக் கலை பெருங் கற்படைக் காலத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த ஒன்று என்பதை அறியமுடிகிறது.

ஐரோப்பியர் எழுதிய இந்தியக் கலை வரலாறு, அநேகமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் திருத்தி எழுதப்பட வேண்டிய சான்றுகளை, இந்தியப் பெருநிலப்பகுதி அவ்வப்போது வழங்கிக்கொண்டே இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் அறியப்படுவதற்கு முன் மற்றும் சிந்துவெளி நாகரிகம் அறியப்பட்ட பிறகு என்ற இருபெரும் காலகட்டப் பிரிவுகள், முதலில் திருத்தி எழுதும் அவசியத்தை உருவாக்கின. 1920-கள் வரை மற்றும் 1920-க்குப் பிறகு என்பது, இவ்விரு பிரிவுகளின் ஆண்டுக்கணக்கு வரையரையாகச் செயல்படுகிறது. சுதந்தர இந்தியாவில், இன்னும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு கலை வரலாறு முற்றிலும் பிரதேச மணம் கமழுமாறு எழுதப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.

1920-க்கு முந்தைய கலை வரலாற்று நூல்கள், கலை மரபின் தொடர்ச்சி ஒன்றைத் தேடின. அக்காலத்தில் அறியப்பட்ட சான்றுகள் மற்றும் நம்பிக்கை சார்ந்து, அவை வேத நூல்களில் இருந்தும், ஆரியப் பண்பாட்டிலும் இருந்தும் இந்தியக் கலை வரலாறு தொடங்கியது எனப் பதிவு செய்தன. வேத நூல்களின் காலம், குறிப்பாக ரிக் வேதத்தின் காலம் மு.பொ.ஆ. 1500 முன் கொண்டு செல்லமுடியாது என்ற உண்மையும், பின் மூன்று வேதங்களும் காலத்தால் பிந்தியவை என்பதும் வெளிப்படுத்தப்பட்டன. தொடர்ந்த ஆய்வுகள், குறிப்பாக மொழிப் பயன்பாடு ஆய்வுகள், ரிக் வேதத்தில் இடைச் செருகல்கள் / பிற்காலச் சேர்க்கைகள் ஏற்பட்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன.  

இதே காலகட்டத்தில், ஆங்கிலேயர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருள் தேடல்களும், அகழாய்வுகளும், மு.பொ.ஆ. 1500-க்கு முற்பட்ட தொல்பொருட்களையும் கலைப்பொருட்களையும் தொடர்ச்சியாகப் பின்னோக்கிய கால வரிசையில் அளித்தன. இவை, வேத – ஆரியப் பண்பாட்டுக்கு முன் செழுமையான, முற்றிலும் உள்நாடு சார்ந்த பண்பாடு நெடுங்காலம் நிலைபெற்று நின்று நிகழ்ந்திருப்பதை அறிவித்தன. இதன் உச்சகட்டமாகத்தான், சிந்து வெளி நாகரிகம் என்ற வேத – ஆரியர் தொடர்பற்ற நாகரிகம் அதன் செம்மைப் பண்புகளோடு வெளிப்படுத்தப்பட்டது.

தோண்டத் தோண்ட ஆச்சரியத்தையும், முந்தைய எல்லா வரலாற்றுத் தீர்மானங்களையும், வரையறைகளையும் மறுதளிக்கும் சான்றுகளை வழங்கிக்கொண்டிருந்தது சிந்துவெளி நாகரிகம்.

செம்மையான சிந்துப் பகுதி நாகரிகத்தின் தொடர்ச்சியை, இந்தியாவின் பிற பகுதி வெளிப்பாடுகளோடு ஒப்பிட்டு அறியும் முன்னர், இந்தியச் சுதந்தரமும், பாகிஸ்தான் பிரிவும் தடையாகியது. சிந்துவெளி நாகரிகம் முழுமையாக வெளிப்படும் முன், இத்தடை இந்திய எத்துறை வரலாற்றுக்கும் பின்னடைவை உருவாக்கியது.

சிந்துப்பகுதி நாகரிகத்தின் கலைவெளிப்பாட்டுக்கும், பிற்காலத்திய பெளத்த /  சமண கலை வெளிப்பாட்டுக்கும் இடையே நீண்ட நெடிய கால இடைவெளி உள்ளது. இந்தக் கால இடைவெளியை வேத – ஆரியப் பண்பாடு கொண்டு நிரவ முயற்சிகள் பல உண்டு.

உருவ வழிபாட்டைக் கொண்டிராத ரிக் வேதப் பண்பாடு, இக்கால இடைவெளி நிரவலுக்கு மிகக்குறைவான வாய்ப்பையே அளிக்கிறது. உண்மையில், சிந்துப்பகுதி பண்பாட்டின், குறிப்பாக கட்டடக் கலை வெளிப்பாட்டிலும், சுடுமண் / சிற்பக் கலை வெளிப்பாட்டிலும், தொடர்ச்சியான ஒரு மரபை தென்னிந்தியாவே மிகுதியாக அளித்து வருகிறது, கங்கைச் சமவெளியை விடவும்.

மற்றொரு வகையில், தென்னிந்தியப் பெருங் கற்படைச் சின்னங்களின் வழிபாட்டுத் தேவையின் அடிப்படையிலேயே, வழிபாட்டு நோக்கத்தின் அடிப்படையிலேயே பெளத்த சின்னங்கள், குறிப்பாக தூபிகள் என்ற துமிளிகளும், சைத்தியங்களும் அமைக்கப்படுள்ளன. சைத்தியா என்னும் பாலி மொழிச் சொல், ‘சித்தா’ என்ற வேரில் இருந்து பிறந்தது. ‘சித்தா’ என்பதற்கு ‘ஈமவிரகடுக்கு’ அல்லது ‘பிணமேடை’ என்பது பொருள். இது, புத்தர் இறந்த பிறகு அவரது பல், எலும்பு, மயிர் முதலிய எச்சங்களைப் புதைத்து, அவற்றின் மேல் எழுப்பப்பட்ட வழிபாட்டுக் கோயில்களே புனித சைத்தியங்களாக மாறின என்பதுடன் நேரடியாப் பொருந்தும் பொருளாகும். இது, மூத்தோர் வழிபாட்டின் கூறே அன்றி வேறில்லை.

இந்தவகையில், பெருங் கற்படைச் சின்னங்கள், சமயம் சாராத மூத்தோர் நினைவு வழிபாட்டிடமாகத் திகழ, பெளத்த சைத்தியங்கள் சமயம் சார்ந்த மூத்தோர் நினைவு வழிபாட்டிடமாகத் திகழ்கின்றன. சமயம் சார்ந்த / சமயம் சாராத என்ற வேறுபாடு என்பது தவிர, உள்ளுறையும் அடிப்படைகள் ஒரு மரபின் தொடர்ச்சியை வலிமையாக உணர்த்துகின்றன.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.