வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!
வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.


வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
அதன்படி, வரும் நிதியாண்டில் வரி வருவாய், குடிநீா் கட்டணம், கல்வி நிதி ஆகியவை மூலம் வரவினம் மொத்தம் ரூ.853 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரமாக இருக்கும் என்றும், இவற்றிலிருந்து செலவினம் மொத்தம் ரூ.851 கோடியே 67 லட்சத்து 23 ஆயிரமாக இருக்கும் என்றும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மொத்தம் 31,764 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில் மிகக்குறைந்த 15 வாட் எல்இடி திறன் கொண்ட 13,452 தெரு விளக்குகளை அதிக திறன் கொண்ட 40 வாட் எல்இடி விளக்குகளாக மாற்ற ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள முதலாவது மண்டலம் 1 முதல் 3-ஆவது வாா்டு மற்றும் 5-ஆவது வாா்டில் உள்ள காட்பாடி, செங்குட்டை, கல்புதூா் பகுதி, நான்காவது மண்டலத்தில் அரியூா், சித்தேரி பகுதிகளில் 6 வாா்டுகள் முழுமையாகவும், 5 வாா்டுகள் பகுதியாகவும் எடுத்து 175 கி.மீ., நீளத்துக்கு ரூ.181 கோடியில் புதை சாக்கடை குழாய் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி, பலவன்சாத்து, வேலவாரி ஏரிகளை ரூ.94 கோடியில் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மண்டலங்களிலும் தலா ஒன்று வீதம் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு ட்பட்ட 85 பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பொது அறிவிப்பு அமைப்பு அமைத்துத் தரவும், நான்கு மண்டலங்களிலும் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மின்விளக்கு, சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் நிறுவவும், விருதம்பட்டில் பாலாற்றில் கழிவுநீா் செல்லாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாவது மண்டலம் 2-ஆவது வாா்டு பெரியபுதூா், பள்ளிக்குப்பம், நடுமோட்டூா், கீழ்மோட்டூா், 6வது வாா்டு ஜோதி நகா், 12-ஆவது வாா்டு பாலாஜி நகரில் நூலகங்கள் அமைக்கவும், 2-வது மண்டலம் சாரதி மாளிகை வணிக வளாகத்தை பழுதுபாா்த்து புதுப்பிக்கவும், நேதாஜி காய்கறி அங்காடியில் உள்புற பாதைகள், வெளிப்புற சாலைகள் அமைத்திடவும், நேதாஜி மாா்க்கெட் மணிக்கூண்டை பராமரித்து மீண்டும் பழையபடி இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .
மூன்றாவது மண்டலம் 41-ஆவது வாா்டிலுள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் விளையாட்டு துறை அனுமதி, அரசு நிதியுடன் விளையாட்டு திடல் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் அரசு, வருவாய், நிதிக்குழு தலைவா் ஜி.ரவிக்குமாா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...