இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 31 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 24

தமிழகத்தில் கண்டு அறியப்பட்ட பாறை ஓவியங்கள் குறித்து இந்நாள் வரை பேசப்பட்டவை ஒன்றைப் பார்வை கொண்டிருப்பதாகவே உள்ளன. அவை, தொல்லியல் சார்ந்த மதிப்பீடுகளையும், ஓவியக் காட்சிகளின் சித்தரிப்புகளின் விளக்கங்களையும் தருபவையாக மட்டும் உள்ளன. அவை கிடைக்கும் இடம் சார்ந்தும், காட்சிகள் பொருள் சார்ந்தும், பண்பாட்டுக்கூறுகளின் பிற தொல்லியல் தடயங்களுடன் ஒப்பாய்வு செய்தவை குறைவே.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:17 am

த. பார்த்திபன்

சிந்துவெளி முத்திரைகளில் வீரப்பண்பும் தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களும்

சிந்துவெளி முத்திரைகளில் வெளிப்பட்டுள்ள வீரப்பண்பு குறித்து முந்தைய அத்தியாயத்தில் (அத்தியாயம் 30) சில பகுதிகள் விளக்கப்பட்டன. வீரப்பண்பை வெளிப்படுத்தும், கிடைக்கப்பெற்றுள்ள எல்லா முத்திரைகளும் அங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்துவெளி முத்திரைகள் இடம்பெற்ற காட்சிகள், அம்மக்கள் தம் நினைவுகளில் கடத்திவந்த வேட்டைச் சமூகமாக இருந்த காலகட்டத்து தம் மூத்தோர் பற்றிய நினைவு, நன்றி உணர்வு மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய வீரம் ஆகியவற்றையும், மூத்தோரின் பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றையும் வெளிப்படுத்துவதைக் குறிப்பிடுவதற்கே.

இவ்வகையிலான சிந்துவெளி முத்திரைகளுக்கும், தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களுக்கும் உள்ள ஒற்றுமையாக, மூத்தோரின் வீரத்தைப் போற்றுதல், வணங்குதல் ஆகிய பண்புகளைக் குறிப்பிடலாம். சிந்துவெளி முத்திரைகள் வழிபாட்டுக்கு உரியவை அல்ல என்பது உண்மை. ஆனால், அவற்றில் இடம்பெற்ற பல உருவங்கள், அவர்களின் வழிபாட்டுக்குரிய உருவங்களைத் தாங்கியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. பெருங் கற்படைச் சின்னங்களும் வழிபாட்டினங்களே என்பதும் அறிந்ததே.

வணிக / நகர / வேளாண் பண்பாட்டை வாழ்ந்த சிந்து சமவெளி மக்கள் நலிவடைந்த காலகட்டத்தில், அதாவது மு.பொ.ஆ. 1500 அளவில், நாடோடிப் பண்பும், மேய்த்தல் சமூகமாக வளர்ச்சி அடைந்திருந்த சமூகமாகவும், அதே சமயத்தில் வேட்டைச் சமூக நிலையிலேயே இருந்த கூட்டத்தினரை ஒருபக்கமாகக் கொண்டும், மறுபுறத்தில் வேளாண்மைச் சமூகமாகக் கிளை பிரிந்த கூட்டத்தினரையும் கொண்டும் ஒரு கலவையான பண்பாட்டின் முகத்தோடு தென்னிந்தியா விளங்கியது.

மு.பொ.ஆ. 2000 அளவில் துவங்கி மு.பொ.ஆ. 1500 அளவில், சீரான வளர்ச்சியுடன் நிலைபெற்ற பெருங் கற்காலப் பண்பாட்டில் இம்மூன்று பண்பாடுகளும், அதாவது வேட்டை / மேய்த்தல் என்ற கால்நடை வளர்ப்பு / வேளாண் ஆகிய பண்பாடுகளின் எதிரொலிப்பைக் காண முடிகிறது. சிந்துப்பகுதியின் ஒருமுகப் பண்பாடுபோல தென்னிந்தியப் பண்பாடு இல்லை. இது முக்கியமான வித்தியாசம்.

தென்னிந்தியாவில், ஒரு குறிப்பிட்ட வரையறுத்த நிலப்பகுதிக்குள் இயற்கை வளம் சார்ந்து இம்மூன்று பண்பாட்டு மக்களும் நெருங்கி வாழ்ந்தனர். வேட்டைச் சமூகத்தினர், நிலம் மற்றும் நீர் சார்ந்து தங்களின் வாழிடங்களையும், வாழிடம் வழங்கிய வாய்ப்புகளுடன் தனித்த குணங்கள் கொண்ட சமூகங்களாகப் பிரிந்தாலும், அடிப்படையில் வேட்டை சமூகத்தின் அடிப்படைக்கூறுகளைப் பரவலாகக் கொண்டிருந்தனர். முதல் அடிப்படைக்கூறு, வேட்டைத் தாய் தெய்வங்கள். இவ்வாறு காடும் காடு சார்பு நில குறிஞ்சி மக்களும், மலையும் மலை சார்பு நில முல்லை மக்களும், வயலும் வயல் சார்பு நில மருத மக்களும், கடலும் கடல் சார்பு நில நெய்தல் மக்களும், தொல்காப்பியம் சுட்டும் திணை நிலங்களாகவும், திணை மக்களாகவும் அடையாளமாகின்றனர்.

பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலகட்டங்களில், இவர்கள் எவ்வளவு இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஆனால், சங்க காலத்தில் இவர்களிடையே அரசியல் நிலையில் இணக்கம் குறைவாக இருந்ததை சங்க இலக்கியம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது. ஆனால், பொது வாழ்க்கைக் காட்சி இணக்கத்துடன் இருந்ததாகக் கருதமுடிகிறது.

இங்கு, தென்னிந்திய பெருங் கற்படைகளை உருவாக்கியவர்கள் எத்திணை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பான்மையான ஆய்வாளர்கள், அது மேய்த்தல் என்ற கால்நடை வளர்ப்புச் சமூகத்தின் பங்களிப்பே என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஏனெனில், அதில் ஆணாதிக்கக்கூறுகள் வெளிப்படையாக உள்ளன என்ற கருத்து முன்வைக்கப்படலாம். ஆனால் முக்கியமான காரணம், பெருங் கற்படைக் காலத்துக்குப் பிறகு நடுகல் பண்பாடு அதன் தொடர்ச்சியாக உள்ளது என்பதும், நடுகல் பண்பாடு முதலில் மேய்த்தல் என்ற கால்நடை வளர்ப்புச் சமூகத்துக்கு உரியதாக உள்ளது என்பதால், பெருங் கற்படைப் பண்பாட்டுச் சின்னங்கள் மேய்த்தல் என்ற கால்நடை வளர்ப்புச் சமூகத்துக்கு உரியனவே என்ற கருத்து வலிமையாகப் பொருந்துகிறது.

இந்நிலையில், பெருங் கற்படைப் பண்பாட்டை மேய்த்தல் என்ற கால்நடை வளர்ப்புச் சமூகத்துக்குரிய பண்பாட்டுப் பொருளோடு அணுகவேண்டி உள்ளது என்பதை நிலைவில் கொள்வோம்.

பெருங் கற்படைகள், அப்பண்பாட்டுக் காலத்தில் இறந்த எல்லோருக்கும் எடுக்கப்பட்டன என்ற கருத்து ஆய்வாளார்களால் முன்வைக்கப்படுகிறது. அப்பெருங் கற்படைகளுள், வீரம் வித்தி மாய்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட சின்னங்களும் இருக்கக்கூடும். அவற்றை இன்று இனம் காண முடியாதுபோயினும், இன்று நடுகல் வழிபாட்டிலும், நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளில் காண்பது போலவே, குடும்பத்துக்கு உரியவர்கள், குலத்துக்கு உரியவர்கள், கிராமத்துக்கு உரியவர்கள், நாட்டுக்கு உரியவர்கள், இனத்துக்கு உரியவர்கள் என்ற வகையில், வழிபடு நிலையில் வேவ்வேறு பங்கைப் பெற்றவர்களாக இருக்கக்கூடும்.

இந்தவகையில், சிந்துவெளி முத்திரைகளில் வேட்டைச் சமூகத்தில் பெண் தலைமை நிலைபெற்றிருந்தபோது வீரம் வெளிப்படுத்திய காட்சிகளின் காட்சிகளும், வேட்டைச் சமூகத்தில் இருந்து மேய்த்தல் சமூகமாகப் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட பெண் வீரம் போற்றப்பட்டு நினைவுகூரப்பட்ட நிலையும் கணப்பட்டது (அத்தியாயம் 30) என்பதை நினைவில்கொள்ளலாம்.

தென்னிந்திய பெருங் கற்காலப் பண்பாட்டின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள துணைச் சான்றாக விளக்குபவை பாறை ஓவியங்கள் ஆகும். இங்கு, தமிழகப் பாறை ஓவியங்களின் பின்புலத்தில், பெருங் கற்காலப் பண்பாட்டின் கூறுகளை விரிவாக அடைய முயற்சி செய்யலாம்.

தமிழகப் பாறை ஓவியங்கள்

உண்மையில், தமிழகத்துப் பாறை ஓவியங்களை இரும்புக் காலம் அல்லது பெருங் கற்காலப் பண்பாட்டுக் காலகட்டத்து ஓவியங்கள் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கக்கூடும். பயன்படுத்தப்பட்ட நிறத்தைக் கொண்டு, பாறை ஓவியங்களின் காலத்தைக் கணிக்கும் மரபு பொதுவாக உள்ளது. அந்தவகையில், சிவப்பு நிறம் கொண்டவை காலத்தால் மூத்தவை என்றும், அவை புதிய கற்காலத்தின் படைப்புகளாக இருக்கலாம் என்றும், வெள்ளை நிறம் காலத்தில் பிற்பட்டது; அது பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலத்தோடு சேர்ந்தது என்றும் கருதுவர். சில பாறை ஓவியங்களில், சிவப்பு நிற ஓவியத்தின் மீது வெள்ளை வண்ணம் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதைக் கொண்டும் இக்கூற்று உண்மை என்று வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்துப் பாறை ஓடியங்களின் வயது மு.பொ.ஆ. 1500-க்கு முன்னர் இருக்கமுடியாது என்பது திண்ணம் என்றும், அவை மு.பொ.ஆ 500-ம் ஆண்டுக்குப் பிற்பட்டவை என்ற கருத்தும் நிலவுகிறது. பிந்தைய வரையறை காலகட்டம், தமிழகத்து சங்க இலக்கியங்களின் துவக்கக் காலகட்டத்தோடு இணைகிறது என்ற கருத்தை நினைவில் இருத்திக்கொள்வோம்.

பாறை ஓவியங்கள் என்று குறிப்பிடுவது ஒரு பொது சுட்டே. இது, பாறை மீது தீட்டப்பட்ட ஓவியங்களைக் குறிப்பிடுவதாக அர்த்தமானாலும், இப்பெயரில் சுட்டப்படும் ஓவியங்கள் குறிப்பாக இரண்டு இடங்களில் கிடைக்கின்றன. அவை, 1. குகைத்தளம் போன்ற வாழிட அல்லது தாற்காலிக இருப்பிடங்களில் கிடைப்பவை; 2. கல்திட்டை போன்ற ஈமச்சின்னங்களில் கிடைப்பவை.

தமிழகத்தில் கண்டு அறியப்பட்ட பாறை ஓவியங்கள் குறித்து இந்நாள் வரை பேசப்பட்டவை ஒன்றைப் பார்வை கொண்டிருப்பதாகவே உள்ளன. அவை, தொல்லியல் சார்ந்த மதிப்பீடுகளையும், ஓவியக் காட்சிகளின் சித்தரிப்புகளின் விளக்கங்களையும் தருபவையாக மட்டும் உள்ளன. அவை கிடைக்கும் இடம் சார்ந்தும், காட்சிகள் பொருள் சார்ந்தும், பண்பாட்டுக்கூறுகளின் பிற தொல்லியல் தடயங்களுடன் ஒப்பாய்வு செய்தவை குறைவே.

குகைத்தளங்களில் உள்ள ஓவியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன், கல்திட்டை வகை ஈமச்சின்னங்களில் காணக்கிடைக்கும் ஓவியங்களைப் பற்றி அறியலாம்.

தென்னிந்தியாவில், பண்டைய தகடூர் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளான இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம், வட ஆர்க்காடு, செங்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்திட்டைகளில் மட்டும்தான் ஓவியங்கள் உள்ளதை அறியமுடிகிறது. அதிலும், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்திட்டைகளில் உள்ள ஓவியங்கள் குறித்து முறையான பதிவுகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட ஆர்க்காடு, செங்கம் பகுதிகளில் கல்திட்டை ஓவியங்கள் உள்ளன என்ற வாய்மொழித் தகவல்கள் மட்டுமே உலவுகின்றன. முறையான பதிவுகள் கிடைக்காத நிலையே உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரிப் பகுதி கல்திட்டை ஓவியங்கள்தாம், பெருங் கற்காலப் பண்பாட்டின் மற்றொரு முகத்தைக் காட்டும் ஒரே சன்றாக இன்றளவுக்குத் திகழ்கிறது.

வாழிட ஓவியத்தின் குணங்களை, பெருங் கற்படை ஈமச்சின்னமாகிய கல்திட்டை ஓவியங்களின் குணங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது பொருந்தாமலும் இருக்கக்கூடும். கல்திட்டை ஓவியங்கள் குறிப்பாக இறந்தவர் குறித்தும், சமூகத்தில் அவரது பங்களிப்பு, அவர் போற்றப்படுவதற்கான / சிறப்பிக்கப்படுவதற்கான காரணங்களைப் பகிர்வதாக இருக்கும் என வரையறுத்துகொண்டு அந்த ஓவியங்களை ஆய்வோம்.

மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியங்கள்

யுத்தபூமி தொடரின் அத்தியாயம் 23 மற்றும் 24-ல், மல்லச்சந்திரத்தில் அமைந்துள்ள கல்திட்டைகளின் சிறப்பியல்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இக்கல்திட்டைகளின் மற்றொரு சிறப்பியல்பு, இவற்றில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் ஆகும். இங்கு, 9 கல்திட்டைகளில் தெளிவான ஓவியங்களைக் காணமுடிகிறது. மேலும், சில கல்திட்டைகளில் அழிவுற்ற நிலையிலும் தெளிவற்றும் சிலவற்றைக் காணமுடிகிறது. தெளிவான காட்சிகள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும், வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டவை ஆகும்.

கல்திட்டை ஓவியங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றுக் கால நடுகற்களே பெரும் துணைபுரிகின்றன. நடுகற்கள் உணர்த்தும் பல செய்திகளைக் கல்திட்டை ஓவியங்களோடு பொருத்திப்பார்க்க முடிகிறது.

கல்திட்டை ஓவியம் 1

இந்த ஓவியம், கல்திட்டையின் மேற்குப் புற பலகைக்கல்லில் இடம்பெற்றிருப்பதாகும். இதில், இரண்டு மனித வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இருவரும் நின்ற கோலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு சித்தரிப்புகள் இல்லை. பொதுவில், விலங்கு உருவங்களுடனோ, மற்றவர்களுடன் போரிடுவது போன்றோ காட்டப்படும் நிலைக்கு மாறாக, இவ்வுருவங்கள் ஆயுதங்கள் இல்லாதவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

Story image

மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியம் 1

இச்சித்தரிப்பு, இவர்கள் போரில் அல்லது வீரம்வித்தி மாய்ந்தவர்களாக இல்லாதிருக்கலாம் அல்லது இயற்கையான மரணத்தைத் தழுவியவர்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு அழைத்துச்செல்கிறது. மேலும், ஒரே கல்திட்டையில் இரு உருவங்கள் ஒன்றுபோல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், இது இருவருக்கு எடுக்கப்பட்ட கல்திட்டையாகவும் இருக்க வேண்டும்.

கல்திட்டை ஓவியம் 2

இந்தக் கல்திட்டை ஓவியம், கிழக்குப்புற இடுதுளைக்கு நேர் எதிரே அமைந்த மேற்குப்புற பலகைக்கல்லில் இடம்பெற்றுள்ளது. இதில் மனித வடிவம், விலங்கு வடிவம் மற்றும் குறியீடு முதலியவை இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்களின் காட்சி அமைப்புகளைக் கொண்டு, இது இரு தொகுப்பாக உள்ளதாகக் கருதலாம். இதன்மூலம், இது இரு செய்திகளைப் பரிமாறுகிறது.

முதல் ஓவியத்தில், ஒரு மனித வடிவம் விலங்கின் உருவம் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Story image

மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியம் 2

இரண்டாவது காட்சியில், ஒரு உயரமான நேர்க்கோடும், அந்த நேர்க்கோட்டின் மீது கிடைமட்டத்தில் பதினாறு சிறிய கிடைக்கோடுகளும் கொண்ட குறியீடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. நேர்க்கோட்டின் உச்சிமுனை, அரைவட்ட வடிவில் காட்டப்பட்டுள்ளது. இக்குறியீட்டின் வடிவமைப்பு முறை, கிடைக்கோடுகளின் எண்ணிக்கை போன்றவற்றை வைத்து, இக்குறியீடானது காலத்தைக் குறிக்கும் ஒன்றாகவோ அல்லது எண்ணிக்கையைக் குறிக்கும் ஒன்றாகவோ கருதலாம் என்பர். (இராசு பவுன்துரை, தமிழகப் பாறை ஓவியங்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 2001, ப. 117).

இக்கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டி உள்ளது. குறியீடு என்று கருதும் உருவம் ஒரு விலங்கின் உருவமாகலாம். விலங்குகளோடு மனிதன் புரிந்த யுத்தங்களைக் காட்சிப்படுத்தும்போது, விலங்கு உருவங்கள் அதன் வலிமையும், விரைப்பும், ஆக்ரோஷமும் புலப்படும்விதமாக, எலும்புகள் புடைத்திருக்கும் காட்சியில் உடல் தோல் காட்டப்படாது, ஊடுகதிர் ஓவியம் (X Ray painting) போன்று எலும்புகள் காட்சிப்படுத்தப்படும் மரபை, சிந்துவெளி முத்திரைகள் கொண்டு முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டது. இந்நிலையில், ஊடுகதிர் ஓவியம் போன்ற பாறை ஓவியக் காட்சிகள், இரண்டு வகையில் பொருளைத் தருவதாகக் கருதலாம்.

Story image
Story image

சிந்துவெளி முத்திரைகளில் எலும்புகள் புடைக்க ஆக்ரோஷமாக உள்ள புலிகளின் காட்சிகள்

(இம்முத்திரைகள் பற்றி மேலும் அறிய, யுத்தபூமி அத்தியாயம் 30 பார்க்கவும்). இவ்விளக்கத்தின் பின்னணியில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஊர்வன வகையினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு என்று ஆகிறது.

எனில், இந்த ஓவியம் இன்னதென்று அறியமுடியாதுள்ள (ஒருவேளை பாம்பு) ஊர்வன வகையின கொடிய விலங்கு ஒன்றைக் கொன்று தானும் மாய்ந்த வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட கல்திட்டை என்ற விளக்கத்தைப் பெறமுடிகிறது.

கல்திட்டை ஓவியம் 3

இக்கல்திட்டையில் விளங்கிக்கொள்ளமுடியாத குறியீடுகள் சில இடம்பெற்றுள்ளன. தெளிவாக உள்ள இரண்டு இங்கு தரப்பட்டுள்ளது.

Story image

மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியம் 3

இக்குறியீடுகள், ஏதோ ஒரு தகவலைப் பரிமாறுகின்றன. இதில் மனித வடிவங்கள் இடம்பெற்ற பகுதிகள் அழிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

கல்திட்டை ஓவியம் 4

ஒரு மனித வடிவம் மட்டும், கல்திட்டையின் மேற்குப்பகுதியில் உள்ள கற்பலகையில் காணப்படுகிறது.

Story image

இந்த மனித வடிவம், மற்ற கோட்டோவியங்களில் இடம் பெறும் வடிவத்தின் இயல்பில் இல்லாமல் மாறுபட்டுக் காட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த வடிவத்தில், கால்களும் கைகளும் மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளன. இது, இம்மனிதனின் சராசரி நிலைக்கு மீறிய நிலை ஒன்றைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது எனக் கருதலாம்.

கல்திட்டை ஓவியம் 5

இந்தக் கல்திட்டை ஓவியத்தில், இரண்டு மனித வடிவங்களும், இரண்டு வகையான குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ள முதல் மனித வடிவத்தில், தலைக்கு மேல் வில் அம்பு போன்ற ஆயுதக் குறியீடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவிதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அம்புமுனை, மனிதனின் தலையை நோக்கி மேலிருந்து குறிவைப்பதுபோல் உள்ளது. மேலும், இம்மனிதனின் தலை வட்ட வடிவமாகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, ஒரு மீன் வடிவம் ஒன்று கீழ்மேலாக இரு வட்டவடிவ புள்ளிகளைப் பெற்றுள்ளதாக வரைப்பட்டுள்ளது. இந்த மீன் வடிவம், சிந்துவெளி முத்திரைகளில் காணக் கிடைக்கும் மீன் வடிவத்தை ஒத்ததாக உள்ளது.

Story image

இது, கிருஷ்ணகிரி மாவட்டப் பெருங் கற்கால வாழிட, குகை ஓவியங்களில் சிறப்பாக காணக்கிடைக்கும் சிந்துவெளி எழுத்துகள் மீதான ஆய்வை வேண்டுபவையாக உள்ளது. இவ்வகைக் குறியீடுகள், கல்திட்டை ஓவியங்களிலும் இடம்பெறுவது முக்கியமானதாகிறது. பொதுவாக, வளமையின் குறியீடாகவும் குலக்குறியாகவும் மீன் சித்தரிக்கப்பட்டதை அறியமுடிகிறது. எனில், இக்கல்திட்டையில் இடம்பெறும் மீன் குறியீடு வளமையின் குறியீடு எனலாம். இவ்விரு சித்தரிப்புகளுக்குச் சற்று கீழாக, மற்றொரு மனித வடிவம் காட்டப்பட்டுள்ளது. இந்த உருவத்தின் சித்தரிப்பு கூடுதல் கவனத்தை வேண்டுகிறது. இந்த உருவத்தில், தலைப்பகுதி தனித்துக்காட்டப்படாது, ஒரு கோடாக மட்டும் உள்ளது. மேலும், இந்த மனித வடிவத்தில் கைகளுக்குக் கீழ் மார்புப்பகுதியில் ஒரு கிடைக்கோடு வரையப்பட்டுள்ளது.

இவ்வாறான கிடைக்கோடு இடம்பெற்ற மனித வடிவத்தை கீழ்வாளை ஓவியத்திலும் காண்கிறோம். அங்கு, அந்த உருவம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஓவியமும் ஒரு பெண்ணைக் காட்சிப்படுத்துவதாகக் கருதலாம். எனில், இக்காட்சி கொண்டு பார்க்கையில், இப்பெண்ணுக்கும் சேர்ந்து இக்கல்திட்டை எடுக்கப்பட்டதாகிறது. இருவரும் இறந்ததற்கான காரணம் அறியமுடியாது உள்ளது. பிற்காலத்திய சாதி போன்ற செயலுடன் இதனை இணைத்துப் பார்க்கக் கூடுதல் சான்றுகள் தேவை.

பொதுவாக, பாறை ஓவியங்களில் கைகள் காட்சிப்படுத்தப்படும் குணத்துக்கு மாறாக, இவ்விரு மனித உருவங்களிலும், கைகள் இரண்டும் மேல்நோக்கித் தூக்கியவாறு காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கைகள் மேல்நோக்கி உயர்த்தியபடி காட்டுவது, வழிபாட்டில் வணங்குவது அல்லது வழிபாட்டில் வேண்டுதல் செயலைக் குறிக்கும் என்பர். ‘வான்வெளியை வேண்டி வணங்குதல் அல்லது சடங்கு செய்தல்’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுவது உண்டு. (இராசு. பவுன்துரை, தமிழகப் பாறை ஓவியங்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 2001, ப. 118). இதனை, வணங்கும் நிலைக்கு உயர்ந்தவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.