புலியின் உடலும், அதன் தலை மற்றும் முன் கால்களுக்குப் பதிலாக, பெண் நின்ற கோலத்தில் உள்ளதும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, விலங்கு உருவத்தில் மனித உடல் உறுப்புகள் இடம்பெறுவது, அவ்விலங்கின் சக்தியை மனிதன் பெறுவதைக் குறியீடாக்கும் செயலாகும். இதுவே, மிகை ஆற்றலைச் சித்தரிக்கும் செயல் என்றுகூட தொல்லியலாளர்களும், மானிடவியலார்களும் கருதுகின்றனர். முத்திரையில் உள்ள பெண் ஒரு தலைவியும்கூட என்பதை தலையில் மகுடம்போல் கொம்புகளைப் பொருத்தியிருப்பதைக் கொண்டு அறியலாம். மேலும், மேற்கண்ட முத்திரையில், எருதின் இடதுபுறமாக இருந்து இரு கைகளால் திமிலைப் பற்ற முயலும் மனித வடிவத்தின் முகம், விலங்கு அல்லது பறவையின் முகத்தைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. இது, மேலே விளக்கம் கண்டதுபோல் தலைமைப் பண்பைக் காட்டுவதாக இருக்கலாம்.