நீதியைத் தேடி: பாவலர் கோ. மலர்வண்ணன்


நீதியைத் தேடிப் பயணம் செல்கையில்
நேர்ந்திடும் அவலம் நினைக்கின் வருத்தமே!
போதிய பணபலம் வாய்க்கா தவர்க்குப்
போராட் டந்தான் வாழ்நாள் எல்லாம்!
வாதிகள் செல்வம் மிக்கவ ராகவும்
வறுமையில் பிரதி வாதிகள் இருப்பின்
நீதியார் பக்கம் நிற்கும்? என்பதை
நினைந்து பார்மின்! வெல்வது பணமே!
அரசியல் வாதிகள் ஆயிரம் ஊழல்
அடுக்கடுக் காகப் புரிந்திட் டாலும்
அரசியல் கட்சியோ அவர்க்குக் கவசமாய்
அவரைப் பாது காத்திடச் செய்யுமே!
அரசியல் பகைவரை ஒறுக்க நினைக்கும்
ஆளுங் கட்சியர் வழக்கு தொடுப்பதும்
சிறையினில் அடைத்துத் தீமை விளைப்பதும்
தெரிய வைத்திடும்; நீதியெங் குள்ளதாம்?
செல்வாக் குள்ளவர் வழக்கில் சிக்கினால்
சிலமணிப் பொழுதில் முன்பிணை பெறுவதும்
செல்வாக் கற்றவர் முன்பிணை பெற்றிடத்
திரிந்து துயரம் அடைந்து சோர்வதும்
எல்லா நாள்களும் நடப்பது தானே?!
எங்கே நீதி? என்பது புரியுமே!
பொல்லா தவர்கள் சிலரோ, நீதியின்
போக்கை மாற்றி வளைக்க நினைப்பரே!
நீதி மன்றம் ஒன்று வழங்கிய
நிகரில் லாத தீர்ப்பினை வேறொரு
நீதி மன்றம் நிறுத்தி வைத்து
நேரெதிர் தீர்ப்பு வழங்குதல் காண்கிறோம்!
நீதி எங்கே இருக்கிற தென்பதை
நீங்களும் நானும் அறியவா கூடும்?
நீதி தேவதை கண்களை மறைத்தால்
நீதி இருப்பிடம் தெரியுமோ அதற்கே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...