27.11.1940: உலக புகழ் பெற்ற தற்காப்பு கலை நிபுணர், நடிகர் புரூஸ் லீ பிறந்த தினம் இன்று!
புரூஸ் லீ 27.11.1940 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் பிறந்தார்.


புரூஸ் லீ 27.11.1940 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு இல்லத்தரசி.
புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயது வரை அங்குள்ள லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை சண்டையில் புரூஸ் லீ தாக்கினார் . இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.
புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.
இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது. புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்!
ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் ஒரு விடை தெரியாத மர்மமாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...