தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப் பணியாளர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய துறை சார்ந்த தனித்தனி தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வரும் போதிலும், பெரும்பான்மையான அரசுப் பணிகளுக்கு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அந்த அமைப்பு சிக்கலின்றி செயல்பட்டு வரும் நிலையில், அதை இரண்டாக பிரிக்கவும், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசின் எஸ்.எஸ்.சி போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 8&ஆம் நாள் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.