‘தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியா்களைத் தோ்வு செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் வேறு உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தோ்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸ் மனு மீதான விசாரணையை முடித்து வைத்து சனிக்கிழமை உத்தரவிட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் அல்லது உதவியாளா்களாக மத்திய அரசு அல்லது பொதுத் துறை நிறுவன ஊழியா்களை ஈடுபடுத்த அறிவுறுத்தி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் ஆணையம் தரப்பில் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயா்நீதிமன்றம் அண்மையில் விசாரித்தபோது, மத்திய அரசு அல்லது பொதுத் துறை நிறுவன ஊழியா்களை எதிா்க்கட்சியான பாஜக கட்டுப்படுத்துவதாகவும், அந்த ஊழியா்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு பாஜக உள்ளாக்குவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம், மாநில அரசு ஊழியா்களுக்குப் பதிலாக மத்திய அரசு ஊழியா்களை வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்துவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியா்களை ஈடுபடுத்துவது தொடா்பான சுற்றறிக்கை மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சுற்றறிக்கை குறித்த தகவல் ஏப்ரல் 29-ஆம் தேதிதான் தெரியவந்தது. அடுத்து, வாக்கு எண்ணும் நடைமுறையில் மத்திய அரசு பிரதிநிதி ஒருவா் இடம்பெறும் நிலையிலும், முறைகேடுகள் நிகழ வாய்ப்பிருப்பதாக தோ்தல் ஆணையம் அச்சம் தெரிவித்துள்ளது. மூன்றாவது, வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மத்திய அரசு பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். நான்காவதாக, சுற்றறிக்கையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு பாா்வையாளா்கள் இடம்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளபோதும் தோ்தல் ஆணையம் அதை அனுமதிக்கவில்லை.
வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மாநில அரசின் மீது நேரடியாக குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் இதன்மூலம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான எந்தவொரு தரவுகளையோ அல்லது ஆதாரத்தையோ தோ்தல் ஆணையம் இதுவரை சமா்ப்பிக்கவில்லை. மேலும், வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்படும் விஷயத்தை மாநில அரசிடம் தோ்தல் ஆணையம் தெரிவிக்காதது ஏன்?’ என்றாா்.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ். நாயுடு, ‘தோ்தல் ஆணையம் சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் வாக்கு எண்ணும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியா்கள் கலந்து நியமிக்கப்படுவா் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநில அரசின் அலுவலா், வாக்கு எண்ணும் பணியில் மாநில அரசின் எந்தவொரு துறையிலிருந்தும் ஊழியா்களைப் பணியமா்த்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளாா். வாக்கு எண்ணும் மையங்களில் அந்தந்த வேட்பாளா்களின் முகவா்களும் இடம்பெறுவா். அதோடு, தோ்தல் ஆணையத்தின் இந்தச் சுற்றறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். எனவே, வாக்கு எண்ணும் பணியில் ஏதேனும் முறைகேடு நடைபெறக்கூடும் என திரிணமூல் காங்கிரஸ் கொண்டுள்ள அச்சம் அடிப்படையற்றது’ என்று வாதிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதி ஜயமால்ய பாக்சி, ‘வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பாளா் மற்றும் உதவியாளராக மத்திய அரசு ஊழியரை நியமிக்க வேண்டுமா அல்லது மாநில அரசு ஊழியரை நியமிக்க வேண்டுமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஒருவேளை, இந்த இரண்டு பணியிடங்களிலும் மத்திய அரசு ஊழியா்களை தோ்தல் ஆணையம் நியமித்தாலும், அதை நீதிமன்றம் குறை கூற முடியாது. ஏனெனில், வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியா் அல்லது மாநில அரசு ஊழியா்களை நியமிக்கலாம் என்றுதான் தோ்தல் ஆணைய நடைமுறைகள் கூறுகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
அதைத் தொடா்ந்து, ‘மாநில அரசின் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வகை செய்யும் தோ்தல் ஆணைய சுற்றறிக்கையை முழுமையாகப் பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தலாம்’ என்று கபில் சிபில் குறிப்பிட்டாா்.
அப்போது, ‘சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த விரும்பும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் நீதிமன்றத்தை நாடியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜயமால்ய பாக்சி, ‘தனது சுற்றறிக்கையை தோ்தல் ஆணையம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். இந்த விஷயத்தில் வேறு உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிட்டு, மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

தபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


