/

பரம பத தேர்வு

உலகிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று கருதப்படுவது மத்திய தேர்வாணயம், அரசு குடிமைப் பணிகளுக்காக ஆண்டுதோறும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:45 am

ஆர். நட​ராஜ்

உலகிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று கருதப்படுவது மத்திய தேர்வாணயம், அரசு குடிமைப் பணிகளுக்காக ஆண்டுதோறும் நடத்தும் மூன்று கட்டத் தேர்வு. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் கலந்து கொள்ளும் தேர்வு என்பதாலேயே இதன் கடினம் பிரமிப்பூட்டுவதாக உணரப்படுகிறது.
 பதினைந்து மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்தால் உயிர் பிழைப்பது எவ்வளவு கடினமோ, அந்த அளவு பிரம்ம பிரயத்தனம், இந்தத் தேர்வில் வெற்றி பெறுவது என்றால் மிகையல்ல.
 இந்த வருடம் சுமார் ஆறு லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்ட முதல் கட்டத் தேர்வு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதிலிருந்து பதினாராயிரம் தேர்வர்கள் அடுத்தக் கட்ட எழுத்துத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். மூன்றாம் கட்டம் நேர்காணல்.
 பத்து லட்சம் பேர் பதிவு செய்து கொண்ட போட்டியில் நேர்காணலுக்கு தகுதி அடைபவர்கள் சுமார் 3,000 பேர். அதிலிருந்து அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களைப் பொருத்து சுமார் 1,200 அதிர்ஷ்டசாலிகள் உயர் அரசுப் பணிக்குத் தேர்ச்சிப் பெறுகிறார்கள்.
 பத்து மாதங்கள் நடைபெறும் இந்த மெகா போட்டித் தொடர், சமீபத்தில் முதல் கட்டத் தேர்வோடு துவங்கியது. 71 நகரங்களில் சுமார் 2,200 மையங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
 பொது அறிவு, சரித்திரம், பூகோளம், அறிவியல் என்று பல பாடங்களிலிருந்து சிந்தித்து பதில் கொடுக்க வேண்டிய கேள்விக் கணைகளை எதிர்கொண்டு சரியான விடைகளை அளிக்க வேண்டும். தர்க்கத் திறமை, வாதிடுவதில் வல்லமை போன்றவை சோதிக்கப்படும்.
 காவிரி நதிக் கரையில் அமைந்த சாம்ராஜ்யத்தின் பிரபலமான நகரத்தின் பெயர் என்ன? இந்தியப் பொறியாளர்கள் சங்கம் எந்த வருடம் துவங்கியது? போன்ற கேள்விகள் தேர்வர்களைக் குழப்பும். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல, ஒரு தப்பான பதில் ஒருவரின் எதிர்காலத்தையே மாற்றும் படபடக்கும் நெஞ்சத்தோடு அடுத்தக்கட்ட தேர்விற்கான முடிவிற்கு காத்திருப்பார்கள். தேர்வில் வெற்றி பெறாதவர்கள் சளைக்காமல் அடுத்த ஆண்டு தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். இப்போது குறைந்தபட்சம் ஆறு முறை தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
 முன்பு அதிகபட்சமாக மூன்று முறை தான் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது வயது உச்சவரம்பு 26-ஆக இருந்தது. ஆனால், காலப்போக்கில் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டு சாதி உள்பிரிவின் அடிப்படையில் 21 வயதிலிருந்து 37 வயது வரை போட்டியில் கலந்து கொள்ளலாம்.
 எந்த விதத்தில் வயது முதிர்ச்சி, திறமையானவர்களைத் தெரிவு செய்ய உதவும் என்பது விவாதத்திற்குரியது. மேலும், எழுத்துத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் ஒருவரது வெற்றியையும் அவருக்குக் கிடைக்கக் கூடிய பணி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அல்லது இதர பணிகளா என்பதை நிர்ணயிக்கும்.
 பத்து, இருபது மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஐ.ஏ.எஸ். பணியை இழக்ககூடும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பணி கிடைத்தாலும், பெற்ற மதிப்பெண்களால்தான் விரும்பிய மாநிலத்தில் ஒதுக்கீடு கிடைக்கும். போட்டித் தேர்வில் சில மதிப்பெண்கள் அதிகம் எடுத்தவர், அதிக திறமைசாலி என்று சொல்ல முடியாது.
 அதேபோல், ஒருசில மதிப்பெண்களில் உயர் பணியைத் தவற விட்டவர் திறமையற்றவர் என்று கணக்கிடவும் முடியாது. அதுதான் தேர்வாணைய போட்டியின் தனித்தன்மை. அதுவே தேர்வின் பலமும், பலவீனமும்.
 மத்திய தேர்வாணையம் பாரபட்சமற்ற, எல்லாத் தரப்பினரும் பங்கு கொள்ளக்கூடிய தேர்வு நடத்த தொடர் ஆராய்ச்சியின் அடிப்படையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீபகாலத்தில் பொறியியல், மருத்துவம் பயின்றவர்கள் தேர்வில் அதிகமாக வெற்றி பெறுகிறார்கள்.
 அதுவும், அவர்கள் புதிய பாடங்களாக சமூகவியல், பூகோளம், சரித்திரம், உளவியல் போன்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று தெரிவு செய்து வெற்றியும் பெறுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்றாலும், கலைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவரின் போட்டித் தேர்ச்சி எண்ணிக்கை 20 சதவீதத்தைவிடக் குறைந்துள்ளது .
 தகவல் தொடர்பு, கணினி போன்ற அதிக சம்பளம் ஈட்டக்கூடிய துறைகளை விடுத்து ஆரம்ப சம்பளமாக நாற்பதாயிரம் மட்டுமே அளிக்கும் அரசுத் துறைக்கு ஏன் வர வேண்டும்? முக்கியக் காரணம், அரசுப் பணியில் கிடைக்கும் அதிகார பலம், சமுதாயத்தில் கிடைக்கும் நல் மதிப்பு. பத்தோடு பதினொன்று அதில் நான் ஒன்று என்று தனியார் துறையில் முடங்க விருப்பமின்றி அரசுத் துறைக்கு வருபவர்களும் உண்டு.
 இளைஞர்களின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு புற்றீசல் போல பல சிவில் சர்வீசஸ் தேர்வு தனியார் பயிற்சி மையங்கள் நாடெங்கிலும் துவங்கி விட்டன. அவை லட்சக்கணக்கில் பணம் ஈட்டும் லாபகரமான சேவைத் துறையாக உருவெடுத்துள்ளன.
 தேர்வுக்கான பாடத் திட்டத்தில் உள்ளவற்றை குறுகிய நோக்கோடு கேள்விக்குத் தேவையான விடை என்ற அடிப்படையில் தேர்வர்களை தயார் செய்கிறார்கள். ஆனால், தேர்வாணையம் தேர்வரின் சமயோஜித புத்திக் கூர்மையையும், ஆழ்ந்த அறிவையும் சோதிக்கிறார்கள்.
 தெளிவான புரிதலும், சீரிய சிந்தனை உள்ளவர்களும்தான் தேர்ச்சி பெற முடியும். மனப்பாடம் செய்து விடைத்தாளில் கொட்டினால் மட்டும் தேர்ச்சி அடைய முடியாது. சுயமாக தயார் செய்யும் பல தேர்வர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
 எவ்வாறாவது அரசுப் பணி இலக்கை அடைய வேண்டும் என்று பழுத்த சம்சாரிகளும் அரசுப் பணியில் இணைகிறார்கள். குறைந்த வயதில் பணியில் சேர்ந்தால்தான் அதிக வருடங்கள் பணியில் இருந்து உயர் பதவியை அடைய முடியும். இல்லாவிட்டால், பணி ஓய்வு வயதின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது.
 கஷ்டப்பட்டு கனவுகளை மனதில் தாங்கி, கடினமான தேர்வில் வெற்றிப் பெற்று, மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்று சபதம் பூண்டு பணியில் இணைகிறார்கள், ஆனால், களத்தில் நடப்பதோ வேறு. மக்களோடு ஒட்டாத நடத்தை முடிவுகளை தள்ளிப்போடுதல், நேர்மையற்ற பணி, கோப்புகளை தலையணையாக வைத்து ஆழ்ந்து உறக்கம், இவையெல்லாம் பொதுப் பணியில் பின்னிப் பிணைந்த அவலங்கள்.
 1964-ஆம் ஆண்டிலேயே அப்போதையப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அரசின் இரும்பு கவசமாகிய அரசு நிர்வாகத்தை தன்னால் செப்பனிட முடியாததுதான் தனது மிகப்பெரிய தோல்வி என்று கூறியுள்ளார். ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்தில் இருந்த கலோனியல் மனோபாவம் களையப்படாமல் வேரூன்றியிருப்பது வருந்தத்தக்கது.
 இந்திரா காந்தி, நிர்வாகத்தில் இருக்கும் சுணக்கம் முன்னேற்றத்தை தடுக்கிறது என்றும், அரசுத் துறைகளில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டால்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்றும் நாடாளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பல பரிந்துரைகளை நிர்வாகச் சீரமைப்பிற்காக வழங்கியுள்ளன. அனால், அதை செயல்படுத்துவதில் தான் பிரச்னை. நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த முற்படும்போது அதை தடுப்பதே தேக்கத்தில் தோய்ந்த நிர்வாக வல்லுனர்கள்தான் என்று மொய்லி கமிஷன் கூறியுள்ளது.
 தங்களது வசதிகள், பணியில் பதவி உயர்வு, முன்னேற்றம், அதிகாரம் இவைதான் குறிக்கோளே தவிர, அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம், அங்கீகாரம் ஜனநாயகத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்டது என்பதை மறந்து, தாங்களாகவே வகுத்துக்கொண்ட நடைமுறை விதிகளை காண்பித்து தங்களது அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் மாற்றத்திற்கு குறுக்கே நிற்கும் மிகப் பெரிய தடைக்கல்.
 2012-இல் சர்வதேச பொருளாதார மையம் பனிரெண்டு ஆசிய நாடுகளில் நடத்திய ஆய்வில், இந்தியாவின் அதிகாரத்துவம் மிகவும் மோசமானது என்று கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள குறைவான கட்டமைப்புகள், திறமையற்ற நிர்வாகம், குழப்பும் விதிகள், தொழில் செய்ய முனைவோருக்கு சிம்ம சொப்பனமாக பயமுறுத்துகின்றன என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 கடந்த 60 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட கமிஷன்களும் கமிட்டிகளும் பொதுநிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளைக் களைய ஏற்படுத்தப்பட்டு பரிந்துரைகள் அளித்துள்ளன. ஆனால், அவை கடலில் கரைத்த பெருங்காயமாக மறைந்துவிடுகின்றன.
 மத்திய அரசு நிர்வாகத்தில் ஒரு கோப்பில் முடிவு எடுப்பதற்கு நான்கு தளங்களை கடந்தால் போதும், தற்போது இருக்கும் 12 தள பார்வை தேவையில்லை என்று முதல் கட்டமாக ஒரு சீரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது.
 அரசு அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு பதினைந்து நாள்களுக்குள் உரிய சான்றிதழ்கள் அளிக்கப்படும் என்பது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கும்.
 பொது நிர்வாகம் திறமையாகச் செயல்பட்டால்தான் முன்னேற்றம் உறுதியாகும். இந்தியாவின் இளமையான மனித வளம்தான் மாபெரும் சக்தி. இளைய சமுதாயம் அரசுத் துறையில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பது நல்ல அறிகுறி. தேர்வாணையங்கள் அதை காப்பாற்றும் விதமாக நேர்மையான தேர்வுகளை துரிதமாக நடத்த வேண்டும்.
 மத்திய தேர்வாணையம் பத்து மாதங்களில் பத்து லட்சம் தேர்வர்கள் கலந்து கொள்ளும் மூன்று கட்டத் தேர்வினை நடத்த முடியும் என்றால், ஏன் மாநில தேர்வாணையங்கள் அதே முறையை செயல்படுத்த முடியாது? நிச்சயமாக முடியும்.
 நேர்மையான தேர்வு, உடனுக்குடன் பணியமர்த்தல், பணியில் உரிய பயிற்சி தெளிவாக அமைந்தால், புது ரத்தம் பாய்ச்சிய முறுக்கேறிய தேகமாக நிர்வாகம் மக்கள் சேவையில் ஈடுபட முடியும்.
 
 கட்டுரையாளர்:
 ஐ.பி.எஸ். அதிகாரி (ஓய்வு).
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.