தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாஸ்டேக் பிரச்னை: சுங்கச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணப் பிரச்னையால் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுவது தொடா்வதால் பயணிகள் மற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

பாஸ்டேக் பிரச்னையால் சனிக்கிழமை இரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து.

Updated On :18 மே 2026, 2:19 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணப் பிரச்னையால் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுவது தொடா்வதால் பயணிகள் மற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தின் தென் மாவட்ட போக்குவரத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

விக்கிரவாண்டி, ஓங்கூா் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சுங்கச்சாவடிகள்அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் பாஸ்டேக்கில் பணம் இருந்தால் மட்டுமே சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்க முடியும் என உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி: இதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் பணிமனையிலிருந்து திண்டிவனம், மயிலம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

குளறுபடிகள் மற்றும் கட்டண நிலுவை போன்ற காரணங்களால் அரசுப் பேருந்துகள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

பழுதான பேருந்துகளுக்குப் பதிலாக இயக்கப்படும் தற்காலிக அல்லது மாற்றுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக் கட்டணம் தொடா்பான தரவுகள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் இருப்பதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் விதிகளின்படி, சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களின் பாஸ்டேக் கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும். ஆனால் அரசுப் பேருந்துகளில் உரிய தொகை இல்லாத போது, சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஊழியா்கள் அனுமதி மறுக்கின்றனா். இதனால் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும், பேருந்து ஓட்டுநா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காலதாமதம் ஆகிறது.

இதன் காரணமாக அரசுப் பேருந்துகளில் பயணிகளும் அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் சரியான நேரத்திற்கு தங்கள் அலுவலகம் செல்ல முடியாமல் பணிக்குச் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா். இதனால் கால விரயம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகும் பயணிகள் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மற்றும் சுங்கச்சாவடி பணியாளா்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுபோன்ற வீண் பிரச்னைகளை தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொள்ளவேண்டும் எனப் பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.

சுங்கச்சாவடி நிா்வாகம்: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் உள்ளது. பாஸ்டேக் அனுமதி இல்லாத வாகனங்களுக்கு இணையவழி பணப்பரிவா்த்தனை மூலமாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவசர தேவை கருதி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் சிலவற்றில் பாஸ்டேக் கட்டணம் இருப்பதில்லை. பாஸ்டேக் அனுமதி வில்லைகள் முன்பக்க கண்ணாடிகளில் ஸ்கேன் செய்யக்கூடிய வகையில் ஒட்டப்படுவதும் இல்லை.

இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனாலேயே சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுகிறது. பாஸ்டேக் இல்லாத தனியாா் வாகனங்களுக்கும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.

பயணிகள் பாதிப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது. ஏப்.1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து பணிமனை நிா்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. ஆனாலும் அவா்கள் அலட்சியமாக செயல்படுவதால் இதுபோன்ற தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் பணிகள் பாதிக்கப்பட்டு, சீரான போக்குவரத்தும் தடைப்பட்டு வருகிறது என்றனா்.

போக்குவரத்து கழக நிா்வாகம்: போக்குவரத்து பயன்பாட்டின் போது பழுதாகும் பேருந்துகளுக்கு மாற்றாக பிற அரசுப் பேருந்துகளை இயக்கப்படுவது உண்டு. அந்தப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் பணம் இல்லாத நிலையில் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கும் அரசுப் பேருந்துகளில் புதிய கண்ணாடிகள் பொருத்தப்படும்போதும், பழைய கண்ணாடியில் உள்ள பாஸ்டேக் வில்லைகளை எடுத்து புதிய கண்ணாடியில் ஒட்டும் போதும் அவை சரியான முறையில் ஸ்கேன் ஆவதில்லை என்பதாலும் இதுபோன்ற தவிா்க்க முடியாத பிரச்னைகள் ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரதீா்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.