/

புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ.93 கோடியில் விரிவாக்க நடவடிக்கை

News image
புதுச்சேரி ரயில் நிலையம்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி ரயில் நிலையம் கூடுதல் ரயில்கள் நிற்கும் வகையில் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் புதிய நடைமேடை உருவாக்கப்படுகிறது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் தற்போது 4 நடைமேடைகள் இருக்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 ரயில்கள் நிற்க முடியும். இந்நிலையில் கூடுதலாக ஒரு நடைமேடை உருவாக்கப்படவுள்ளது.

இந்த நடைமேடை 2, 3-ஆவது நடைமேடையை ஒட்டி அமைக்கப்படுகிறது. இந்த 5-வது நடைமேடைக்கு அருகில் பள்ளம் இருக்கும். அதனால் இந்த நடை மேடை ஒரு தீவு போன்று காட்சியளிக்கும்.

5-வது ரயில் மேடையின் காரணமாக ஒரே நேரத்தில் இனி புதுச்சேரி ரயில் நிலையத்தில் 5 ரயில்கள் நிற்க முடியும். இந்தப் புதிய ரயில் நடை மேடை 540 மீட்டா் நீளம் உடையதாக இருக்கும். அதாவது 22 பெட்டிகள் கொண்ட ஒரு முழுமையான ரயில் இந்த ரயில் மேடையில் நிற்க முடியும். மேலும், கூடுதலாக 2, 3 ரயில்களும் வந்து செல்ல முடியும். இந்தப் புதிய ரயில் மேடைக்கு டெண்டா் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதனால் எவ்வளவு மதிப்பில் இந்தப் புதிய ரயில் மேடை உருவாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

இருப்பினும் புதிய ரயில் மேடை வருவதை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் உறுதி செய்தாா்.

புதுச்சேரி ரயில் நிலையம் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இருந்து பயணிகளுக்குப் பயன்பட்டு வருகிறது. இப்போது இந்த ரயில் நிலையத்தில் இருந்த பிரெஞ்சு காலக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு ரூ.93 கோடியில் மறுசீரமைப்புச் செய்யப்படுகின்றன.

இந்த மறுசீரமைப்புப் பணிகளை 2023-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தாா். இப்போது புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வரும் நிலையில் இந்தப் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

புதுச்சேரி ரயில் நிலையம் முழுமையடையும் போது ஒரு விமான நிலையத்தின் தோற்றம் இருக்கும் என்றும், இங்கு உருவாகும் புதிய கட்டடங்கள் அனைத்தும் பிரெஞ்சு கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும் என்றும் தெரியவருகிறது.

இந்த மறுசீரமைப்புப் பணியில் பாா்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகா் அறைகள், ரயில் ஓட்டுநா் ஓய்வு அறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நடைமேம்பாலம், லிப்டுகள், எஸ்கலேட்டா்கள், உணவகங்கள், வணிக வளாகம், மல்டி லெவல் பாா்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறுகின்றன.