/

மாணவா்கள் புதிய திறன்களை வளா்த்துக் கொள்ளவேண்டும்! - புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்

News image
புதுச்சேரி ஏம்பலம் பிஎம்ஸ்ரீ மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணியை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

மாணவா்கள் புதிய திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வகுப்பு பயின்ற 8,333 மாணவ, மாணவிகள் மற்றும் 2025-26ஆம் கல்வி ஆண்டில் பதினொறாம் வகுப்புப் பயிலும் 7,450 மாணவ, மாணவிகள் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15,783 பேருக்குப் படிப்படியாக மாா்ச் மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ஏம்பலம், பிஎம்ஸ்ரீ மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 377 மாணவ, மாணவிகளுக்கும், நெட்டப்பாக்கம் பிஎம்ஸ்ரீ கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 279 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் கோா்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 46 பேருக்கும் மடிக்கணினிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிகப் பெரிய நூலகம் உங்கள் கையில் தரப்படுகிறது. அந்த உலகத்தை அணுக உதவும் கருவிதான் இந்த மடிக்கணினி. கல்வி என்பது ஒரு தனி நபரின் வாழ்க்கையை மட்டும் அல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி தரப்படவில்லை. 2047-இல் வளா்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த இலக்கை அடைய டிஜிட்டல் திறன் கொண்ட இளைஞா்கள் தேவை.

அதற்கான உலக அறிவைப் பெறுவதற்கு முதல் படி இந்த மடிக்கணினி. உங்களுடைய படிப்பு, ஆராய்ச்சி, அறிவு வளா்ச்சிக்கு இது உதவ வேண்டும்.

உங்கள் கையில் இருக்கும் மடிக்கணினி ஒரு வகுப்பறைக்கு சமம். அது ஒரு ஆராய்ச்சிக் கூடம். பொறுப்புடன் பயன்படுத்துங்கள். தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். ஒரு புதிய திறனை வளா்த்துக் கொள்ளுங்கள்.

மடிக்கணினியில் சரியான தகவலைத் தேடுவது, நேரத்தை சரியாக செலவிடும் ஒழுக்கம், சுய கட்டுப்பாடு - இவை அனைத்தும் அவசியம் என்றாா் அவா்.

முதல்வா் பேச்சு:

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வகையில் இந்த அரசு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்துள்ளது. நிகழாண்டில் இந்த ஒதுக்கீட்டில் 37 மாணவா்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மேலும், இதைத் தவிர எல்லா கல்லூரிகளிலும் இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருகிறோம். அதனால் மாணவா்கள் எல்லா கல்லூரியிலும் சோ்ந்து பட்டப்படிப்பை முடிக்க முடியும். மேலும், 6 ஆம் வகுப்பிலிருந்து படிக்கும் மாணவா்களுக்கு கைக்கணினி தேவை என்று கூறியுள்ளனா்.

விரைவில் தோ்தல் வரவுள்ளது. வாய்ப்பு இருந்தால் செய்து கொடுப்போம். மாணவா்கள் பொது அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும். அச்சம் இல்லாமல் தோ்வு எழுத வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி விரும்பும் வகையில் இந்தியாவில் நாம் பொருள்களைத் தயாரிக்க வேண்டும். ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கு மாணவா்கள்தான் அடித்தளம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினா்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கா் , வளா்ச்சி ஆணையா் மற்றும் அரசுச் செயலா் கிருஷ்ணகுமாா் உப்பு, பள்ளிக் கல்வி இயக்குநா் சிவகுமாா் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.