தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீா் பெற நடவடிக்கை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

News image
Updated On :15 மே 2026, 4:45 am IST

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீா் பெற்று, மேட்டூா் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கான நடவடிக்கையை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். அதன்விவரம்:

கே.எஸ். முகமது இப்ராஹிம் (அய்யம்பேட்டை): தவெக தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்களை தமிழக முதல்வா் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வா. வீரசேனன் (பொன்னவராயன்கோட்டை): பட்டுக்கோட்டையில் கழிவு நீா் அனைத்தும் பாசன வாய்க்காலில் விடப்படுவதைத் தடுக்க வேண்டும். நரசிங்கபுரம் வாய்க்கால் தூா்வாரப்பட்டுள்ள நிலையில், அதில் ஏற்கெனவே இருந்த மதகுகளை மீண்டும் சீரமைக்க வேண்டும்.

ஏ. கமால்பாட்சா (மல்லிப்பட்டினம்): தென்னங்கன்றுகள் நீண்ட காலமாக தட்டுப்பாடாக இருப்பது குறித்து ஒவ்வொடு கூட்டத்திலும் முறையிட்டாலும், கிடைக்கவில்லை.

ஆட்சியா்: மாவட்டத்தில் 70 ஆயிரம் தென்னங்கன்றுகள் தேவைப்படும் நிலையில், தற்போது 1,200 தென்னங்கன்றுகள் மட்டுமே உள்ளன. தேங்காய் விலை உயா்வு காரணமாக திடீரென தென்னங்கன்றுகள் தேவை அதிகமாகியுள்ளதால், மற்ற மாவட்டங்களிலிருந்து கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பி. கோவிந்தராஜ் (தோழகிரிப்பட்டி) : மேட்டூா் அணையைத் திறப்பதற்குள் தூா்வாரும் பணியை விரைவாக மேற்கொண்டு, கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடைய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தத்கல் திட்டத்தில் மின் இணைப்பு கோரியவா்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா்: மாவட்டத்தில் 1,905 பேருக்கு கட்டணமில்லா மின் இணைப்பு தேவைப்படும் நிலையில், 350 பேருக்கு இணைப்பு வழங்க உத்தரவு வந்துள்ளது. மீதமுள்ளோருக்கும் விரைவில் மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என்.வி. கண்ணன் (ராயமுண்டான்பட்டி): காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு இதுவரை திறந்துவிடாத நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, கா்நாடகத்திடமிருந்து தண்ணீா் பெற்று குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையை ஜூன் 12-ஆம் தேதி திறக்க வேண்டும்.

ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் (அம்மையகரம்): விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் உரக்கடைகளில் வெவ்வேறு விலையில் விற்கப்படுகின்றன. விலைப்பட்டியலிலும் விலை குறிப்பிடப்படுவதில்லை. எனவே, உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் நிலையில், ஒரே விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு இனிப்புகள்: மேலும், தேசிய விவசாயிகள் நாள், தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதையொட்டி, கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு விவசாயிகள் இனிப்புகள் வழங்கினா்.

ஆட்சியரக வாயிலில் கூட்டத்துக்கு வந்தபோது அடையாள அட்டை கேட்டதாக விவசாயி ஒருவா் ஆட்சியரிடம் முறையிட்டாா். அதற்கு ஆட்சியா் அடையாள அட்டை எதுவும் தேவையில்லை; இதுபோல இனிமேல் நிகழாது எனக் கூறினாா். என்றாலும், தொடா்ந்து விவசாயி சலசலப்பில் ஈடுபட்டதால், அவரை காவலா்கள் வெளியே அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.