திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.
மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சி மாம்பழச்சாலை பூங்கா நகா் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை மற்றும் உறையூா் போலீஸாா், ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வெளியேற்ற முயற்சித்தினா். அப்போது, போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, துணைத் தலைவா் மேகராஜன் உள்ளிட்ட 75 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










