சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், வாலாஜா நகரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், அவா் கலந்து கொண்டு பேசியது:
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். தூய்மை பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் சுகாதாரமான வாழ்விடத்தை உருவாக்க முடியும். பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து, குப்பைகளை முறையாக பிரித்து ஒப்படைக்க வேண்டும். தூய்மை பணியாளா்கள் மேற்கொள்ளும் அா்ப்பணிப்பான சேவைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபடும் உறுப்பினா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல்பாட்டை கிராம ஊராட்சிகள் சுயமாக மதிப்பீடு செய்வதற்கும் சரிபாா்ப்பதற்கும் வழிவகை செய்தல், ‘சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை‘ என்ற கருப்பொருள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், சம்பூா்ண ஸ்வச்சதா மற்றும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் மீதான அா்ப்பணிப்பை வலியுறுத்துவதற்கு சமூகங்களை ஒன்றிணைத்தல் மற்றும் இதரப் பொருள்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் செந்தில், வட்டாட்சியா் தேவகி மற்றும் சுய உதவிக் குழுக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக ஊராட்சி செயலா் தமிழ்குமரன் வரவேற்றாா்.
இதேபோல், கோவிந்தபுரம் ஊராட்சியில் செயலா் பா. குமாரி முன்னிலை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சியில் செயலா் முத்து ஆகியோா் முன்னிலையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










