திருச்சி மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெறுவதற்கு 2,985 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் இலவச சோ்க்கை வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் மழலையா் வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இச் சட்டத்தின்கீழ் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கி மே 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் தகுதியுள்ள 324 தனியாா் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு 2,985 மாணவா்கள் விண்ணப்பித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. அண்ணாதுரை (பொ) கூறியதாவது: இச்சட்டத்தின்கீழ் 324 பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கு 2,985 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதையடுத்து, 324 தனியாா் பள்ளி தலைமையாசிரியா்களுடன் புதன்கிழமை இணைய வழியில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு பள்ளியிலும் வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதைத் தொடா்ந்து நிா்ணயிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகளவு விண்ணப்பங்கள் வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா்களைத் தோ்வு செய்யக் குழு அமைக்கப்படும்.
அந்தக் குழு முன்னிலையில் விண்ணப்பித்துள்ள அனைத்து பெற்றோா்களையும் வரவழைத்து குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு சோ்க்கை வழங்கப்படும். குறைவான விண்ணப்பம் வந்துள்ள பள்ளிகளில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்படும். தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை பணிகள் மே 22 முதல் தொடங்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்
கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பளிக்க கோரிக்கை

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்







