/

வனத்துறை அதிரடி கட்டுப்பாடு மணிமுத்தாறு அணையில் மீன் வளர்ப்பு, பொதுப்பணித் துறை பணிகள் கேள்விக்குறி

மணிமுத்தாறு அணைக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் அணையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் மீன்வளர்ப்பு மற்றும் பொதுப்பணித் துறையின் அணைப் பராமரிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:05 am

கு. அழகிய நம்பி


மணிமுத்தாறு அணைக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் அணையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் மீன்வளர்ப்பு மற்றும் பொதுப்பணித் துறையின் அணைப் பராமரிப்பு உள்ளிட்டவை கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை, தாமிரவருணி நதியின் முதன்மையான அணை. 1958இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. 118 அடி உயரம் கொண்ட இந்த அணை 5,511 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டது. 
இந்த அணையின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித் துறையினர் கவனித்து வருகின்றனர். மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட பின்னர் சுற்றுப்புற கிராம மக்களின் ஊட்டச் சத்துக் குறைவை போக்கும் வகையில் மீன்வளர்ச்சித் துறை மூலம் இங்கு 1964இல் மீன்பண்ணை அமைக்கப்பட்டு அணையில் மீன் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அணையில் வளரும் மீன்கள் இந்தப் பகுதியில் உள்ள மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் பிடிக்கப்பட்டு, சுற்றுப்புற மக்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதற்காக தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் முதலீட்டில் மீன்வளர்ச்சித் துறை மூலம் பல கோடி முதலீட்டில் தேசிய மீன் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு மீன்குஞ்சுகள் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் ரூ. 20 கோடிக்கு மீன் வளர்ப்பு மூலம் மீன்வளர்ச்சித் துறைக்கு லாபம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்ட பின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு மலைப் பகுதியும் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. 
இதையடுத்து வனத்துறையினர் மணிமுத்தாறு அணை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பல நூறு ஏக்கர் பரப்பு வனத்துறைக்குச் சொந்தமானது என்று அறிவித்தனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிமுத்தாறு அணையில் மீன்களை பிடிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து மீன்பிடிக்க தடை விதிப்பதால் நஷ்டம் ஏற்படும் என்று மீன் துறையினர் கூறியதையடுத்து ஜூன் மாத இறுதி வரை அனுமதியளித்துள்ளனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர் செய்யது சுலைமான்  கூறியது: மணிமுத்தாறு அணை கட்டும் போது இப்பகுதி மக்கள் தங்கள் பங்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும் இந்த அணையில் மீன் பிடிப்புத் தொழில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வனத்துறையினர் அவர்களது வருமானத்திற்காக மீன்பிடிக்க அனுமதி மறுப்பது என்பது ஏற்க முடியாதது.
மேலும் வனத்துறையினர் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கும் போது அதற்காக மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் வனத்துறை சார்பில் இப்போது நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் எதற்கும் அனுமதி வாங்கியதாகத் தெரியவில்லை. 
இந்நிலையில் மீன்வளர்ப்புத் தொழிலுக்குத் தடைவிதித்து அந்தத் தொழிலை நசுக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது என்றார்.
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள புஷ்பா என்பவர் கூறியது: இந்த அணையில் சுமார் 50 ஆண்டுகளாக மூன்றாவது தலைமுறையாக மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம். இந்த அணையில் வளரும் மீன்கள் மற்ற ஆற்று மீன், கடல் மீன் மற்றும் குளத்து மீன்களை விட வித்தியாசமானது. நல்ல தூய்மையான தண்ணீரில் வளர்வதால் இந்த மீன்களை சமைக்கும் போது கெட்ட வாடை வராது. மேலும் இயற்கையான வன மூலிகைகள் நிறைந்த நீரில் வளர்வதால் இதன் மருத்துவ குணமும் அதிகம். 
இங்கு மீன் பிடிக்க அனுமதி மறுப்பதால், 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது என்றார். 
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளர்ப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, எங்களுக்குத் தடை விதிக்கும் வனத்துறை அலுவலர்களிடம் தடைக்கான காரணத்தை எழுத்துப் பூர்வமான அறிவிப்பாக வழங்குங்கள் என்று கேட்டதற்கு இதுவரை வழங்க மறுத்து வருகின்றனர். ஆனால் அரசாணையில் அறிவிப்பு வெளியாகிவிட்டது, அதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
மொத்தத்தில் வனத் துறையினரின் அனுமதி மறுப்பால், மீன் வளர்ப்பு மற்றும் பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ளும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.