விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், அப்பாவி தொழிலாளர்கள் பலியாவதை தடுக்க அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மணல் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இம்மாவட்டத்தில் திருச்சுழி குண்டாறு, வைப்பாறு, அர்ச்சுனா நதி மற்றும் மலை அடிவார பட்டா நிலங்களில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு டிராக்டர், லாரி, டிப்பர் போன்ற வாகனங்கள் கடத்தப்பட்டு வருகிறது. வறட்சி பகுதியான இம் மாவட்டத்தில் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு, அதிலிருந்து கிடைக்கும் அடுப்பு கரியை விற்பனை செய்யம் தொழிலை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளை சேர்ந்தோர் செய்து வருகின்றனர்.
மணல் திருட்டு கும்பல் கூடுதல் சம்பளம் தருவதாகக்கூறி இந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். ஒரு நாள் இரவு மட்டும் மணல் திருடினால் வாகனம், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் போக மணல் திருட்டு தொழிலை செய்வோருக்கு ரூ. 10ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறதாம். மணல் திருட்டில் அதிக பணம் கிடைப்பதால் சில அப்பாவி தொழிலாளர்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தொழில் பேட்டி: மணல் திருடுவதில் ஏற்பட்டுள்ள தொழில் போட்டியால் கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த 2014 இல் மணல் திருட்டில் ஈடுபட்டபோது தொழில் போட்டி காரணமாக கனகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி இரவு மணல் திருட்டில் ஈடுபட்ட போது நடுசூரங்குடியை சேர்ந்த ஞானசேகரன், திலகர்ராஜ் ஆகியோர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவர்களை போலீஸார் அடித்துக்கொன்று விட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் தோட்டத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறி தோட்ட உரிமையாளர் கண்ணாயிரம், அவரது மகன் உதயகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களின் போராட்டம் தொடர்கிறது.
தீர்வு என்ன?: மணல் திருட்டில் ஈடுபடுவோரை கைது செய்ய முயன்றபோது திருத்தங்கல், வச்சகாரபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் போலீஸாரும் அலுவலர்களும் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, மணல் திருட்டை தடுக்க வருவாய்துறை, போலீஸ், கனிமவளத்துறை இணைந்து செயல்பட வேண்டும்.
இல்லையெனில் இது போன்ற உயிரிழப்பு தொடர் கதையாகி விடும். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.