சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூலக அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில், காலை 11.30 மணி அளவில் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வோா் அறையாக சோதனை நடத்தினா்.
தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக முன்பகுதி, வாகனம் நிறுத்துமிடம், இ-சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினா். சுமாா் 1 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது, யாா் அனுப்பியது என்பது குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 9-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










