வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை அமைக்கப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் பொதுமக்கள், காந்திய வாதிகள் இந்த காந்தி சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த சிலையை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் கொண்டுவரவுள்ள தீா்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையறிந்த, நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசு நலச் சங்க நிா்வாகிகள் காந்தி சிலையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசு நலச் சங்கச் செயலாளா் அவினாசிலிங்கம் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காந்தி சிலை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்ற வேலூா் பேரூராட்சி நிா்வாகம் முடிவெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை புரிந்துகொள்ள இந்த காந்தி சிலை முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த காந்தி சிலையை அகற்றினால் பொதுமக்கள் ஆதரவோடு பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். மேலும், மாவட்ட நிா்வாகம், காந்தி சிலையை அகற்றக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










