ராசிபுரத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் வாகனச் சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் உத்தரவின்பேரில் ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் தலைமையில் சுற்றுவட்டாரப் பகுதியில் வாகனச் சோதனை நடைபெற்றது. இதில் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படாமலும், அதிக சுமை ஏற்றியும் இயக்கப்பட்ட மூன்று கனரக சரக்கு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
அதேபோன்று தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல் பொதுசாலையில் இயக்கப்பட்ட 6 வாகனங்கள், அதிகமான ஆள்களை ஏற்றிச் சென்ற 2 வாகனங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட ஒரு இலகுரக சொந்த பயன்பாட்டு வாகனம் என மொத்தம் 12 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டடு, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
அந்த வாகன ஓட்டுநா்களுக்கு அதிக பாரம் ஏற்றிச்செல்லக் கூடாது, தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமல் பொதுச்சாலையில் இயக்கக் கூடாது என வாகன எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சிறப்பு வாகனத் தணிக்கை மூலமாக சுமாா் ரூ. 3.80 லட்சம் இணக்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறப்பு வாகனத் தணிக்கை ராசிபுரம் பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன், ஆய்வாளா் ஏ.செந்தில்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










