/

உதகையில் 61 ஆண்டுகளான உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு! விவசாயிகள் அதிர்ச்சி

உதகை-முத்தொரை பாலடாவிலுள்ள 61 ஆண்டுகள் பழமையான மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm

ஏ. பேட்ரிக்

உதகை-முத்தொரை பாலடாவிலுள்ள 61 ஆண்டுகள் பழமையான மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தென்னிந்திய உருளைக்கிழங்கு விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் முத்தொரை பாலடா பகுதியில் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.  கடந்த 1957ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் உள்ள உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு பாலமாகச் செயல்பட்டு வருகிறது. 
தென் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வட இந்தியாவில் ஹிமாசல்,  உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களிலும் உருளைக்கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 
இருப்பினும் தென் மாநிலங்களில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சிக்காக உள்ள ஒரே மையம்  உதகையிலுள்ள ஆய்வு மையம் மட்டுமே. 
உலகிலேயே  நீலகிரி மாவட்டத்தில் மட்டும்தான் ஆண்டுக்கு மூன்று போகங்களிலும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.  உருளைக்கிழங்கு விவசாயத்தைப் பொருத்த வரை நூற்புழுத் தாக்குதல் (நெமட்டோட்),  இலைக்கருகல் (லேட் பிளைட்)  ஆகிய நோய்களே பெரும் சவாலாக  இருந்தன. இவ்விரு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் புதிய ரக உருளைக்கிழங்கு விதை உதகை ஆராய்ச்சி மையத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.  
கடந்த 1961ஆம் ஆண்டில் இத்தகைய நோய் தாக்குதல் குறித்து நீலகிரியிலிருந்தே புகார் அளிக்கப்பட்டபோது   இவ்விரு நோய்களையும் எதிர்த்து சமாளிக்கக்கூடிய வகையிலான "குப்ரி ஸ்வர்ணா' என்ற புதிய ரக உருளைக்கிழங்கு விதை நாட்டிலேயே முதன்முறையாக  இங்கு உருவாக்கப்பட்டது. இந்த ரகம் தற்போது நீலகிரி  மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடிசெய்யப்படுகிறது. 
அதைத் தொடர்ந்து மிகுந்த நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட "குப்ரி கிர்தாரி,  குப்ரி ஹிமாலினி,  குப்ரி சூர்யா' உள்ளிட்ட ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ரகமான "குப்ரி சஹ்யாத்ரி' என்ற ரகம் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உதகை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்படும் புதிய ரக விதைகள்தான் உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடுவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. 
இந்நிலையில், இந்த மையத்தை மூடிவிடலாம் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் மத்திய வேளாண்மைத் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது. அதனை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகமும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலால் நாட்டிலுள்ள உருளைக்கிழங்கு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 6,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுவந்த உருளைக்கிழங்கு, தற்போது சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்படுகிறது. 
உருளைக்கிழங்கிற்கு போதிய விலை கிடைக்காதது, பருவ மழை தாமதம்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உருளைக்கிழங்கு சாகுபடி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 
அதேசமயம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கேரட் தற்போது 6,000 ஹெக்டேர் வரை பயிரிடப்படுவதாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவிக்கிறார்.  
கேரட் விவசாயத்தில் செலவினங்கள் அதிகம் என்றாலும், லாபம் அதிக அளவில் கிடைப்பதால் பெரும்பாலான  உருளைக்கிழங்கு விவசாயிகள் கேரட் விவசாயத்துக்கு மாறிவிட்டனர்.
ஏற்கெனவே உருளைக்கிழங்கு சாகுபடியைத் தாக்கி வந்த இரு நோய்களுக்குத் தீர்வாக உதகை ஆராய்ச்சி மையத்தின் மூலம் புதிய விதை ரகங்கள் கண்டறியப்பட்டுள்ள சூழலில், தற்போது இம்மையத்தை மூடிவிட்டால் எதிர்காலத்தில் நீலகிரியில் உருளைக்கிழங்கு விவசாயம் அழிந்துவிடும்  அபாயம் உள்ளது.  
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாடுகளில் நல்ல வரவேற்புள்ளது.  எனவே உதகை- முத்தொரையிலுள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய உருளைக்கிழங்கு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.