நீலகிரி மாவட்டத்தில் வரவேற்பு பெறாத அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்: தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 7 நாள் கெடு
தமிழக அரசின் இரு சக்கர வாகன திட்டமான அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மலை மாவட்டமான நீலகிரியில்


தமிழக அரசின் இரு சக்கர வாகன திட்டமான அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மலை மாவட்டமான நீலகிரியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் 721 பேர் மானியத்துக்காக விண்ணப்பிக்காததால் கடைசி வாய்ப்பாக 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பணிக்கு செல்லும் அல்லது சுயதொழில் புரியும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்த மானியத்தில் இரு சக்கர வாகனம் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2017-18ஆம் நிதியாண்டில் 1,074 பயனாளிகளுக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் 1,074 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தேர்வு செய்யப்பட்ட 1,074 பயனாளிகளில் இதுவரையிலும், 353 பயனாளிகள் மட்டுமே இரு சக்கர வாகனம் வாங்கி மானியம் பெற்றுள்ளனர். அந்த நிதியாண்டு முடிந்து அடுத்த நிதியாண்டின் பெரும்பகுதியும் முடிவடையவுள்ள நிலையில் கடந்த நிதியாண்டில் மானியத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 721 பயனாளிகள் இதுவரை மானியத்துக்காக விண்ணப்பிக்கவேயில்லை.
இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பிரச்னை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகள் விண்ணப்பித்து 45 நாள்களுக்குள் தேவைப்படும் ஆவணங்களைச் சமர்ப்பித்து மானியத்தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும் பல மாதங்கள் ஆகிவிட்டதால், விண்ணப்பிக்கத் தவறிய 721 பயனாளிகளிடமிருந்து 7 நாள்களுக்குள் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை கூறியதாவது:
தேர்வு செய்யப்பட்டிருந்தும் மானியம் பெற்றுக் கொள்ளாத 721 பயனாளிகள் 2018ஆம் ஆண்டில் இரு சக்கர வாகனம் வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், பணிச் சான்று உள்ளிட்ட விவரங்களுடன் அவரவர் பகுதில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இன்றிலிருந்து (நவம்பர் 26) அடுத்த 7 நாள்களுக்குள் விண்ணப்பித்து அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கான மானியத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் வெற்றியடையாததற்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பெட்ரோல் விலை உயர்வும், பணி புரியும் மகளிர் குறைவாக உள்ள சூழலுமே காரணம் எனவும், கல்லூரி மற்றும் உயர் கல்வி மாணவியரும் பயனடையும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தால் வெற்றியடைந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தற்போது கடைசி வாய்ப்பாக கூடுதலாக 7 நாள்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை பேர் மானியத்துக்காக விண்ணப்பிப்பர் என்பதைப் பொறுத்தே நடப்பு நிதியாண்டில் இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடருமா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...