உதகையில் அமைகிறது வரையாடு இனப் பெருக்க மையம்: தமிழகத்தின் மாநில விலங்குக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
உதகையிலுள்ள மான் பூங்காவை, நீலகிரி வரையாடுகள் இனப்பெருக்க மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


உதகையிலுள்ள மான் பூங்காவை, நீலகிரி வரையாடுகள் இனப்பெருக்க மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் மாநில விலங்குக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
உதகை ஏரியின் மறுகரையில் உள்ள மான் பூங்கா முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டிலும், முக்குருத்தி வனச் சரகத்தின் கண்காணிப்பிலும் உள்ளது. இப்பூங்கா கடந்த 1995ஆம் ஆண்டில் அப்போதைய வனத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனால் திறந்துவைக்கப்பட்டதாகும். சுமார் 6 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடமான், புள்ளி மான் உள்ளிட்டவற்றோடு ஏராளமான பறவை இனங்கள், வாத்துகள் போன்றவையும் இருந்தன. இவற்றைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து சென்றனர்.
இந்நிலையில், இந்த விலங்குகளைப் பராமரிக்க, பாதுகாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான விலங்குகள், பறவைகள் வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதனால் தற்போது இங்கு கடமான்கள் மற்றும் குரைக்கும் மான்கள் மட்டுமே உள்ளன. இவற்றை வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், திடீரென கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பூங்கா மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்பூங்காவை நீலகிரி வரையாடுகளின் இனப்பெருக்க மையமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பூங்காவில் 8 பெண் கடமான்களும், 6 ஆண் கடமான்களும், 5 குரைக்கும் மான்களும் உள்ளன.
இதுதொடர்பாக அண்மையில் தில்லியிலிருந்து உதகை வந்த மத்திய வன உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது.
இக்குழுவினர் உதகையில் உள்ள மான் பூங்காவைப் பார்வையிட்டு அங்கு வரையாடுகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடமாக இருப்பதால் இப்பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக முதன்மை மற்றும் தலைமை வனப் பாதுகாவலருக்கு அறிக்கையும் அனுப்பியுள்ளனர். அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளைக் காக்கவே இந்தப் பூங்கா வரையாடுகள் இனப்பெருக்க மையமாக மாற்றப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடமான்களை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உதகை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியாவில் மலையாடுகள் என அழைக்கப்படும் இனம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், இமயமலைப் பகுதியிலும் மட்டுமே காணப்படுகிறது. இமயத்திலுள்ள மலையாடுகள் அங்குல் எனவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையாடுகள், வரையாடுகள் அல்லது தார் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை நீலகிரி, வால்பாறை மற்றும் கேரளத்தில் இரவிக்குளம் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 530 வரையாடுகளும், இந்தியாவில் சுமார் 3,000 வரையாடுகளும் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த வரையாடுகளைப் பாதுகாத்து அவற்றை இனப் பெருக்கம் செய்வதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்ப முடியும். இதனால், வரையாடுகள் உலகெங்கும் பரவும் வாய்ப்பு ஏற்படும். இது தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு கிடைத்துள்ள சர்வதேசஅங்கீகாரமாகும் என தெரிவித்தார்.
மத்திய வன உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகளின் ஆய்வு குறித்து டபிள்யு.டபிள்யு.எப். அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவரான மோகன்ராஜ் கூறியதாவது:
உதகையிலுள்ள மான் பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ள நிலையில் இதை வேறு விலங்குகளுக்கான மாற்று இடமாக மாற்ற விவாதிக்கப்பட்டதில் நீலகிரியின் கருங்குரங்கு, மலபார் அணில் மற்றும் நீலகிரி வரையாடு ஆகியவற்றுக்கான காப்பகமாக மாற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், காப்பகத்துக்கான சூழலே புதிதாக உருவாக்கப்பட வேண்டியிருந்ததால், இனப்பெருக்க மையமாக மாற்றுவது எளிது என்பதோடு, இனப் பெருக்கத்தை அடுத்து உலகில் உள்ள பல்வேறு வன உயிரியல் பூங்காக்களுக்கும், மிருகக் காட்சி சாலைகளுக்கும் அனுப்பி வைக்க முடியும். இதனால் விலங்குகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதோடு, அழிந்து வரும் நீலகிரி வரையாடு உயிரினமும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக வனத் துறையில் இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள சூழலில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டால் உதகையிலுள்ள மான் பூங்கா வரையாடுகளுக்கான இனப்பெருக்க மையமாக மாற்றப்படும் நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இம்மையத்தை சர்வதேச சுற்றுலா மையமாகவும் மாற்ற தமிழக வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...