தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மெத்தனம், சொந்த கட்சியில் அதிருப்தியால் வீழ்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன்

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 2 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்துவிட்டு திடீரென மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்

News image
Updated On :3 மே 2021, 7:57 am

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 2 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்துவிட்டு திடீரென மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது மெத்தனமான அணுகுமுறையால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மூலம் 1977 இல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவர் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். 1980 இல் திமுகவில் இணைந்து, 1984 இல் திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றுபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991 இல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993 பழனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,030 வேட்பாளர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

 2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார். இந்த தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடாத இவர் 2021 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் இப்போது மீண்டும் போட்டியிட்டார்.

பக்குவம் இல்லாத அணுகுமுறை: 2019 மக்களவைத் தேர்தலின்போது, வயது மூப்பு காரணமாக இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்திருந்தார். இதனால் அவர் தேர்தல் அரசியலுக்கு வரமாட்டார் எனக் கருதி ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளுக்கு திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கருதியிருந்தனர். இதனால் இந்த தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு வாங்கி தரும்படி நிர்வாகிகள் பலரும் அவரிடம் கேட்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக மீண்டும் தேர்தலில் போட்டியிட்டதால், மொடக்குறிச்சி தொகுதியில் வாய்ப்புகேட்டு காத்திருந்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் இந்த தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

தொண்டர் பலம் இல்லாதவர்: இரண்டு முறை மாநில அமைச்சர், ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியினருக்கு என தனிப்பட்ட முறையில் பலன் தரும் செயல்களை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் களத்தில் தீவிரமாக பணியாற்ற கட்சியினர் விரும்பவில்லை. தேர்தல் அரசியலில் அரை நூற்றாண்டு கால அனுபவம் உடைய இவர் தேர்தல் அரசியலுக்கு புதியவரான பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்திருப்பது அவர் மீது தனிப்பட்ட முறையில் மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வெறுப்பே காரணம் என்கின்றனர் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.

தப்புக் கணக்கு: கடந்த 2016 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம் 2,500 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். இதனை கவனத்தில் கொண்டும், போட்டி வேட்பாளர் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலும் தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருந்ததின் விளைவை அறுவடை செய்துள்ளார் சுப்புலட்சுமி. தேர்தல் காலத்தில் அவர் செய்த தவறுகளை அனைத்தையும் கண்காணித்து அதனை தனக்கு சாதமாக்கிக்கொண்டார் பாஜக வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதி.

பிரசார யுக்தி: பாஜக தனது பிரசாரத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அறிவித்த பெண்களுக்கான இலவச திட்டங்கள், அதிமுக ஆட்சியல் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் மூலம் விவசாயிகள் அடைந்துள்ள பலன், காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு, எழுமாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்தது போன்ற திட்டங்களை பாஜக தனது தேர்தல் பரப்புரையில் மக்களிடம் வலிமையாக பதிவு செய்தது. ஆனால் திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் வலிமையான பிரசாரம் செய்யப்படவில்லை.

தலைமையும், வேட்பாளரும் தான் பொறுப்பு: இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வு சரியாக இருந்திருந்தால் மிக எளிதாக திமுக வெற்றிபெற்றிருக்கும். மக்கள் மன நிலையை அறியாமல் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு மொடக்குறிச்சி தொகுதி சரியான உதாரணம். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு இப்போது 74 வயது முடிவடைந்துள்ளது. உடல்நிலை ஒத்துழைத்தாலும் 2026 தேர்தலில் 80 வயதை நெருங்கும் இவருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

மொடக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கேட்டு ஏராளமானோர் தீவிரமாக முயற்சிசெய்ய, வயதை மனதில் வைத்துதான் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளித்துள்ளார். ஆனால் அவர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கட்சியினரால் உரிமையாக அக்கா என்று அழைக்கப்படும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியடைந்தது சொந்த கட்சியினரிடம் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கட்சி கடந்து பொதுவான மக்கள், பிற கட்சி நிர்வாகிகளிடம் அவரது தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தோல்விக்கான காரணத்தை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.