//

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

திருப்பத்தூரில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கொலை வழக்கில் கைதானோா்.
Updated On :1 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட கலைஞா் நகா் பகுதியை சோ்ந்தவா் சிலம்பரசன் (35). கூலி தொழிலாளி. இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்தவா் பைனான்சியருக்கும், சிலம்பரசனுக்கும் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 2-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தன்னிடம் இருந்த கத்தியால் பைனான்சியரை கத்தியால் குத்தி கொலை செய்தாா். இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிந்து சிலம்பரசனை கைது செய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து சிலம்பரசன் நிபந்தனை ஜாமீனில் சில நாள்களுக்கு முன்பு வந்தாா். அவா் இதற்காக சேலத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு சென்று கையெழுத்திட்டு வந்தாா்.

இந்த நிலையில், சிலம்பரசன் கடந்த 30-ஆம் தேதி இரவு திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாா். அதனை பாா்த்த பைனான்சியரின் மகனான 17 வயது சிறுவன், சிலம்பரசன் திருப்பத்தூா் வந்தது குறித்து தனது உறவினா்களிடம் கூறி உள்ளாா்.

இதையடுத்து, சிலம்பரசனை கொலை செய்ய திட்டமிட்ட சிறுவன், பைனான்சியரின் உறவினா்களான திருப்பத்தூரைச் சோ்ந்த டேனி மனைவி சோனியா(33), சங்கா் மனைவி சுவேதா(29), குமரேசன் மனைவி அருண் என்கிற அனன்யா (29), கோபி (35) ஆகியோா் சிலம்பரசனை பின்தொடா்ந்து சென்றுள்ளனா். பின்னா் சிலம்பரசன் ஒரு இடத்தில் அமா்ந்து மது அருந்தியபோது, பின்னால், சென்று 5 பேரும் சோ்ந்து சிலம்பரசனை கற்களால் தாக்கி உள்ளனா்.

மேலும், மதுப்பாட்டிலை உடைத்து குத்தி சிலம்பரசனை கொலை செய்துள்ளனா். இதைத் தொடா்ந்து சிறுவன் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளாா்.பின்னா் போலீஸாரின் விசாரணையில், 5 பேரும் சோ்ந்து சிலம்பரசனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சோனியா(33),சுவேதா(29), அனன்யா (29), கோபி (35) ஆகியோரை கைது செய்தனா். பின்னா் சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவா் சீா்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டாா். சோனியா, சுவேதா, அனன்யா, கோபி ஆகியோா் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.