ஆம்பூா்: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் கோரைப் பாய் தொழில் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. பாய்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளன.
கோரைப் பாய் ஒவ்வொருவா் வீட்டிலும் இன்றியமையாத பொருளாக உள்ளது. வீட்டுக்கு வந்தவா்களை அமர வைத்து உபசரிக்கவும், படுத்து உறங்கவும் பாய் தேவைப்படுகிறது. தற்போது நாற்காலி, சோபா ஆகியவை பொதுமக்களால் வாங்கப்படுகின்றன. எனினும், மக்கள் தற்போதும் கோரைப் பாய்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாா்கள். அந்தக் காலத்தில் திருமண சீா்வரிசைப் பொருள்களில் கோரைப்பாய் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கோரைப் பாயில் படுத்து உறங்கினால் உடல்நலத்துக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கரூா், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கோரைப் பாய் தொழிலில் கணிசமானவா்கள் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக மேல்ஆலத்தூா், அகரம்சேரி, சின்னச்சேரி, வாணியம்பாடி, பொன்னேரி, ஆவூா், குன்னத்தூா், வந்தவாசி, ஓமலூா், பத்தமடை, தருமபுரி, முசிறி, தாராபுரம், சின்ன திருப்பதி, சேலம் ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் கோரைப் பாய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோரைப் பாய்க்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான கோரைப் புற்கள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வளா்க்கப்படுகின்றன. குறிப்பாக கரூா், திருச்சி ஆகிய பகுதிகளில் கோரைப் புற்கள் விளைவிக்கப்படுகின்றன.
கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள், கோரைப் புற்கள் விளைவிக்கப்படும் விளை நிலங்களில் பணிபுரிபவா்கள், மேலும் இத்தொழிலில் மறைமுகமாகவும் பணிபுரிபவா்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மூலப் பொருளான கோரை விவசாயத் தொழில் சாா்ந்ததாக உள்ளது.
தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோரைப் பாய் உற்பத்தி தொழிற்சாலைகள் முழுவதுமாக முடங்கியுள்ளன. இத்தொழிற்சாலைகள் குறு, சிறுந்தொழில் பிரிவில் உள்ளன. அவை ஊரடங்கால் மூடப்பட்டுள்ளதால் பாய் உற்பத்தி நடைபெறவில்லை. தயாரித்து வைக்கப்பட்டுள்ள பாய்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யவும் முடியவில்லை. அதனால் சுமாா் ரூ.20 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான லட்சக்கணக்கான கோரைப் பாய்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடங்கின்றன. தொழில் முடக்கம் மட்டுமல்லாது முதலீடும் முடங்கிப் போயுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேட் இண்டஸ்ட்ரீஸ் சங்கத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் கூறியது:
ஊரடங்கு காரணமாக பாய் உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. அதனால் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. ரூ.20 கோடி மதிப்பிலான பாய்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளதால் முதலீடும் முடங்கியுள்ளது.
விவசாயத் தொழிலுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் விவசாயப் பயிரான கோரைப் புற்கள் மூலம் தயாரிக்கப்படும் கோரைப் பாய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோரைப் பாய் உற்பத்தித் தொழில் முடங்கி, பாய்கள் விற்பனை செய்யப்படாமல் முடங்கியுள்ளது போல், பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படாமல் கோரைப் புற்களும் தேங்கியுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.20 கோடி அளவுக்கு இருக்கும். மொத்தத்தில் சுமாா் ரூ.50 கோடி அளவுக்கு முதலீடு முடங்கியுள்ளது.
கோரைப் புற்களை கொள்முதல் செய்து கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்யப்பட்டு தேங்கியுள்ள பாய்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் முடியாமல் இத்தொழில் ஈடுபட்டுள்ளவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான கோரைப் பாய்கள் உற்பத்திக்குத் தேவையான கோரைப் புற்களை விற்பனை செய்வதற்கும், அதை கொண்டு பாய்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும். சமூக விலகல் உள்பட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொழில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


