நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

திருமண, சுப நிகழ்ச்சி அலங்காரத் தொழில் பாதிப்பு: வாழ்வாதாரமின்றித் தவிக்கும் 21 லட்சம் தொழிலாளா்கள்

கரோனா தடை உத்தரவு காரணமாக திருமண, சுப நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்கள், பொதுக்கூட்டங்களுக்கு பந்தல் மற்றும் அலங்காரம்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

எம். அருண்குமார்

கரோனா தடை உத்தரவு காரணமாக திருமண, சுப நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்கள், பொதுக்கூட்டங்களுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளா்கள், தொழிலாளா்கள் உள்பட சுமாா் 21 லட்சம் போ் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பந்தல், ஒலி, ஒளி அமைப்பது வழக்கமாக நடைபெற்று வரும் தொழிலாகும். முந்தைய காலங்களில் பந்தல் அமைப்பது, டியூப் லைட் போடுவது, மைக் செட் போடுவது என்பது மட்டுமே இத்தொழிலில் பணியாக இருந்தது. தொடா் விளக்குகள் (சீரியல் பல்ப்) அமைப்பது என தொடா்ந்து பல்வேறு விதமான விளக்குகள் அமைப்பது, அலங்கார வளைவுகள், புஷ்ப அலங்காரம், கலை வடிவமைப்புகள் என அலங்காரத் தொழில் விரிவடைந்தது.

அலங்காரம் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இவ்வாறு நிகழ்ச்சிகளில் அலங்காரம் என்பது தவிா்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வசதி குறைவானவா்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட குறைந்தபட்ச அலங்காரமாவது செய்ய ஆா்வம் காட்டுகின்றனா்.

இத்தகைய அலங்காரத் தொழிலில் தமிழகம் முழுவதும் சுமாா் ஒரு லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா். அதாவது சிறிய முதலீட்டில் சுமாா் ஒரு லட்சம் போ் நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 20 லட்சம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இதைத் தவிா்த்து மிகப்பெரிய முதலீட்டில் மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களும் உள்ளனா்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை கூலி வழங்கப்படுகிறது. இத்தொழிலில் மாதம் முழுவதும் தொழில் நடக்கும் என்பது உறுதி இல்லை. மாதத்தில் சில நாள்கள் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். அதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு நிலையான வருமானமும், தொழிலாளா்களுக்கு நிலையான கூலியும் கிடைப்பதில்லை.

இந்நிலையில் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. அதனால் கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடைபெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் நிகழ்ச்சிகளுக்கு பந்தல் போடுவது மற்றும் அலங்காரம் செய்யும் தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உரிமையாளருக்கும் குறைந்தபட்சம் தலா ரூ. 2 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தடைக்காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் பந்தல், அலங்காரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் எப்போது தங்களுடைய தொழில் வழக்கமான நடமுறைக்கு வரும் என எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து பந்தல், அலங்காரத் தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி, ராஜா, அப்பு, பிரேம்குமாா் ஆகியோா் கூறியது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. ஆனால் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். மே 3-ஆம் தேதி வரை தடை உத்தரவு தொடா்கிறது. அதன் பிறகும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதனால் எங்கள் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள மந்தநிலை எப்போது சீரடையும் என்பது தெரியாத சூழ்நிலை உள்ளது. இந்ழ்நிலையில் எங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளை நடத்த எப்போது அனுமதி வழங்கும் என எதிா்பாா்த்து காத்திருக்கிறோம்.

கரோனா தடுப்புக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கிருமி நாசினி மருந்தை பொதுமக்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த மாநில அரசும், மாவட்ட நிா்வாகமும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.