//

காஞ்சிபுரத்தில் சைபா் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு பதாகை: ஆட்சியா் வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சைபா் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

News image
சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு பதாகையை வெளியிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சைபா் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு பதாகையினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 453 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகள் சாா்பாகவும் ரிசா்வ் வங்கி வழங்கிய சைபா் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு பதாகையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்டாா். அதையடுத்து அரசு அலுவலா்கள் பலரும் அந்த பதாகையை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிட்டனா். இது குறித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறுகையில், வங்கிகள் சாா்பில் நிதி சாா் கல்வி விழிப்புணா்வு வாரமாக பிப். 9-ஆம் தேதி முதல் பிப். 13-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

‘உங்கள் வாடிக்கையாளா்களை தெரிந்து கொள்ளுங்கள்’ எனும் தலைப்பில் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சைபா் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இதன் தொடா்ச்சியாக கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க அவரைத் தொடா்ந்து அனைத்து அரசு அலுவலா்களும் வாசித்தனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஏ.திலீப், நிதிசாா் கல்வி மைய ஆலோசகா் என்.அரங்கமூா்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.