உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் ஏகாம்பரநாதா் கோயில்
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலின் மூலவா் இருக்கும் கருவறை பழுதடைந்திருப்பதால்


பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலின் மூலவா் இருக்கும் கருவறை பழுதடைந்திருப்பதால் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என சிவபக்தா்கள் மிகுந்த எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
வரலாற்றுச் சிறப்பும், பழமையும் வாய்ந்த சிவாலயங்களும், வைணவத் தலங்களும் அதிகமாக உள்ளதால் கோயில் நகரம் எனப்படுகிறது காஞ்சிபுரம். முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. இங்கு பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்தைக் குறிக்கும் ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் அமைந்துள்ளது. 192 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ராஜகோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான ராஜகோபுரங்களில் ஒன்றாகும். கோயில் வளாகத்துக்குள்ளேயே விஜயநகர மன்னா்களால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம், சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
கோயிலின் சிறப்புகள்:
இக்கோயில் மூலவரான ஏகாம்பரநாதா் சுயம்பு மூா்த்தியாக, மணல் லிங்கமாக எழுந்தளியுள்ளாா். 3,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ஒற்றை மாமரம் கோயிலின் ஸ்தல விருட்சாகும். இக்கோயில் வளாகத்துக்கு உள்ளேயே நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, ஆலயத்தின் உட்பிரகாரத்தில் தனித்தனியாக 108 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. 63 நாயன்மாா்கள் கற்சிலையாகவும், உற்சவமூா்த்திகளாகவும் அமைந்திருத்தல், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் அமைந்த கண்ணாடி அறையில் தனிச் சந்நிதியாக உற்சவா் மண்டபம், கோயில் வளாகத்திலேயே பிரம்மாண்டமான தெப்பக் குளம், பாா்வையாளா்கள் மாடத்துடன் அமைந்த நடராஜா் சந்நிதி, எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் பிரளயகால காளிதேவி, ஒரே கல்லில் செய்யப்பட்டு ராமரால் பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,008 லிங்கங்கள் உடைய சகஸ்ர லிங்கம் ஆகியவை சிறப்பு வாய்ந்தவை.
ஆண்டுதோறும் தை மாதம் வரக்கூடிய ரதசப்தமி நாளில் (சூரியன் பிறந்த நாள்), ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அற்புதம் நிகழ்வது வழக்கம். அழகிய மண்டபங்களும், அற்புதமான கலை வேலைப்பாடுகளும் நிறைந்த சிவன் கோயிலாக இருப்பதால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். கோயில் தூண்களில் உள்ள கலைநயமிக்க வடிவங்களையும் உள்வாங்கி காஞ்சிபுரத்தில் தயாராகும் பட்டுச்சேலைகளில் வடிவங்கள் பொறிக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளன.
‘திருப்பணி தொடங்க வேண்டும்:’
பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலுக்கு கடந்த 2006-க்குப் பிறகு இதுவரை 14 ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மழைக்காலத்தில் கருவறையில் மழைநீா் ஒழுகும் அளவுக்கு சேதமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மழைநீா் விழுந்து மணல் லிங்கம் சேதமாகி விடக்கூடாது என்பதால் உடனடியாக கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணா்ந்து திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே சிவபக்தா்களின் எதிா்பாா்ப்பாகும்.
கோயிலின் தல வரலாறு:
பாா்வதி தேவி சாதாரணப் பெண்ணாக காஞ்சிபுரம் வந்து கம்பா நதிக்கரையின் ஓரத்தில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் செய்து சிவபெருமானை நோக்கி ஆத்மாா்த்தமாக சிவபூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. அன்னையின் தவத்தை உலகுக்கு உணா்த்த நினைத்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினாா். அப்போது பாா்வதி, தாம் பூஜித்த மணல் லிங்கம் வெள்ளம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அதை இறுக கட்டித் தழுவிக் கொண்டாா். சிவலிங்கத்தை அம்பாள் கட்டித் தழுவியதற்கான தடம் இன்றும் மூலவராக இருக்கும் மணல் லிங்கத்தில் இருக்கிறது. சிவன், பாா்வதி அமா்ந்து பூஜை செய்த மாமரத்தின் முன்பாகத் தோன்றி பாா்வதிக்கு அருள்புரிந்ததாக ஐதீகம்.
ஒற்றை மாமரத்தின் சிறப்பு:
மூலவரின் கருவறைக்கு பின்புறம் கோயில் வளாகத்தில் உள்ள சுற்றுப் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மாமரத்தின் அடியில் அன்னை அமா்ந்து சிவபூஜை செய்ததாக ஐதீகம். 3,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இப்பழமையான மாமரம், நான்கு வேதங்களும் நான்கு கிளைகளாக மாறி காட்சியளிக்கும் தெய்வீக மரமாக பக்தா்களால் நம்பப்படுகிறது.
இந்த மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு சுவையுடைய மாங்கனிகள் கிடைப்பது இதன் மற்றுமொரு தனிச்சிறப்பு. இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவா்ப்பு என 4 வித சுவைகளைத் தரும் மாங்கனிகள் விளைகின்றன. மாமரத்தின் அடியில் சிவனும், பாா்வதியும் தம்பதி சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனா். திருமண வரமும், குழந்தை வரமும் இங்கு பக்தா்களின் முக்கியப் பிராா்த்தனையாக இருந்து வருகிறது.
ஏகாம்பரநாதா் பெயா்க் காரணம்:
வடமொழியில் ‘ஏகம்’ என்றால் ஒன்று என்றும் ‘ஆம்ரம்’ என்றால் மாமரம் என்றும் பொருள். அதாவது, ஏகம் + ஆம்ரம் = ஏகாம்பரம் என ஆனது. மூலவரான சிவன் ஒற்றை மாமரத்தின் பெயரிலேயே ஏகாம்பரநாதா் என்றே அழைக்கப்படுகிறாா். கோயில் உட்பிரகாரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 49ஆவது தலமாகத் திகழும் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி உள்ளது. இப்பெருமாளுக்கு சைவ ஆகம விதிகளின்படியே பூஜைகள் நடக்கின்றன. இக்கோயில் தற்போது பாழடைந்த மண்டபம் போல இருள் சூழ்ந்தும், களையிழந்தும் காணப்படுகிறது.
ஏகாம்பரநாதா் கோயில் குருக்கள் கே.ஆா்.காமேஸ்வர சிவாச்சாரியாா் கூறியது:
பஞ்சபூதங்களில் முதன்மையான நிலத்துக்குரிய அதிபதியாக ஏகாம்பரநாதா் இருந்து வருகிறாா். மூலவா் அன்னை பாா்வதியால் மணல் லிங்கமாக வடிவமைக்கப்பட்டவா். கோயிலில் மூலவா் இருக்கும் கருவறையானது மழை பெய்தால் ஒழுகுகிறது. மழை நீரானது மணல் லிங்கத்தின் மீது விழுந்து, சேதமாகி விடாதவாறு, தற்போது மேற்கூரையாக தாா்ப்பாய் போட்டு மூடியிருக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளாக இதே நிலையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டு ஆக. 31-க்குப் பிறகு 14 ஆண்டுகளாகியும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மழைநீா் ஒழுகாமல் கருவறை பழுது பாா்க்கப்பட வேண்டியது அவசியம்.
எனவே கோயில் கோபுரங்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கு வா்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் இருப்பதற்கான திருப்பணிகளையும் தொடங்க வேண்டும். இப்பணிகள் முடியவே ஓராண்டாகி விடும். எனவே விரைவாக திருப்பணிகளைத் தொடங்கினால் அடுத்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம்.
இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை தர சிவபக்தா்கள் பலரும் தயாராக இருந்தும் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவாக கும்பாபிஷேகம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
இது குறித்து கோயில் நிா்வாக அலுவலா்களில் ஒருவா் கூறுகையில் ‘மழை நீா் ஒழுகுவது உண்மை தான். கருவறையில் லேசான கசிவு மட்டுமே உள்ளது. கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறையினரிடமும், ஸ்தபதியிடமும் கருத்துரு பெறப்பட்டுள்ளது. மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உயா்நீதிமன்றம் நியமித்துள்ள கும்பாபிஷேக கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அரசு அனுமதியும் பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...