தமிழகத்தின் தியாக தீபங்கள் - 87: சுரேந்திரநாத் ஆர்யா
சுரேந்திரநாத் ஆர்யா 1883}ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.


சுரேந்திரநாத் ஆர்யா 1883-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இளவயதிலிருந்து தேசிய அரசியலிலும் ஆன்மிகத் தேடலிலும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபையில் ஈடுபட்டார். சென்னைக்கு வந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடினார்.
ஆரிய சமாஜத்தில் இணைந்தார். சமாஜத்தின் தலைமை பீடமான லாகூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது ஆர்யாவுக்கு 15 வயது. லாகூரில் லாலா லஜபதி ராயுடன் தொடர்பு ஏற்பட்டது.
1902-இல் பிரம்ம சமாஜத்தில் இணைந்தார். கல்கத்தாவிலுள்ள பிரம்ம சமாஜ ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கிப் படித்து வந்தார். விபின் சந்திர பால் உள்பட சில பிரம்ம வாதிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்துஸ்தானி ஆகிய மொழிகளில் பயிற்சி பெற்றிருந்தார். 1906-இல் ஆர்யா சென்னை திரும்பினார்.
1907-இல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பும் வேள்வியில் முழுமையாக ஈடுபட்டார். "மூர் மார்க்கெட்,' "மெரீனா கடற்கரை' பகுதிகளில் ஆர்யாவும் பாரதியும் அனல் பறக்கும் உரைகள் பலவற்றை நிகழ்த்தினர்.
அதுவரை, அரங்கங்களில் நடைபெற்ற விடுதலை இயக்கக் கூட்டங்களில் படித்த சிலர் மட்டுமே பங்கேற்றனர். பாமரரும் புழுதித் தரையில் அமர்ந்து விடுதலை இயக்க உரைகளைக் கேட்கும் அளவுக்கு மாற்றம் செய்தவர்கள் ஆர்யாவும் பாரதியும்.
1907-இல் "சென்னை ஜனசங்கம்' "சுதேசி வஸ்து பிரச்சாரணி சபை' ஆகிய அமைப்புகளை நிறுவிய போராளிகளுள் ஆர்யாவும் ஒருவர். 1907-இல் சூரத் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
ஆர்யாவின் உரைகள் அனைத்துமே காட்டமாகவும், ஆங்கிலேயே ஆட்சியை நேரடியாகத் தாக்குவதாகவும், கேட்போரை தியாகம் செய்யத் தூண்டுவதாகவும், போராட்ட உணர்வை ஊட்டுவதாகவும் இருந்துள்ளன. பெரும்பாலான கூட்டங்களில் தெலுங்கில் பேசியுள்ளார்.
"சாவுக்கு அஞ்சவேண்டாம் - சுயராஜ்யத்தை அடைய அது ஒன்றே வழி' "வந்தே மாதரத்தை சொல்லில் காட்டுவதைவிட செயலில் காட்ட வேண்டும்' போன்ற களத்தில் இறங்கத் தூண்டும் வாசகங்களை கேட்போர் நெஞ்சில் பதிய வைப்பதே ஆரியாவின் தனித்தன்மை.
சிறையில் வாடும் போராளிகளின் குடும்பத்தாருக்கு நிதி திரட்டித்தருவதில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார் ஆர்யா.
வ.உ.சி., சுப்பிரமணிய சிவா வழக்கிற்கு சாட்சி சொல்ல பாரதியும், ஆர்யாவும் திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இருவரும் விசாரிக்கப்படவில்லை.
பலமுறை கைது செய்யப்பட்டார் ஆர்யா. 1908 ஜூலை 9 ஆம் தேதி இரண்டு சொற்பொழிவுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் ஐந்தாண்டுகள் நாடுகடத்தப்பட்டார். மற்ற இரண்டு வழக்குகளிலும் தலா மூன்றாண்டுகள் வீதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. சிறை மீண்ட பின்னர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விரல் விட்டு எண்ணத்தக்கவர்களில் ஆர்யாவும் ஒருவர். பாரதி எரியூட்டப்பட்டபோது அவ்விடத்தில் இரங்கலுரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...