பலம்... பலவீனம்... யுக்தி
நேபாளத்தில் போக்ரா நகரில் ரங்கசாலா விளையாட்டு அரங்கில் நடந்த சர்வதேச கபடிப் போட்டியில் நேபாளம், பூட்டான் அணிகளை தோற்கடித்து திரும்பியுள்ளது


நேபாளத்தில் போக்ரா நகரில் ரங்கசாலா விளையாட்டு அரங்கில் நடந்த சர்வதேச கபடிப் போட்டியில் நேபாளம், பூட்டான் அணிகளை தோற்கடித்து திரும்பியுள்ளது இந்திய பெண்கள் கபடிக்குழு. அந்தக் கபடிக்குழு தமிழ்நாட்டைச் சேர்ந்தது. ஆம்... கோவை வளர்பிறை பெண்கள் கபடிக் குழுதான் அந்தப் பெருமையை பெற்றுள்ளது.
கோவை வளர்பிறை பெண்கள் கபடிக் குழுவின் பயிற்சியாளர் சதீஷ் குமார் தொடர்கிறார்:
""தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் தேர்வு பெற்று, காஷ்மீரில் நடந்த அகில இந்திய போட்டியில் மஹாராஷ்டிரா, பஞ்சாப் அணிகளை வெற்றி பெற்ற பிறகுதான் இந்தியாவின் சார்பில் நேபாளம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியை நேரு யுவ கேந்திரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கோவையிலிருந்து ரெயில் மூலம் தில்லி சென்று பிறகு வேனில் நேபாளம் சென்றோம். நேபாளம் சென்று திரும்ப ஆகும் செலவை குழுதான் ஏற்க வேண்டும்.
கரோனா காலம் என்பதால் ஈரான், கொரிய பெண்கள் கபடி அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அந்த அணிகள் கலந்து கொண்டிருந்தால் எங்கள் குழுவிற்கு அந்த அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். எதிர் அணியினரின் பலம் என்ன பலவீனம் என்ன... அவர்களின் யுக்தி என்ன என்பதை அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். அந்த வகையில் எங்கள் அணிக்கு ஏமாற்றம்தான். நேபாளில் வெற்றி பெற்றதற்கு சான்றிதழ்களும், கோப்பையும் வழங்கினார்கள்.
ஆரம்பத்தில் மணல் வெளியில் போட்டி நடைபெறும். பிறகு கட்டாந்தரையில் விளையாட ஆரம்பித்தார்கள். தற்போது கட்டாந்தரையில் மேட் (செயற்கை விரிப்பு) பரப்பி விளையாடுகிறார்கள். நானும் ஒரு கபடி ஆட்டக்காரனாக இருந்தேன். முதுகில் பலமான அடியுடன் காயமும் ஏற்பட்டதால், கபடி பயிற்சியாளனாக மாறிவிட்டேன். வளர்பிறை மன்றம் என்ற பொதுநல அமைப்பை நண்பர்களுடன் நடத்திவருகிறேன். தேவையானவர்களுக்கு ரத்த தானம் செய்வதுதான் இந்த மன்றத்தின் லட்சியம் . இதுவரை சுமார் பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் ரத்ததானம் செய்திருக்கிறோம். நான் மட்டும் இதுவரை 42 முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். கரோனா காலத்தில் இந்த மன்றத்தின் மூலம் மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்தோம்.
கோவையில் கபடி விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கு தொடங்கப்பட்டதுதான் வளர்பிறை கபடிக் குழு. குழு தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் 18 மாணவிகள் விளையாடினார்கள். தற்போது 26 மாணவிகள் கபடி குழுவில் உள்ளனர். மாணவிகளில் சிலர் கல்லூரிகளிலும் பலர் பள்ளியிலும் படிக்கிறார்கள்.
கோவை நகரிலிருந்தும் , கோவை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் பஸ் கட்டணம் செலுத்தி வர சிரமம்படுவார்கள். இப்போது பெண்கள் அரசு பஸ்ஸில் இலவசமாகப் பயணிக்கலாம் என்பதால் உற்சாகத்துடன் பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். காலையிலும் மாலையிலும் பயிற்சி உண்டு. இனி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் போவதால் பயிற்சி நேரங்களில் மாற்றம் வரும்.
இதர விளையாட்டுகள் போல கபடிக்கு மக்களிடத்திலிருந்தும் அரசிடமிருந்து, தனியார் நிறுவனங்களிலிருந்தும் ஆதரவு இல்லை. இருந்தாலும் கபடி சாதாரணமானவர்களின் விளையாட்டு என்பதால் ஆர்வம் காரணமாக இந்த மாணவிகள் கபடி விளையாட வருகிறார்கள். நேபாளத்தில் கிடைத்த வெற்றியில் கிடைத்த சான்றிதழ் மாணவிகள் கல்லூரியில் சேருவதற்கு உதவும். அவ்வளவுதான்.
தமிழ்நாட்டிற்குள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த எங்கள் குழுவிற்கு நேபாளத்தில் கிடைத்த வெற்றி எங்களைப் பொறுத்தவரை மாபெரும் வெற்றி. மாணவிகளுக்கு நம்பிக்கை தந்திருக்கும் இந்த வெற்றி தொடர்கதையாக தொடந்து முயற்சிப்போம்'' என்கிறார் சதீஷ் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...