எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நலமான வாழ்வளிக்கும் வழிபாட்டுத்தலங்கள்

மனித சமுதாயம் இன்று மிகவும் அளவிடமுடியாத அளவில் துன்பப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் உலக மக்கள் அனைவரும் மறக்க முடியாத அளவில் துன்பத்தை, மன வேதனையை அளித்து வருகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:25 pm

கி.ஸ்ரீதரன்

மனித சமுதாயம் இன்று மிகவும் அளவிடமுடியாத அளவில் துன்பப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் உலக மக்கள் அனைவரும் மறக்க முடியாத அளவில் துன்பத்தை, மன வேதனையை அளித்து வருகிறது.

மனித சமுதாயம் எவ்வளவுதான் மருத்துவத்துறையிலும், விஞ்ஞான அறிவிலும் முன்னேறியிருந்தாலும் இச்சமயத்தில் ஏற்பட்ட அழிவிலிருந்து நலமடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார போற்றி வழிபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் பலத் திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், வழிபாட்டுச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகின்றன.

நமது திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் மனித சமுதாயத்திற்கு ""நல்வாழ்வும்- மருத்துவ நலமும்'' அளிக்கும் சிறப்பிடங்களாகவும் விளங்கியிருப்பதை வரலாற்றச் சான்றுகளால் அறிய முடிகிறது.

பல திருக்கோயில்கள் சைவப் பெருமக்களாலும், ஆழ்வார்களாலும் போற்றிப் பாடப்பட்டுள்ளன. தேவார மூவர்களான ஞானசம்பந்தர் பெருமான், அப்பர் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் பல தலங்களுக்குச் சென்று அடியார் பெருமக்களின் துயர் தீர்க்கவும், நல்வாழ்வு பெறுவதற்காகவும் பாடல்களை அருளியிருப்பதைக் காணலாம்.

திருஞானசம்பந்தர்பெருமான் திருச்செங்கோடு திருத்தலம் வந்த பொழுது மக்களும்- அடியார்களும்" நளிர்சுரம்' என்று குளிர்சுரத்தால் துன்புறுவதைக் கண்டு  ""அவ்வினைக்கு இவ்வினையாம்''- என்ற பதிகம்பாடி ""செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்'' என்று ஆணையிட்டு மக்களின் துன்பத்தை போக்கினார். 

மதுரை திருத்தலத்தில்  ""உடல் உற்ற தீப்பிணியாயின தீர திருநீற்றுப் பதிகம் பாடியருளினார். திருச்சி அருகே உள்ள திருவாசி எனப்படும் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்திலத்தில் கொல்லி மழவனின் மகள் "முயலகன்' என்ற நோயினால் துன்பப்படுவதை கண்டு ""மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே'' என்ற பதிகம் பாடி அப்பிணியினை நீக்கினார். இக்கோயில் வலிப்பு போன்ற நரம்பு தொடர்பான நோயினைப் போக்கும் தலமாக விளங்குகிறது. 

சூலை நோய் என்ற வயிற்று வலியினால் துன்பப்பட்ட நாவுக்கரசர் பெருமான் ""ஆற்றேன் அடியான் என்று கூற்றாயினவாறு'' பதிகம் பெற்ற திரு அதினக வீராட்டானம் திருத்தலம் தீராத வயிற்று வலியைப் போக்கும் தலமாக விளங்குகிறது.

மேலும் மக்களின் துன்பங்களைப் போக்கும் திருத்தலங்களாக திருநள்ளாறு, திருநெடுங்களம், திருச்சிராப்பள்ளி, திருவெண்காடு , திருமறைக்காடு (வேதாரண்யம்), திருமாகறல், (காஞ்சிபுரம்), திருவாவடுதுறை மற்றும் என் உடம்பு ""அடும்பிணி இடர் கெடுத்தானை'' என்று சுந்தரர் பெருமான் போற்றும் திருவேள்விக்குடி, நீரிழிவு நோய் அகற்றும் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள "கடத்தூர்' என்பது போன்ற பலத் திருத்தலங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. 
வைத்திய விருத்தி- ஆதுலர்சாலை பண்டைய  நாளில் திருக்கோயில்களில் மக்கள் உடல்நலமடைய மருத்துவமனைகளும் இருந்தன. இதனை "ஆதுலர்சாலை' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மக்களுக்கு சேவை செய்ய மருத்துவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு நிலம் "வைத்தியவிருத்தி',  "வைத்தியக்காணி' என்ற பெயரில் தானமாக அளிக்கப்பட்டதை திருக்கோடிக்காவல், ஸ்ரீவாஞ்சியம், திருப்புகலூர் கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மருத்துவர்களில் அறுவை சிகிச்சை செய்பவர்களை "சல்லியக்கிரியை' செய்வோர் என்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் "சல்லியக் கிரியை போகம்' என்றும் (திருவிசலூர் கல்வெட்டு) அழைக்கப்பட்டது.

Story image

ராஜராஜசோழனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் மக்களின் நன்மைக்காக தமது தந்தை பெயரால் சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர் சாலை என்ற ஒன்றை தஞ்சையில் நிறுவினார்.

காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வீர சோழன் ஆதுலர் சாலை என்ற மருத்துவமனை இருந்தது. இங்கு 15 பேர் சிகிச்சை பெறலாம். இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் பணியாளர்கள்- வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியல் போன்ற விவரங்கள் விரிவாகக் கல்வெட்டில் கூறப்படுகிறது.

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் மருத்துவத்திற்கு உரிய தெய்வமாக தன்வந்தரி பெருமாள் போற்றி வணங்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் வைத்தீசுவரன் கோயில் போன்ற கோயில்களில் தன்வந்திரி பெருமாளைக் கண்டு வழிபடலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் தன்வந்தரி பெருமாளுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு போசள (ஹொய்சள) மன்னன் வீரராமநாதன் காலத்தில் சிங்கன்ன தண்ட நாயக்கர் காலத்தில் ஆரோக்கிய சாலை கருட வாகன பண்டிதரால் நிர்மாணிக்கப்பட்டு மருத்துவ வசதி அனைவருக்கும் அளிக்கப்பட்டது. மேலும் அரங்கத்துப் பெருமாளின் உடல் நலம் காக்க, நாள்தோறும் "ரங்க தோஷனை' என்ற கஷாயம் அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு குறிப்பிடுவது சிறப்பானது.

மேலும் மருத்துவத்திற்கான கடவுளாக அசுவினி தேவதைகள் வணங்கப்படுகின்றனர். இவர்களது வடிவத் திருமேனிகளை திருக்கடவூர் திருக்கோயிலில் கண்டு வழிபடலாம்.

வழிபாடு இன்று ஏற்பட்டுள்ள கொடிய நோயின் தாக்கம் குறைய திருக்கோயிலில் ஹோமங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருமுறை பாடல்கள், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், விஷ்ணுசகஸ்ரநாமம் போன்ற பல வழிபாட்டுப் பாடல்கள் தெய்வீக உணர்வுடன் பாடப்படுகின்றன. மேலும் பண்டைய நாளில் உடல் நலம் குன்றியவர்கள் நலமடைய திக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டிற்காக தானம் அளித்ததாகவும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மன்னர்களின் உடல் நலமடையவும் தானம் அளிக்கப்பட்டதாக திருமழபாடி கோயில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
சோழநாட்டில் கி.பி.1070-இல் மன்னர் அதிராஜேந்திரன் ஆட்சி செய்யும் பொழுது அவர் கொடிய நோயினால் துன்பம் அடைந்தார். அவர் உடல் நலமடைய திருக்கோயிலில் இறைவன் முன்பு தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்று வந்ததாக குடந்தை அருகே உள்ள கூகூர்(மருதாநல்லூர்) கல்வெட்டு அரிய செய்தியைக் கூறுகிறது. 

இதுமட்டுமல்லாமல் திருக்கோயிலில் வழிபடப் பெறும் தலமரங்கள், துளசி, வில்வம், வேப்பிலை, அருகம்புல் போன்றவை மருத்துவ குணங்கள் உடையதாக விளங்குகின்றன. நமது உடல் பிணியினை போக்கும் என்ற நம்பிக்கையை வழங்குகின்றன.

பெருந்துன்பம் விளைவித்து வரும் கரோனா என்ற கொடிய நோயினை அகற்ற நம் மனதளவில் ஒன்றுபட்டு நம்பிக்கையுடன் எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு நலமடைவோம்.

கட்டுரையாளர்: தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.