கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நான்கு தலைமுறைகளாகத் தொடரும் நாணயங்கள், அஞ்சல்தலை சேகரிப்பு

ஒரு சொல்லை சொல்வதைக் காட்டிலும் அதனை செய்து முடிக்கும்போதுதான் அதன் முக்கியத்துவம் தெரியவரும்.

News image
திருச்சியில் நடைபெற்ற உலகப்பணத்தாள்கள், நாணயங்கள் காட்சியில் தங்களது காட்சிப் படைப்புகள் குறித்து விளக்கும் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்  எஸ்.காதர் உசேன், அவரது மகன் கைபூர் சாகுல் ஹமீது.
Updated On :30 ஜனவரி 2024, 4:17 pm

கு. வைத்திலிங்கம்

ஒரு சொல்லை சொல்வதைக் காட்டிலும் அதனை செய்து முடிக்கும்போதுதான் அதன் முக்கியத்துவம் தெரியவரும். அதுபோல, நாம் பார்வையாளர்களாக இருந்து எந்தவிதமான கண்காட்சியாக இருந்தாலும் பார்த்துவிட்டு பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு வந்துவிடுகிறோம். ஆனால், அந்த கண்காட்சியில் வைக்கப்படும் எந்தவித சேமிப்புப் பொருளாக இருந்தாலும் அதை அவர்கள் சேமிப்பதற்கும், அதை பாதுகாப்பதற்கும் படும் பாடு பற்றி அறிந்து கொண்டாலே, அந்த பொருள்களின் மீதான மரியாதையை நம்மிடம் மேலும் உயர்த்தும்.
அந்த வகையில்,"திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்' உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் குறித்த கண்காட்சியை திருச்சியில் ஜூலை 13-ஆம் தேதி முதல்  3 நாள்கள் நடத்தின.  தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்த பணத்தாள்கள், நாணயங்கள் சேகரிப்போரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் சின்னக் குறியீட்டுடன் வெளியிட்ட காசுகள், சங்கக் காலத்துக்குப் பின்னர் தமிழ் எழுத்துகளுடன் பல்லவர் காலத்தில் வெளிவந்த காசுகள்,  பிரிட்டிஷ் இந்திய நாணயங்களில் நான்காம் வில்லியம், ராணி விக்டோரியா, ஏழாம் எட்வர்டு,  ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ்  காலங்களில் வெளியான அணாக்கள், பைஸ், ஓட்டை அணா, ஒரு பைசா, அரையணா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு,  பித்தளை, வெள்ளி, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், அறுகோணம், செவ்வக வடிவில் வெளியான நாணயங்கள், உலகின் 200 நாடுகளில் வெளியான பல்வேறு மதிப்புமிக்க பணத்தாள்கள், சுதந்திர இந்தியாவில் முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் முதல் தற்போதைய ஆளுநர் வரை கையெழுத்திட பல்வேறு ரூபாய் நோட்டுகள்,  குறைபாடுகளுடன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள்,  குடியரசு இந்தியாவின் பொது பயன்பாட்டு நாணயங்கள்,  நினைவார்ந்த நாணயங்கள்,  தமிழர்கள் பயன்படுத்திய பழைமையான பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியில் பலர் காட்சிப் படைப்புகளை அமைத்திருந்தாலும், மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ். காதர் உசேனும், அவரது மகனும், மாணவருமான  கைபூர் சாகுல் ஹமீதும்   மற்றவர்களைக் காட்டிலும், தங்களது படைப்புகளில் சற்று வித்தியாசப்படுத்தி வைத்திருந்தனர்.
எப்படிப் படித்தாலும் ஒரே மாதிரியான  எண்கள் வருமாறு கொண்ட ரூபாய் நோட்டுகள் குறிப்பாக 37273, 38883,  62626, 62625, 43934, 98889, 43534 போன்று பல எண்கள் கொண்ட நோட்டுகள்,  சினிமா திரையங்குகளில் வழங்கப்பட்ட   டிக்கெட்டுகளில் எப்படிப் படித்தாலும் ஒரே மாதிரியாக வரும் வகையில் கொண்ட 161, 262, 676, 666, 969 போன்ற எண்கள் சேகரிப்பு,  காபி பார்களிலும் இதுபோன்ற எண்களை சேகரித்து, அதையும் காட்சிப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
இதைத் தவிர, வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக செல்வோருக்கு கடிதம் அனுப்பும்போது ஒட்டவேண்டிய  அஞ்சல் வில்லைகளில், குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக ஒட்டப்பட்டிருந்தால்  யார் பெயருக்கு கடிதம் அனுப்பப்பட்டதோ அவர்களிடம் அபராதம் விதிக்கும் முறை வெளிநாடுகளில் உள்ளது. 
ஆனால், இந்தியாவில், அரைவட்ட வடிவிலான முத்திரையிடும் முறை அமலில் உள்ளது. இவ்வாறு, நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு குறைவாக அஞ்சல் விலைகள் ஒட்டப்பட்டதற்காக முத்திரையிடப்பட்ட  அரைவட்ட வடிவிலான முத்திரைகளையும் சேமித்து வைத்திருக்கிறார் காதர் உசேன்.
ரூ.100, ரூ.50, ரூ.10, ரூ.20 என பல்வேறு ரூபாய் நோட்டுகளில் பாலி விகடகவி எண்கள் என்றழைக்கப்படும்  333333,  300003, 441144, 616616 போன்ற எண்களைக் கொண்டிருக்கும் ரூபாய்த் தாள்கள்,  தலைக்கீழாக படித்தாலும் ஒரே மாதிரியாக வரும் வகையிலானஎண்கள்  010010,  016910 போன்ற ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து அதையும் காட்சிப்படுத்தியிருந்தார் காதர் உசேன். 
1983-ஆம் ஆண்டு,  மார்ச் 13-ஆம் தேதி காமன்வெல்த் தினத்தையொட்டி 45 நாடுகளின் பெயர்களைக் கொண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, 20 நாட்டின் கொடிகளைக் கொண்ட பூடான் நாட்டின் அஞ்சல் தலை, 170 மி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய அஞ்சல் தலை,  பிளாஸ்டிக்கில் வெளியிடப்பட்ட முப்பரிமாண அஞ்சல் தலைகள்,  காந்தத்தால் ஒட்டக்கூடிய வகையில் பூடான் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை,  பெயிண்டிங் அஞ்சல் தலைகள், சீனாவில் இசைக்ககருவிகளைக் கொண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், 8,7,6,5,4 பக்கங்களைக் கொண்ட வகையில் வெளியிடப்பட்ட  அஞ்சல் தலைகள் போன்றவையும் இந்த கண்காட்சியில்  வைத்திருந்தார் காதர் உசேன்.
இப்படி சேகரிக்கும் ஆர்வம் வந்தது எப்படி? என்று காதர் உசேனிடம் கேட்டோம்: 
""பணத்தாள்கள், நாணயங்கள் போன்றவற்றை சேகரிக்கும் பழக்கம் என்னுடைய தாத்தா காலத்திலிருந்தே இருந்திருக்கிறது.  ரங்கூனுக்கு பிழைக்கச் சென்ற எனது  தாத்தா காதர் ஷாவும்,  எனது தந்தையார் சாகுல் ஹமீதும் அங்கு  வியாபாரம் செய்தனர். அப்போது அங்கிருந்த அவர்களிடம் தொடங்கிய பழக்கம், அவர்கள் இங்கு வந்த பின்னரும் தொடர்ந்தது.
தந்தையைத் தொடர்ந்து நானும் அப்பணியை மேற்கொண்டேன்.   நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியதால், இதன் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை  ஹமீதியா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது,  மாணவர்களுக்கு பணத்தாள்கள், நாணயங்கள் சேகரிப்பின் குறித்து எடுத்துரைக்கும்போது, இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாக இதை சேகரிக்கப்பதில் முழு ஈடுபாடு கொண்டேன்.
2005-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற நிலையில்,  2008-ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த  பின்னர்தான், எனது ஆர்வம் மேலும் அதிகரித்தது.  சினிமா திரையங்குகளுக்குச் செல்லும்போது குறிப்பிட்ட எண்களைப் பெறுவதற்காக காத்திருந்து டிக்கெட் பெறுவேன். பல நேரங்களில் படம் பார்க்கவில்லையென்றாலும் குறிப்பிட்ட திரையரங்கில் டிக்கெட் எடுத்து பத்திரப்படுத்தியும் வைத்திருக்கிறேன்.
இதுபோன்று, காபி குடிப்பதற்காக தேநீரகங்களுக்குச் செல்லும்போதும், குறிப்பிட்ட டோக்கன் எண்களைப் பெற காத்திருந்து பெற்று, சேகரித்து வருகிறேன். இதுபோன்று, 6-1-16, 7-1-17, 8-1-18 தேதிகளில் வந்த அஞ்சல் உறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன்.
என்னுடைய இந்த சேகரிப்புப் பணியை கண்ட எனது 9 வயது மகன் கைபூர் சாகுல் ஹமீதும், இப்போது இதுபோன்ற சேகரிப்பில் ஆர்வம் காட்டி, கண்காட்சி நடைபெறும் பகுதிக்கு என்னுடன் வந்து பணியாற்றி வருகிறான். நான் மதுரை அஞ்சல்தலை சேகரிப்போர் மற்றும் நாணயவியல் சங்கத்தில் உறுப்பினராகவும், எனது மகன் மாணவ உறுப்பினராகவும் இருந்து கண்காட்சியை நடத்தி வருகிறோம். எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் எங்கள் முயற்சிக்கு பெறும் தூண்டுகோலாக இருக்கின்றனர்.
எல்லோரையும் போல, ஒரே மாதிரியான  பணத்தாள்கள், நாணயங்கள் சேகரிப்பதைக் காட்டிலும் சற்று வித்தியாசமான முறையில் ஈடுபட வேண்டும் என தொடங்கிய எனது பயணம், எனது மகன் வழியிலும் தொடருவோம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் காதர் உசேன்.

படங்கள் : எஸ். அருண் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.