படிப்பு வேறு; செயல் வேறு!
உலகில் ஃபார்முலா 1 பந்தயங்களுக்கு என வெறி கொண்ட ரசிகர்கள் பலர் உள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் பந்தயங்களுக்காக பல கோடி செலவில் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.


உலகில் ஃபார்முலா 1 பந்தயங்களுக்கு என வெறி கொண்ட ரசிகர்கள் பலர் உள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் பந்தயங்களுக்காக பல கோடி செலவில் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட பந்தயங்கள் கார் ரேஸ் பந்தயங்கள்தான். ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் புதிய வடிவமைப்பு ஆராய்ச்சிக்காகப் பல கோடி செலவிடப்
படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் வாகனவியல் மாணவர்கள், "கோ கார்ட்' எனப்படும் ஒற்றை இருக்கை கொண்ட காரை சமீபத்தில் வடிவமைத்தனர்.
இக்கல்லூரியின் மாணவர்கள் வடிவமைத்த 3 சக்கர சைக்கிளுக்கு பஞ்சாபில் அண்மையில் நடந்த "எபிசைக்கிள்' எனப்படும் போட்டியில் சிறந்த "ஹைபிரிட்' சைக்கிள் என பரிசு வழங்கப்பட்டது. அப்போதிருந்தே வாகனவியல் துறை மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மாணவர்களின் எண்ணத்துக்கு கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் மிகுந்த ஊக்கமளித்தனர்.
பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு "கோ-கார்ட்' எனப்படும் ஒற்றை இருக்கை நான்கு சக்கர வாகனத்தை வடிவமைக்க முடிவு செய்தனர். இது உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஃபார்முலா 1 ரேஸில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற பெரும்பாலானவர்களின் துவக்கம் "கோ-கார்ட்'தான் என்பது
குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஷுமாக்கர், செபாஸ்டின் வெட்டல், லெவில் ஹாமில்டன் ஆகியோர் கோ கார்ட்டில்தான் துவக்கத்தில் வெற்றி பெற்று ஃபார்முலா 1 பந்தயங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் எம்.திருநாவுக்கரசு, எஸ்.கே. அசோக் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் வாகனவியல் மாணவர்கள் கே.எஸ். கண்ணன், ஜீவ கார்த்திக் பாண்டியன், மெüனகுரு ஆகியோர் கோ கார்ட் வடிவமைப்பில் ஈடுபட்டனர்.
வாகனவியல் மாணவர்கள் மட்டுமில்லாமல் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள், கணினி அறிவியல் மாணவர்களையும் இணைத்து மாணவர்களே கோ கார்ட்டை வடிவமைத்தனர்.
அகில இந்திய மோட்டார் பந்தய சங்கம் நிர்ணயித்துள்ள அளவுகளின்படி இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 மாணவர்கள் வரை இருந்தனர். மொத்தம் 35 குழுக்கள். 35 வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சட்டப்படி இல்லாத 23 வாகனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஒவ்வொரு வாகனமும் தலா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்டன. வாகனத்தில் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த வகைக் கார்கள்தான் உலகிலேயே மிகக் குறைந்த செலவிலான பந்தயக் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் வடிவமைத்த 12 கோ-கார்ட்டுகளுக்கான போட்டி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஒரு கி.மீ. சுற்றளவுள்ள பந்தயப் பாதையை 4 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். 2 சுற்றுகளுக்குப் பின் ஓட்டுநர் மாறவேண்டும் என்பது நிபந்தனை.
தங்கள் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த கோ-கார்ட்டுகளின் பந்தயத்தைப் பார்க்க கல்லூரி மாணவர்கள் குவிந்தனர். இதுவே மிகப் பெரிய ஊக்கமாகவும் அமைந்தது. கல்லூரியின் தலைவர் தொழிலதிபர் நா.மகாலிங்கம் கொடியசைத்து பந்தயத்தைத் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக வாகனங்களை வடிவமைத்த மாணவர்கள் நம்மிடம்
கூறியது:
""வாகனங்களை வடிவமைத்தவுடன் நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்கள் வடிவமைக்கும்போது எங்களுக்குத் தகுந்தாற்போல வடிவமைத்தோம். ஆனால் இதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. வெல்டிங் சில இடங்களில் சரியாக இல்லை. பிரேக் பிடிக்கவில்லை. இந்தக் குறைகளையெல்லாம் களைந்து இறுதியில் வாகனம் வெற்றிகரமாக ஓடியபோது இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் மனதுக்குத் தெரியவில்லை.
இதுவரை புத்தகத்தில் படித்ததை வைத்து, படித்தவற்றை செயலுக்குக் கொண்டு வரும்போது இருக்கும் பிரச்னைகளைப் புரிந்து கொண்டோம். இனிமேல் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பிற துறை மாணவர்களுடன் இணைந்து வடிவமைப்பை உருவாக்கும்போது குழு மனப்பான்மை அதிகரிக்கிறது'' என்றனர்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி கூறியது:
பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் வாகனவியல் துறை மாணவர்கள் தயாரித்த கோ கார்ட் தமிழகத்தில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களே தயாரித்தது. 35 குழுக்கள் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டாலும் 12 வாகனங்கள் மட்டும் நிபந்தனைகளின்படி இருந்தது. அவற்றுக்குள் போட்டி வைக்கப்பட்டது.முதல் 3 இடங்களைப் பிடித்த குழுக்களுக்கு விரைவில் கல்லூரியில் நடக்கும் விழாவில் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மாணவர்கள் வடிவமைத்த கோ-கார்ட்டில் இப்போதுள்ள நிலையை மேலும் மேம்படுத்தி, வரும் ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பந்தயங்கள் நடத்த நிர்வாகத் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு துறை மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது அவர்களுக்குள் குழு மனப்பான்மை சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் சி.ராமசாமி தெரிவித்தார்.
பொதுவாக, இந்தியர்களிடம் இல்லாதது குழு மனப்பான்மைதான் என்ற கூற்றைப் பொய்யாக்கும் வகையில் செயல்பட்டுள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த முறையில் வெற்றி பெற வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
- ஆர்.வேல்முருகன்
படங்கள்: ஆர்.சிவக்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...