முத்துக் கதை!: கருணை உள்ளம்!
மங்களபுரி என்னும் சிறிய நாட்டை மன்னர் குணசீலர் ஆண்டு கொண்டிருந்தார்.


மங்களபுரி என்னும் சிறிய நாட்டை மன்னர் குணசீலர் ஆண்டு கொண்டிருந்தார். அந்நாட்டில் வெகு காலமாக மழை பெய்யாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. அதனால் மக்கள் உணவும் நீரும் இன்றித் தவித்தனர். மக்களின் துயரைப் போக்க மன்னர் அனைவருக்கும் ரொட்டிகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி அரண்மனை வாயிலில் ரொட்டிகள்அடங்கிய ஒரு பெட்டி இருக்கும். ஒருவருக்கு மூன்று ரொட்டிகள்! வரிசையாக நின்று பொறுமையாக அவரவர் வீடுகளுக்கு ரொட்டிகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
ரொட்டிகள் தீர்ந்து விடுமோ?..... அப்படித் தீர்ந்து போய்விட்டால் நாம் பட்டினி கிடக்க நேரிடுமே என்று பலர் பயந்தனர். எனவே அனைவரும் நெருக்கி அடித்துக்கொண்டு ரொட்டிகளை அடைய முயற்சி செய்தனர்.
அந்த ஊரில் புவனேஸ்வரி என்று ஒரு சிறுமி இருந்தாள். அவள் பொறுமையும், நிதானமும் உள்ளவள். அவள் வசித்த தெருக்கோடியில் ஒரு வயதான முதியவர் இருந்தார். அவர் எழுந்து வந்து ரொட்டிக்காக நிற்கும் நிலையில் இல்லை. அவருக்கு உடல் நலம் குன்றியிருந்தது.
""என்ன தாத்தா!.... அரண்மனை வாசல்லே ரொட்டி தர்றாங்களே, நீங்க வரலையா?....'' என்று கேட்டாள் புவனேஸ்வரி.
""நான் எங்கேம்மா வர்றது?.... என்னாலே நிக்கக் கூட முடியலே...'' எனக் கூறினார் பெரியவர். பெரிவரிடம் விடை பெற்றுக் கொண்ட புவனேஸ்வரி அரண்மனை வாயிலை அடைந்தாள். அங்கு ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அவள் பொறுமையுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தாள். அவள் முறை வந்தபோது பெட்டியில் ஒரே ஒரு ரொட்டிதான் இருந்தது. புன்னகையுடன் அதை எடுத்துக் கொண்டாள் புவனேஸ்வரி. இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் அரசர்!
புவனேஸ்வரி ரொட்டியுடன் வீட்டிற்கு விரைந்தாள். தெருக்கோடியில் அவள் பார்த்த முதியவர், ஒட்டிய வயிறுடன் திண்ணையில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.
""தாத்தா, ஒரு ரொட்டிதான் கிடைச்சுது!.... நீங்க சாப்பிடுங்க.... '' என்று கூறி அந்த ரொட்டியை பெரியவரிடம் கொடுத்தாள்.
""பரவாயில்லேம்மா,..... நான் சமாளிச்சுக்குவேன்.... நீ சின்னப்பொண்ணு.... பசி தாங்கமாட்டே!.... நீ சாப்பிடு!'' என்றார் பெரியவர்.
""அப்படியா!.... சரி,.... ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதி எடுத்துக்கலாம்.... '' என்று கூறி ரொட்டியில் பாதியைப் பிய்த்தாள் புவனேஸ்வரி.
சிறுமி பிய்த்த ரொட்டியிலிருந்து ஒரு தங்கக் காசு விழுந்தது! பெரியவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். அந்தத் தங்கக்காசை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தாள் புவனேஸ்வரி.
நடந்ததை அரசனிடம் கூறி தங்கக் காசை அரசனிடம் ஒப்படைத்தாள். சிறுமியின் பொறுமையையும், நேர்மையான உள்ளத்தையும் கவனித்த அரசர், அவளைப் பாராட்டி அந்தத் தங்கக்காசையும், சில ரொட்டிகளையும் அவளுக்கு வழங்கினார். அரண்மனைக்கு வெளியில் வந்து அந்தச் சிறுமி ரொட்டியுடன் செல்வதைப் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு வானை நோக்கி, ""கடவுளே, இந்த நேர்மையான சிறு பெண்ணின் பொறுமைக்காவது இரங்கி மழையைத் தரக்கூடாதா?'' என்று இறைஞ்சினார்.
ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்து மழையின் ஓரிரு துளிகள் மன்னரின் தோளிலும், தலையிலும் விழத்தொடங்கின. சற்று நேரத்தில் பலத்த மழை! மன்னர் மகிழ்ச்சியுடன் மெல்ல நனைந்து கொண்டே அரண்மனைக்குள் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...