அரங்கம்
அரங்கம் -1
இடம்: காடு
பாத்திரங்கள்: சிங்கம், புலி, கரடி, குரங்கு, மான், மயில்.
(காட்டில் அன்று அவசரக் கூட்டம் என்ற செய்தி கிடைத்ததும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் காட்டு ராஜாவான சிங்கத்தின் இருப்பிடத்தில் ஒன்று
கூடின. மிகுந்த கோபத்துடன் இருந்த சிங்கம்
பேசத் தொடங்கியது)
சிங்கம்: நாளை காலை ஆறு மணிக்கு மேல் யாரும் செல்ஃபோனைப் பயன்படுத்தக்கூடாது. எனக்கு நிறைய புகார்கள் வருகின்றன. அதனால் இனி யாரும் செல்ஃபோனைப் பயன்படுத்தக்கூடாது. இது என் உத்தரவு!
புலி: மகாராஜா செல்ஃபோன் பயன்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? நாம் அதற்கு அடிமையாகிவிட்டோமே.... இது முடியாத செயல் அரசே...?
கரடி: ஏன் முடியாது? ராஜா, முதலில் எல்லோரும் சிறிது நாள்கள் செல்ஃபோன் பயன்படுத்தாமல் கட்டுப்பாடுடன் இருந்து பார்ப்போம். முடியவில்லை என்றால், பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாமே...
சிங்கம்: இல்லை... இல்லை... பயன்பாட்டை மொத்தமாக உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
குரங்கு: ராஜா... ராஜா... நான் இந்த ஒருவாரம் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறேன்!.....இப்போதுதான் யூடியூபில் வேற்றுமொழி ஒன்று ஆன்லைன்லில் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் கோர்ஸ் முடிந்து விடும்... ப்ளீஸ் ராஜா...
சிங்கம்: முடியாது!....செல்ஃபோனை மூட்டைக் கட்டி வையுங்கள். எப்போது பார்த்தாலும் செல்ஃபோன்!காட்டில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியவில்லை! இதனால் வாரம் ஒருமுறைகூட நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதில்லை. இதை உடனடியாக நாம் தவிர்த்தாக வேண்டும்.
மயில்: தப்பாக நினைக்க வேண்டாம்... இன்னும் இரண்டு நாள்கள் மட்டும் செல்ஃபோனைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரவேண்டும்... என் உறவினரிடமிருந்து ஒரு முக்கியமான செய்தி வரவேண்டி இருக்கிறது. என் மகள் திருமணம் தொடர்பானது. இரண்டு நாள்களுக்குப் பிறகு செல்போனை நான் தொடவே மாட்டேன் ராஜா...
சிங்கம்: கூடவே கூடாது... ராஜா ஆணைக்கு மறு பேச்சு பேசக் கூடாது! நாளை யாராவது செல்ஃபோனைப் பயன்படுத்தியது ஒற்றர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தால், கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் ஜாக்கிரதை! எல்லோரும் இப்போது கலைந்து செல்லலாம்.
(சிங்க ராஜா கிளம்பிப்போனதும், எல்லா மிருகங்களும், பறவைகளும் மிகவும் வருத்தத்துடன் தங்களது இருப்பிடம் திரும்பின. குரங்கும், மயிலும் சிங்க ராஜாவை சபித்தன. புலி தன் கையில் மறைத்து வைத்திருந்த செல்போனைப் பார்த்து கண்ணீர் வடித்தபடியே
சென்றது)
அரங்கம் -2
இடங்கள்: ஆற்றுப்படுகை; நேரம்: மதியம்.
பாத்திரங்கள்: அணில், முயல், குரங்கு, ஆமை,
வெள்ளைப் புறா.
(கூட்டம் முடிந்து நேராக ஆற்றுப்படுகை ஓரமாக வந்த அணில், குரங்கு, முயல், ஆமை நான்கு நண்பர்களும் செல்ஃபோனைத் தொடர்ந்து பயன்படுத்த என்ன வழி என்பது குறித்து ஆலோசனை நடத்தின)
குரங்கு: ராஜா இப்படிப் பொசுக்கென்று கூறிவிட்டாரே... நாளையிலிருந்து நான் எப்படி செல்ஃபோன் பார்க்காமல் இருப்பது? எனக்குக் பைத்தியமே பிடித்து
விடும் போலிருக்கிறதே... முயல் அண்ணா ஏதாவது ஐடியா கொடுங்களேன்... பொழுது விடிந்துவிடப் போகிறது...
முயல்: உன் செல்ஃபோனை சைலண்ட் மோடில் போடு. அதிகம் வெளிச்சம் வெளியே தெரியாமல் இருக்க நைட் மோடிலும் போட்டுவிட்டு, ஹெட் செட்டை காதில் போட்டுக்கொண்டு பாரு. வேறு வழியே இல்லை...
ஆமை: எனக்குப் பிரச்னையே இல்லை... செல்ஃபோனை என் ஓட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்... அப்படி ஒரு ஓட்டைக் கொடுத்த கடவுளுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்லணும்.
(ஆமை இப்படி மகிழ்ச்சியாகக் கூறியதைக் கேட்ட அணிலுக்குக் கோபம் வந்தது)
அணில்: இப்படி ஆளாளுக்கு ஏதாவது ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்துத் திருட்டுத்தனமாகப் பயந்து பயந்து பயன்படுத்துவதைவிட, ராஜாவிடம் உண்மையைக் கூறி சுதந்திரமாகப் பயன்படுத்தலாமே? அதற்கு என்ன வழி என்று யோசியுங்கள்... திருட்டுத் தனமாகப் பயன்படுத்தி மாட்டிக்கொண்டால், நாம் இந்தக் காட்டில் இருக்க முடியாது. நம் நட்பும் போய்விடும். செப்ஃபோனை விட நம் நட்புதான் மிகவும் அவசியம்.
(அப்போது வெள்ளைப் புறா ஒன்று பறந்து வந்து அவர்கள் அருகில் அமர்ந்தது)
வெள்ளைப் புறா: என்ன எல்லோரும் வருத்தமாக இருக்கிறீர்கள்? செல்ஃபோன் பிரச்னையா? காட்டில் எங்கு போனாலும் இதே பிரச்னை பற்றித்தான் பேச்சு...
ஆமை: வாருங்கள் புறா அண்ணா... உங்கள் உதவிதான் இப்போது எங்களுக்குத் தேவை... செல்ஃபோன் பயன்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? இந்த ராஜா இப்படியா அதிரடியாக ஒரு முடிவை எடுப்பார்? நீங்கள்தான் அவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும். நீங்கள்தான் சமாதானத்திற்கு என்றே படைக்கப்பட்டவர்களாயிற்றே...
வெள்ளைப் புறா: வருத்தப்படாதீர்கள். வாருங்கள் நாம் அனைவரும் ராஜாவின் அரண்மனைக்குச் செல்வோம்.
(அப்போது காட்டில் மழை பொழியத் தொடங்கியது. புறா பறந்து செல்ல, ஆமையைக் குரங்கும், அணிலை முயலும் தூக்கிக்கொண்டு, ஐந்தும் அரண்மனை நோக்கி விரைந்தன. வழியில் நரியாரும் சேர்ந்து
கொண்டார்)
அரங்கம்-3
இடம்: சிங்க ராஜாவின் அரண்மனை
பாத்திரங்கள்: சிங்க ராஜா, சிங்க ராணி, சிங்கக்குட்டி, புறா, அணில், குரங்கு, ஆமை, முயல், நரி.
(மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்று ஒருவழியாக புறா, அணில், குரங்கு, ஆமை, முயல், நரி ஆறும் விடியற்காலை 4 மணிக்கு சிங்க ராஜாவின் அரண்மனையை அடைந்தன. அப்போது உள்ளிருந்து சண்டைபோடும் சத்தமும், சிங்கக் குட்டியின் அழுகையும் தொடர்ந்து கேட்டது. அதை ஒளிந்து நின்று அவை கேட்கத்
தொடங்கின)
சிங்க ராஜா: (சிங்க ராணியைப் பார்த்து) ஏன் இப்படித் தூங்கவிடாமல் குழந்தை அழுது கொண்டேஇருக்கிறது... என் தூக்கமே கெட்டது. அதன் அழுகையை நிறுத்தக் கூடாதா நீ...
சிங்க ராணி: எப்படி நிறுத்த முடியும் அரசே... உங்கள் ஆணையின்படி அதன் கையில் இருந்த செல்ஃபோனை இரவே பிடுங்கி ஒளித்து வைத்தேன். அப்போது ஆரம்பித்த அழுகை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நீங்கள்தானே அவனிடம் செல்ஃபோனைக் கொடுத்துப் பழக்கியிருக்கிறீர்கள்... பாருங்கள், அழுது அழுது தொண்டை வறண்டு போய்விட்டது... காய்ச்சல் வந்துவிட்டது போலிருக்கு. மருத்துவரைத்தான் கூப்பிடணும்...
சிங்க ராஜா: கூப்பிட வேண்டியதுதானே... எதற்குக் குழந்தையை அழ விடுகிறாய்...
சிங்க ராணி: நீங்கள்தானே அரசே இன்றிலிருந்து செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். உடனடியாக மருத்துவரை அழைக்கலாம் என்றால் அதற்கும் செல்ஃபோன்தான் வேண்டும். நானே உங்கள் ஆணையை மீறினால் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? செல்ஃபோனில் கூப்பிடிட்டாலே குறைந்தபட்சம் மருத்துவர் வர அரை மணி நேரமாவது ஆகும். நேரில் சென்று வர ரொம்ப நேரமாகுமே... மழை வேறு!... எப்படி குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல முடியும்?
சிங்க ராஜா: என்ன இது பெரிய சோதனையாக இருக்கிறதே... இன்னும் இரண்டு நாள் கழித்து இந்த உத்தரவை நான் போட்டிருக்கலாமோ? ஒரு நாள்கூட செல்ஃபோன் இல்லாமல் இருக்க முடியாது போலிருக்கே... சரி, சரி... யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனைக் கொண்டுவா, உடனே மருத்துவருக்குப் போன் செய்வோம்.
(மறைந்து நின்று இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆறு பேரும் அரண்மனைக்குள் நுழைந்தனர்)
வெள்ளைப் புறா: அதற்கு அவசியமே இல்லை அரசே... மருத்துவர் தேவையில்லை... உங்கள் குழந்தையின் கையில் இப்போது செல்ஃபோனைக் கொடுங்கள் உடனடியாக அழுகை நின்றுவிடும். ஏனென்றால் நீங்கள் அப்படித்தான் அந்தக் குழந்தையைப் பழிக்கியிருப்பீர்கள் என்று தோன்றுகிறது... இல்லையா மகாராஜா?
(சிங்கம் மெளனமாக இருந்தது)
சிங்க ராஜா: ஆமாம்... இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீர்கள்?
வெள்ளைப் புறா: காரணம் இருக்கிறது ராஜா. நீங்கள் செல்ஃபோனைப் பயன்படுத்தக்கூடாது என்று அதிரடியாகக் கூறிவிட்டீர்கள்... ஆனால், உங்களாலேயே இப்போது அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. எந்த மாற்றத்தையும் உடனடியாக நாம் கொண்டுவர முடியாது அரசே! சிறிது சிறிதாகத்தான் செய்தாக வேண்டும். இன்றைக்குக் காட்டில் எல்லோரும் செல்ஃபோனுக்கு அடிமையாகிவிட்டனர் என்பது உண்மைதான். ஆனால், அவர்களை உடனடியாக அதிலிருந்து மீட்பது என்பது சிரமமானது. முதலில் வாரத்துக்கு ஒரு நாள் பயன்படுத்தாதீர்கள் என்று கூறலாம், பிறகு மாதத்துக்கு... இப்படித்தான் சிறிது சிறிதாக அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டே அதிலிருந்து வெளியே வரமுடியும்.
சிங்க ராஜா: இது இல்லாமல்தானே நாம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தோம்... இப்போது இது இல்லாமல் இருக்க முடியாதா என்ன?
வெள்ளைப் புறா: உங்களாலும், உங்கள் குழந்தையாலுமே இருக்க முடியவில்லையே அரசே... நீங்களே யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாகப் பயன்படுத்த நினைத்துவிட்டீர்களே...இது தவறில்லையா? ஓர் ஆணையைப் பிறப்பிக்கும் முன்பு அதை முதலில் நீங்கள் செயல்படுத்திப் பார்த்திருக்க வேண்டும்; பிறகுதான் அறிவிக்க வேண்டும்; அதுதான் முறை. அதற்கு சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
அணில்: ஆமாம் அரசே... இன்றைக்கு எல்லாமே செல்பேசி மூலமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. உடனடியாகப் பணம் அனுப்ப, நாம் இருக்கும் இடம்தேடி உணவை வரவழைக்க, அவசரத்துக்கு மருத்துவரை - ஆம்புலன்சை அழைக்க, பள்ளி - கல்லூரிகளுக்குக் கட்டணம் செலுத்த, கரண்ட் பில் கட்ட, வாடகைக் காரில் பயணிக்க, நல்ல விஷயங்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள, ரயில், பஸ், ஃப்ளைட் டிக்கெட் புக்கிங் செய்ய, வேற்றுமொழியைக் கற்றுக்கொள்ள, சமையல் கற்றுக்கொள்ள ஒருவர் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள, நாட்டு நடப்புச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள என்று,.... எல்லாமே இன்றைக்கு செல்ஃபோனில்தானே அரசே செய்ய வேண்டியிருக்கிறது!...
குரங்கு: அதுமட்டுமல்ல அரசே... உங்கள் மகனுக்குக் கூட செல்ஃபோனில் உள்ள ஓர் ஆப் மூலமாகத்தான் ரைம்ஸ், ஆரம்பப் பாடம் எல்லாம் கற்றுக்கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம். மேலும், கேஸ் புக்கிங் செய்யக்கூட இன்றைக்கு செல்ஃபோன்தானே வேண்டும் அரசே... இல்லையென்றால் எல்லாரும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்.
ஆமை: அரசே எங்களுக்குக் கடவுள் முதுகில் ஓடு கொடுத்தது எதற்காகத் தெரியுமா? ஆபத்து வரும்போது எங்கள் உடம்பை அந்த ஓட்டுக்குள் மறைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கத்தான். எங்களையே முன்னுதாரணமாக்கி திருவள்ளுவர்கூட, "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கி' என்று பாடியிருக்கிறார். அதுபோல செல்ஃபோனை தேவைக்கு ஏற்பவும், நம் அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்தினால் ஆபத்தில்லை அரசே...
சிங்கம்: சபாஷ்! நீங்கள் நால்வரும் சரியாகத்தான் சொன்னீர்கள்... இதையெல்லாம் நான் யோசிக்கவில்லையே... செல்ஃபோனால் பல இடைஞ்சல் என்று சிலர் வந்து என்னிடம் புகார் செய்ததால், அவர்கள் நன்மை கருதியே உடனடியாக ஆணையை அறிவித்துவிட்டேன். அது தவறு என்பது இப்போதுதான் புரிகிறது. நரியாரே... இந்தக் காடே அதிரும்படியாக ஊளையிட்டு, எல்லோரையும் இங்குக் கூப்பிடுங்கள்... இனி எல்லோரும் அவரவர் அவசரத் தேவைக்கு மட்டும் செல்ஃபோனைப் பயன்படுத்தலாம் என்று காட்டு ராஜா கூறியதாக உரக்கக் கூவுங்கள்....
(சிங்க ராணி, மறைத்து வைத்திருந்த செல்ஃபோனை தன் குழந்தையிடம் கொடுக்க, அது உடனே அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கத் தொடங்கியது. மகிழ்ச்சி அடைந்த சிங்க ராஜா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்)
- திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜெயலலிதா பிறந்த நாள்: ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள்

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

