வாசிக்கவும் நேசிக்கவும் பழக வேண்டும்!
சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள தில்லைநாயகபுரத்தில் சசிகலாவைத் தெரியாதவர்கள் இல்லை. கிள்ளை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரியும் சசிகலா சிதம்பரத்தில் வசிக்கிறார்.


சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள தில்லைநாயகபுரத்தில் சசிகலாவைத் தெரியாதவர்கள் இல்லை. கிள்ளை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரியும் சசிகலா சிதம்பரத்தில் வசிக்கிறார்.
"சமூகத்திற்குப் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை' மலையளவு சமூகம் அளித்ததைக் கடுகு அளவாவது திரும்பத் தர என்னால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறேன்..' என்று சொல்லும் சசிகலா தில்லைநாயகபுரத்தில் பெண்கள், குழந்தைகளுக்காக நூல்நிலையம், மாலைநேரப் பள்ளி, தையல் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.
கன மழையாலும், பனி பெய்யும் மாதம் என்பதால் கடுங்குளிராலும் குழந்தைகளும், வயதானவர்களும் அவதிப்படுவதைக் கண்டு சசிகலாவால் கடந்து செல்ல முடியவில்லை. ஊராட்சி மன்ற கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களுக்கு தேவையான போர்வைகளும், பிரெட் பாக்கெட்டுகளும் சசிகலா வழங்கினார். சசிகலா தனது பயணம் தொடர்பான அனுபவங்களையும் , லட்சியங்களையும் பகிர்ந்து கொள்கிறார்:
""விளிம்புநிலை குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு கல்வி இன்றைக்கும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. இங்குள்ள பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடியும். ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டுமானால் நகருக்குள் வரவேண்டும். மாணவிகள் வயதுக்கு வந்துவிட்டால் எட்டாம் - ஒன்பதாம் வகுப்புடன் நின்று விடுகிறார்கள். ஒருவேளை பத்தாம் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டாலும் கல்லூரி போவது அரிது. கல்யாணம், குழந்தைகள் என்றாகும் போது வாழ்க்கையை நகர்த்துவதே அவர்களுக்கு பெரும்பாடாகிவிடுகிறது. அப்போதுதான் கல்வியின் மகத்துவத்தை பெண்கள் உணருகிறார்கள்.
இந்தப் பகுதியில் நூலகம் இல்லை. நூலகத்திற்குப் போகவேண்டும் என்றால் நகருக்குள் போக வேண்டும். அது பெண்களால் முடியாது. பெண்களிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு வர வேண்டும். நூல்களை வாசிக்கவும் நேசிக்கவும் பெண்கள் பழக வேண்டும் என்பதற்காக வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து "பெண்கள் நூலகத்தை' இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்தத் தொடங்கினேன். நூல்களை வாங்கி வைத்தேன். இதை அறிந்த பலரும், "துல்கல்' நூலகக் குழுவும், நூல்களை அன்பளிப்பு செய்தார்கள். பெண்களுக்கும் சிறார்களுக்குமான நூல்நிலையத்தை இப்போது ஆண்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
பெண்களிடம் ஆர்வமிருந்தாலும் குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுவேலைகள் காரணமாக நூல் வாசிப்புக்கு நேரம் ஒதுக்க இயலாததால் சில பெண்களே நூலகத்தை தேடி வருகிறார்கள். அதுவும் நூலகத்துக்குத் தொடர்ந்து வாசிக்க வரச் சொல்லி வலியுறுத்துவதால் வருகிறார்கள்.
சென்ற வாரம் இரண்டு பெண் குழந்தைகளின் தாயார் ஒருவர் நூலகத்தில் அமர்ந்து நூலை வாசித்துக் கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் நூலகத்தின் வெளியிலிருந்து ஒரு அதட்டலான குரல் கேட்டு எட்டிப் பார்த்தேன்.
"ஏய்...வெளியில...வா.... இங்க வந்து என்ன கிழிக்கிறே' என்று கத்தினார். நின்று கூட பேச முடியாத அளவுக்கு போதை தடுமாற்றத்தில் இருந்தார், அந்தப் பெண்ணின் கணவர். "பார்த்தீங்களா டீச்சர்... நீங்க நூலகத்துக்கு வாங்கன்னு கூப்பிடுறீங்க.... வந்தா இந்த மாதிரி வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு ... இது எங்க தலையெழுத்து டீச்சர்...' என்று ஆதங்கத்தை கொட்டிவிட்டு அந்தப் பெண் கிளம்பினார். என்னால் அந்தப் பெண்ணைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ஆணாதிக்கத்தால் விளிம்புநிலை பெண்களின் அவலம் அவ்வளவு சீக்கிரம் நீங்கிவிடாது என்பது மட்டும் புரிந்தது.
அவ்வப்போது வழங்கப்படும் உணவு, பொருளாதார உதவிகள் நலிந்தவர்களுக்கு நிரந்தரமாக உதவாது. அவை தற்காலிக நிவாரணம் மட்டுமே. "வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் இருந்து கொண்டு தொழில் செய்யலாம் .. வருவாய் ஈட்டலாம்'.. என்ற நோக்கத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பையும் நூலகத்தின் ஒரு பகுதியில் ஓராண்டுக்கு முன் தொடங்கினேன். சிறிய ஊதியம் கொடுத்து தையல் வேலை தெரிந்த பெண் ஒருவரை பயிற்சியாளராக அமர்த்தியுள்ளேன். இரண்டு தையல் மெஷினை வாங்கி வைத்து பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினேன். எனது முயற்சிகளுக்கு பலவகையில் உதவிவரும் சிதம்பரத்தைச் சேர்த்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் ஸ்ரீதர் ஒரு தையல் மெஷின் அன்பளிப்பு செய்தார். தையல் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கரோனா காலத்திற்கு முன்பாகவே இருபது சிறார்களுக்கு மாலை நேரங்களில் எனது வீட்டில் வகுப்பு எடுத்து வந்தேன். கரோனா வந்ததும் சமூக இடைவெளி கட்டாயம் ஆனதால் எனது வீட்டில் வகுப்புகளை நடத்த முடியவில்லை. கரோனாவினால் பள்ளிகளும் இயங்கவில்லை. பாடங்கள் படிக்கும் பழக்கத்தை சிறார்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தில்லைநாயகநகரின் தன்னார்வ கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒரே தெருவில் ஒன்றாக கூடி விளையாடும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வகுப்புகளை நடத்திவருகிறேன். சிலசமயம் தெருவிலேயே வகுப்புகள் நடக்கும். சிறார்கள் குடியிருக்கும் இடத்திலேயே வீட்டு முற்றத்தில் அல்லது தெருவில் பாய் விரித்து வகுப்பு நடந்து வருகின்றன. தன்னார்வ தொண்டர்களுக்கு ஊக்கத் தொகை கொடுத்து இந்த டியூஷன் வகுப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறேன்.
பொம்மைகள் விரும்பாத குழந்தைகள் இல்லை. நான் சிறுமியாக இருந்த போது பொம்மைக்காக ஏங்கியுள்ளேன். ஆனால் கிடைக்கவில்லை. இன்று எனக்கு வேலை இருக்கிறது. சம்பளம் உண்டு. பல பொம்மைகள் வாங்கலாம். ஆனால் பொம்மைகளோடு விளையாடும் பருவத்தில் நான் இல்லையே. "வகுப்பறை - ஒரு ஜீவனுள்ள சந்திப்பு" அமைப்பில் இணைந்திருக்கும் சிறார்களின் பிறந்தநாளின் போது பொம்மைகளை அவர்களுக்குப் பரிசளித்து எனது பால்ய கால ஏக்கத்தை தீர்த்துக் கொள்கிறேன்'' என்கிறார் ஆசிரியை சசிகலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...