/

பாலின சமத்துவம் பாடத்திட்டத்தில் வர வேண்டும்!

பெண்களின் பொருளாதார பங்கேற்பு விகிதம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:40 pm

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

பெண்களின் பொருளாதார பங்கேற்பு விகிதம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 66-ஆவது சுற்றின்படி 1990-ல் 35% இருந்தது தற்போது 14 சதவீதத்துக்கும் குறைந்துள்ளது.


இச்சூழலில் பெண்களின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவது யார்?
இந்திய மகளிரியல் சங்கத்தின் அகில இந்தியப் பொருளாளரும், பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் மற்றும் இயக்குநரும், தமிழறிஞர் சி. இலக்குவனாரின் மருமகளுமான, பேராசிரியர் முனைவர் ந. மணிமேகலையை இது குறித்து, திருச்சி பொன்னகரில் உள்ள
அவரது இல்லத்தில் சந்தித்தோம்...


""தற்போதுள்ள வளரிளம் பெண்களுக்கு சுதந்திரம் எது என்பது புரியாமல் உள்ளது. நடை, உடை, பாவனை மாறியிருக்கிறதே தவிர, சிந்தனை, எண்ணங்கள் மாறவில்லை. அவர்கள் எதை புதுமை என எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் சிக்கல் உள்ளது. சிந்தனை, எண்ணங்களோடு, முற்போக்கு கண்ணோட்டத்துக்கு மாறினால்தான் பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டதாக உணரமுடியும். ஒருசில மேல்தட்டு வர்க்கத்தில் உள்ள வளரிளம் பெண்கள் பெரும்பாலும் முற்போக்கு சிந்தனை இல்லாமலும், பொதுவான கீழ்தட்டு பெண்களின் நிலை குறித்து அதிக அக்கறை கொள்ளாமலும் உள்ளனர்.
சமூகவியலில் முதுகலை படித்த ஒரு பெண் படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்துகொண்டு வீட்டில்தான் இருக்கப் போகிறேன் என்று சொன்னால், அவருக்கு படிக்கக் கிடைத்த வாய்ப்பால் யாருக்கு என்ன பயன்? தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க அவருக்கு தெரியவில்லை.
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், இளம்பெண்களுக்கு பெற்றோர்களே எதிரிகளாகத் தெரிவார்கள். அந்த நேரத்தில் யாராவது ஒரு பையன் அக்கறையோடு இருப்பதாகப் பேசினால் அவர்தான் உலகம் என கருதிவிடும் சூழல் ஏற்படுகிறது. உடனே, அவரை நம்பி தன்னை ஒப்படைக்கும் நிலையும் காணப்படுகிறது. இந்தத் தன்மை மாறவேண்டும். வீட்டில் தந்தை, அண்ணன், தம்பிகளிடம் வெளிப்படையாகப் பேச வாய்ப்பு கிடைக்கும் பெண்கள் வெளியில் இதுபோன்று ஏமாற வாய்ப்பு இல்லை.
பெண்கள் முன்னேறியுள்ளார்கள் என்று கருத சரியான விஷயங்களில் அவர்களே முடிவெடுக்க வேண்டும். வேலையில் இருக்கும் ஓர் ஆண் வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்லும்போது, அது வீட்டில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், பெண்கள் அவ்வாறு சென்றால், அது பரிசீலனைக்கு உள்ளாகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை சார்பில், பெண்களின் நிலை குறித்த பல ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற சமூக அறிவியல் துறைகள் செய்ய முடியாத ஆய்வுகளில் மகளிரியல் துறை கவனம் செலுத்துகிறது.
பாலின பாகுபாடு இல்லாத ஓர் உலகை உருவாக்குவதற்கான உணர்வூட்டலை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்துகிறது. இதுகுறித்த ஆய்வை பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை மேற்கொண்டது:
இதில், பாலின சமத்துவ விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது என்பது குறித்து பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், சுய உதவிக் குழு பெண்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதில், அவர்களின் நிறைய செயல்பாடுகள் பெண்களிடம் காட்டும் பாகுபாடு என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அதுகுறித்து மகளிரியல் துறை ஆய்வுக் குழு விளக்கியபோதுதான் அது பாலின பாகுபாடு என்பதே அவர்களுக்குத் தெரியவருகிறது.
பாலினம் மற்றும் பால் குறித்த வேறுபாடு மக்களிடம் செல்லவில்லை. பால் (செக்ஸ்) என்பது இயற்கை. பாலியல் (ஜென்டர்) என்பது சமூக கட்டமைப்பு. ஒரு பெண்தான் குழந்தை பெறமுடியும். தாய்ப்பால் கொடுக்க முடியும். இதைத்தாண்டி, ஆண்கள், பெண்கள் செய்யும் பணிகள் அனைத்தும் பொதுவே. இத்தகைய விளக்கத்தை பள்ளி பருவம் முதலே பாடத்திட்டத்தில் தொடங்க வேண்டும்.
சுதந்திரம் என்பது, ஆண்கள் இயங்கும் அனைத்து தளங்களிலும் பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் இயங்கும் சூழல் வரவேண்டும். ஆய்வுக்குப் பிறகு இதுபோன்ற பாகுபாடுகளை இருதரப்பிலும் புரியவைக்க முயற்சி செய்கிறோம்.''

- தொடர்ச்சி அடுத்த இதழில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.