இளைய பாரதமே... எழுக! - 3: வாசித்தலும் யோசித்தலும்!
தனிமையை நாடுவது, காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிவது, முக்தியடைவதற்கான முதல்கட்டப் பணிகளை மேற்கொள்வது, பூஜை - புனஸ்காரம் - வேள்வி என்று சடங்கு சம்பிரதாயங்களை


தனிமையை நாடுவது, காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிவது, முக்தியடைவதற்கான முதல்கட்டப் பணிகளை மேற்கொள்வது, பூஜை - புனஸ்காரம் - வேள்வி என்று சடங்கு சம்பிரதாயங்களை முதன்மைப்படுத்துவது போன்றவையே ஆன்மீகத்தின் அடையாளங்களாக விளங்கிய காலகட்டத்தில் மக்களைப் பற்றிச் சிந்தித்ததும் மக்களின் நிலை கண்டு இரக்கப்பட்டுப் பேசியதும் விவேகானந்தரின் தனித்தன்மையாக வெளிப்பட்டது. ஆண்டவனைப் பற்றி மட்டும் பேசுபவனே ஆன்மிகவாதி என்றிருந்த சூழலில் ஆண்டவனைப் பற்றி மட்டுமல்லாது, ஆள்பவனைப் பற்றியும் ஆன்மிகவாதிகள் பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் விவேகானந்தரின் வாழ்வும் தொண்டும் அமைந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடராக விளங்கிய விவேகானந்தர் 1886 ஆம் ஆண்டு புற்றுநோயால் பரமஹம்சர் மறைந்த பிறகு, அவரின் தலைமைச் சீடராக சில காலம் அங்கேயே இருந்துவிட்டு நாடெங்கும் திரிந்து அனுபவங்களைப் பெறும் நோக்கில் புறப்பட்டு விட்டார். ஒரு குறிப்பிட்ட இலக்கை மனதில் வைத்துக் கொள்ளாமல் நாட்டின் பல பகுதிகளுக்கு நடந்தும் கிடைக்கின்ற வாகனங்களிலும் சுற்றித் திரிந்தார். அந்தக் காலகட்டங்களில் புத்தகங்களை வாசிப்பது, புதுப்புது இடங்களுக்குச் சென்று அங்கு வாழும் மனிதர்களின் வாழ்நிலையை விளங்கிக் கொள்வது, விதவிதமான பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடுவது போன்றவற்றிலேயே நான்காண்டு காலத்தை முழுமையாகச் செலவிட்டார்.
பரமஹம்சர் இறப்பதற்கு முன்பே புத்த இலக்கியங்களைப் படிப்பது, புத்த மடாலயங்களுக்குச் செல்வது, புத்தரின் சித்தாந்தங்கள் குறித்துப் பேசுவது போன்றவற்றில் விவேகானந்தர் ஈடுபாடு காட்டியுள்ளார். ஒரு நாள் தாரக், காளி ஆகிய இரண்டு அன்பர்களையும் அழைத்துக் கொண்டு புத்த கயாவுக்கு பரமஹம்சரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டார் விவேகானந்தர்.
கயாவுக்குச் சென்ற மூவரும் ரயில்நிலையத்திலிருந்து ஏழு மைல்கள் நடந்து சென்று புத்தர் ஞானம் பெற்ற இடத்தைச் சென்றடைந்தனர். அமைதியான மாலை நேரத்தில் புத்தர் தியானம் செய்த போதி மரத்தின்கீழ் அமர்ந்து மூவரும் நெடுநேரம் தியானம் செய்தனர். புத்த கயாவிலேயே மூவரும் நான்கு நாட்கள் இருந்துள்ளனர். பயணச் செலவுக்குக்கூட கையில் காசில்லாத சூழ்நிலையிலும் புத்த கயாவுக்குச் சென்றுள்ள விவேகானந்தரின் ஆர்வமும், ஈடுபாடும் இவருக்குள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த தேடல் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
பரமஹம்சரின் மரணத்திற்குப் பிறகுதான் விவேகானந்தர் தேசம் தழுவிய நீண்ட இத்தகைய பயணத்தில் முழுவீச்சுடன் ஈடுபட்டார்.
இந்த நெடும் பயணத்தின் போது இடையில் 1890ஆம் ஆண்டு விவேகானந்தர் மீரத் நகரில் சில பழைய சகோதரத் துறவிகளை ஏதேச்சையாகச் சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டதால் அவர்கள் மீரத்திலேயே சில நாட்கள் முகாமிட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் விவேகானந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அகாந்தா நந்தா என்ற சக துறவி விவேகானந்தர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள நூலகமொன்றிலிருந்து வாசிப்பதற்கு புத்தகங்கள் எடுத்துக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். புத்தகம் எடுத்து வந்து கொடுக்கிற பணி ஏறத்தாழ தினசரி நடைபெற்றது.
ஒருநாள் அகாந்தா நந்தா அந்நூலகத்திலிருந்து சர் ஜான் லுப்பக் எழுதிய பெரிய புத்தகமொன்றை எடுத்து வந்து விவேகானந்தரிடம் கொடுத்தார். அதை வாசித்து முடித்த பிறகு ஓரிரு நாட்களில் நூலகத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
நூலகருக்கே அந்நூல் வாசிக்கப்பட்டதா அல்லது வாசிக்காமலேயே திருப்பிக் கொடுக்கப்பட்டதா என்று சந்தேகம் வந்து அதனை அகாந்தா நந்தாவிடமே கிண்டலாகக் கேட்டுவிட்டார். இதைக் கேள்விப்பட்ட விவேகானந்தர் அவரே நேரடியாக நூலகத்திற்குச் சென்று நூலகரிடம், ""இந்த நூலை வாசிக்காமல் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் சொன்னீர்களாம்! அந்த நூலை எடுங்கள்'' என்று சொல்லி அதனைப் பெற்று நூலகரிடமே கொடுத்து ""இந்நூலிற்குள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்... நான் பதில் சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார். நூலகரும் அந்நூலுக்குள்ளிருந்து விவேகானந்தரிடம் மடக்கி மடக்கி பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அத்தனை கேள்விகளுக்கும் எவ்விதத் தயக்கமுமின்றி உடனுக்குடன் விவேகானந்தர் சரியான பதில்களையளித்துள்ளார்.
கேத்தி மன்னர் ஒருமுறை விவேகானந்தர் வேக வேகமாகப் புத்தகத்தை வாசிப்பதைப் பார்த்து வியப்புடன், ""புத்தகத்தின் ஒரு பக்கத்தை சில விநாடிகளில் படித்து விட்டு அடுத்த பக்கத்திற்குப் போய் விடுகிறீர்களே! இது எப்படி உங்களால் முடிகிறது?'' என்று கேட்டுள்ளார்.
""ஒரு குழந்தை முதன்முதலில் வாசிக்கத் தொடங்குகிற போது ஒவ்வொரு எழுத்தாக ஒருமுறைக்கு இருமுறை மெதுவாக மெதுவாக உச்சரித்துப் பார்த்துத்தான் பிறகு ஒரு சொல்லையே உச்சரிக்கிறது. அதுபோலவே அடுத்த கட்டமாக வாசிக்கும் சிறுவர்கள் ஒவ்வொரு சொல்லாகப் பார்த்து வாசிக்கின்றனர். அதே சிறுவன் சிறிது பயிற்சிக்குப் பிறகு ஒவ்வொரு வாக்கியமாகப் பார்த்து அப்படியே வாசிக்கிறான். அதுபோலவே யாராக இருந்தாலும் ஈடுபாட்டுடன் நீண்ட காலம் வாசிப்புப் பழக்கத்தை இடைவிடாமல் மேற்கொண்டால் அதனால் கிடைக்கிற தொடர்ச்சியான பயிற்சியால் பத்தி பத்தியாகவும் பக்கம் பக்கமாகவும் பார்த்தவுடன் மடமடவென வாசிக்க முடியும். அவ்வாறே வேகமாக நான் வாசிக்கிறேன்'' என்று கேத்தி மன்னனுக்கு பதிலளித்துள்ளார் விவேகானந்தர்.
விவேகானந்தரின் கடைசி காலங்களில் பேலூர் மடத்தில் உடல்நிலை சரியில்லாமல் ஓய்விலிருந்த போது அவரது முக்கிய சீடர்களில் ஒருவரான சரத்சந்திர சக்கரவர்த்தி மடத்திலுள்ள அவரது அறைக்குச் சென்றுள்ளார். அறையில் 10 பாகங்களைக் கொண்ட "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' என்ற ஆங்கில கலைக்களஞ்சிய நூல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த நூலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்த சரத் சந்திரர், ""இத்தனை பாகங்களடங்கிய இவ்வளவு பெரிய நூலைப் படிக்க ஒரு மனிதனுக்கு ஓர் ஆயுளே வேண்டும்'' என்று கூறினார். அதற்கு விவேகானந்தர் ""என்ன சொல்கிறீர்! நான் இந்த 10 பாகங்களடங்கிய நூலையும் சமீபத்தில்தான் படித்து முடித்தேன். இந்நூலுக்குள் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து நீங்கள் கேள்வி கேளுங்கள்'' என்று கூறினார். அவரும் ஒவ்வொரு பாகமாக ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள விவரங்கள் தொடர்பான பல கேள்விகளைக் கேட்டார். அத்தனை கேள்விகளுக்கும் விவேகானந்தர் சரியான பதிலளித்துள்ளார். சரத்சந்திரர் விவேகானந்தரின் வாசிப்புத் திறனையும் நூலிலுள்ள கருத்துக்களை சிதறாமல் உள்வாங்கிய விதத்தையும், அபரிமிதமான நினைவாற்றலையும் அறிந்து வியந்தார். ""சுய கட்டுப்பாடு, ஈடுபாட்டோடு கூடிய கூர்மையான கவனம், தேர்ந்த பயிற்சி இம்மூன்றும் இருந்தால் உங்களாலும் என்னைப் போலவே வாசிக்க முடியும்'' என்று சரத் சந்தரரிடம் கூறினார் விவேகானந்தர்.
நாட்டு மக்கள் படுகிற துன்பங்களை நேரில் கண்டு உணர்வதற்கு இத்தேடல் பயணம் மிகவும் பயன்பட்டது.
சிகாகோ சர்வமத சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக பம்பாய் துறைமுகம் நோக்கி ரயிலில் பயணித்தார் விவேகானந்தர். வழியில் ஆபுசாலை ரயில் நிலையத்தில் பிரம்மானந்தர், துரியானந்தர் ஆகிய இரண்டு சகோதரத் துறவிகளைச் சந்தித்து உரையாடினார் விவேகானந்தர். அத்துறவிகளிடம் தனது அமெரிக்கப் பயணத்திற்கான நோக்கத்தை விளக்கியுள்ளார்.
""நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். ஐயகோ! என் சொல்வேன். சகோதரர்களே! மக்களின் கொடிய வறுமையை என் கண்ணில் கண்டு துயருற்றேன். என் கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. அவர்களுடைய வறுமையையும், துன்பங்களையும் அகற்ற முதலில் முயற்சி செய்யாமல், அவர்களிடம் மதத்தைப் போதிப்பது பயனற்றது என்பது என் உறுதியான முடிவாகும். இந்தக் காரணத்திற்காகவே இந்திய ஏழைய மக்களின் விமோசனத்திற்கு வழிதேட நான் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் விவேகானந்தர்.
கப்பலில் சிகாகோ நோக்கிச் சென்ற போது ஹாங்காங் துறைமுகத்தில் பார்த்த நிகழ்வொன்றை விவேகானந்தர் பதிவு செய்துள்ளார்.
கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி கடலுக்குள் நிறுத்தப்பட்டவுடன் பயணிகளைக் கரைக்கு அழைத்து வர நூற்றுக்கணக்கான படகுகள் கரையிலிருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்று கப்பலைச் சுற்றிலும் நிறுத்தப்படுகின்றன. அந்தப் படகுகளிலேயே ஏழைப் படகோட்டிகளின் குடும்பங்கள் வசிக்கின்றன. படகோட்டியின் மனைவி சுக்கான்களில் ஒன்றைக் கையாலும் மற்றொன்றைக் காலாலும் இயக்குகின்றார். இத்தகைய சீனப் பெண் தொழிலாளர்களில் நூற்றுக்குத் தொன்னூறு பேருடைய முதுகில் ஒரு கைக்குழந்தை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். சீனக் குழந்தைகளான அவர்களின் கைகளையும் கால்களையும் சுதந்திரமாக அசையுமாறு விட்டுவிட்டு அக்குழந்தையை அப்பெண்கள் தங்கள் முதுகுகளில் கட்டியிருப்பார்கள். படகுகளின் துடுப்புக்களை இயக்கும் போதும், ஒரு படகை விட்டு மற்றொன்றுக்குத் தாவும் போதும் அப்பெண்களின் முதுகிலுள்ள குழந்தைகள் அப்படியே இருக்கும். குழந்தைகள் பெண்களின் முதுகிலும், கழுத்திலும் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க விநோதமாக இருக்கும். "கரணம் தப்பினால் மரணம்' என்பதைப் போல இத்தனை சிரத்தையெடுத்து தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக சீனத் தொழிலாளர் குடும்பம் உழைக்கிறது.
இதை அப்படியே தனது நினைவுக் குறிப்பில் தத்ரூபமாக வர்ணித்துள்ள விவேகானந்தர், "இந்த சீனக்குழந்தை ஒரு வேதாந்தி. இந்தியக்குழந்தை தவழக் கற்பதற்கு முன்பே சீனக் குழந்தைகள் வேலை செய்யப் பழகுகிறது. அவசியம் ஏற்பட்டால் இதைச் செய்யத்தான் வேண்டும் என்ற தத்துவத்தை இந்தக் குழந்தை வெகு நன்றாக அறிந்திருக்கிறது' என்ற தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார் விவேகானந்தர்.
இப்படி பல்வேறு நிகழ்வுகளில் விவேகானந்தரது பார்வை எந்தக் கோணத்தில் இருந்துள்ளது என்பதை அறிந்து கொண்டால் விடுதலைப் போராட்டம் குறித்த அவரது கண்ணோட்டத்தை எளிதாக விளங்கிக் கொள்ள இயலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...